
கலாமைக் கொண்டாடுவோம் -06
இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு
விஞ்ஞானி-கல்வியாளர் சீனிவாசன் சுந்தர்ராஜனுடன்
இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல் – 2
பிரமோஸ் ஏவுகணைத் திட்டத்தில் கலாம் உங்களுக்கு ஒரு பணியைக் கொடுத்தார். அது பற்றி?
இந்திய-ரஷ்ய கூட்டுத்திட்டமான பிரமோஸ் ஏவுகணைத் திட்டத்தில் உலோகங்களை உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கும் பணியை அப்துல் கலாம் எனக்களித்தார். ஏறக்குறைய 500 – உலோகங்கள், உலோகக் கலவைகள், கூட்டுக்கலவைகள் (Composites) ஆகியவற்றை நானும் என் குழுவினரும் உருவாக்கினோம். நம் நாட்டுத் தொழில்நுட்பத்தில் நாம் உருவாக்கிய இந்த உலோகங்கள் தரமிக்கதாகவும், விலை குறைவாகவும் இருந்ததால் ரஷ்ய நாடும் அவற்றை விலை கொடுத்து வாங்கிக் கொண்டது.
இந்தியா 2020 திட்டத்தில் கலாமுடன் பங்காற்றிய அனுபவம் பற்றி?
‘இலட்சிய இந்தியா 2020’ திட்டத்தில் உலோகத் தொழில்நுட்பம் தொடர்பான திட்டங்களை நான் உருவாக்கினேன். பாதுகாப்பு ஆராய்ச்சிப் பின்புலத்தில், நான் சிறப்பாக உருவாக்கிய திட்டத்தைக் கலாமுடன் பகிர்ந்து கொண்டேன். அவர் என்னைப் பாராட்டுவார் என எதிர்பார்த்தேன். கலாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டார்.
‘‘நாட்டின் முக்கியத் துறைகளான விவசாயம், போக்குவரத்து, எண்ணெய் சுத்திகரிப்பு உள்ளிட்ட பல துறைகளில் புதிய உலோகத் தொழில் நுட்பங்கள் தேவை. உங்களின் திட்டம் இவைகளில் எவற்றையெல்லாம் பூர்த்தி செய்கிறது என்பதை வட்ட விளக்கப்படம் (Pie Chart) வரைந்து ஒப்பிடுங்கள்’’ என்றார். நாட்டின் மொத்த தேவையில் ஏறக்குறைய 25% தேவையை மட்டுமே நான் கணக்கில் கொண்டிருந்தேன் என்பது விளங்கியது. கலாமின் நாடு தழுவிய தொலைநோக்குப் பார்வை உடனடியாக எனக்குப் புரிந்தது. அதற்கேற்ப எனது திட்டத்தை மாற்றி உருவாக்கினேன்.
நள்ளிரவில் அப்துல் கலாமை ஒரு இளம் விஞ்ஞானி தொலைபேசியில் அழைத்து ஒரு கேள்வி கேட்டார். அதனால் கலாம் அடைந்த மாற்றம் பற்றி…
ஆம். ஐ.ஐ.டியில் படித்த ஒரு இளம் டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானி அவர். அவருக்குச் சில சமயங்களில் மனதில் சில காட்சிகள் தெரியும். இதனால் மனதளவில் சிறு பாதிப்பு அவருக்கு இருந்தது. ஒரு நாள் நள்ளிரவில் அவர் ஆய்வுக்கூட வாயிலுக்குச் சென்றார். கலாம் வழக்கமாக நள்ளிரவைத் தாண்டியும் ஆய்வுக்கூடத்தில் இருப்பார். இந்த விஞ்ஞானி தொலைபேசியில் கலாமிடம் தொடர்பு கொண்டு, ‘ நீங்கள் செய்கிற இந்த ஆராய்ச்சி அழிவுக்கானது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்’ என்றார்.
இந்தக் கேள்வி கலாமை இரவெல்லாம் உறங்க விடவில்லை. காலையில் அந்த இளம் விஞ்ஞானியைத் தனது அறைக்கு அழைத்தார். நானும் அப்போது அறையில் இருந்தேன். வந்த இளம் விஞ்ஞானி திடீரெனக் கலாமின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். ஆனால் அந்தக் கேள்வியின் விளைவால் மக்கள் சார்ந்த தொழில்நுட்ப முன்னெடுப்புகளை முழுமூச்சில் துவக்கினார் கலாம். அதன் விளைவாக செயற்கை நடைக்கருவி, இதய வலைகுழாய் உள்ளிட்ட பல மக்கள் சார்ந்த படைப்புகள் உருவாயின.