
என் பார்வையில் பிரிட்டன் 06
– பேராசிரியர் வெ. இன்சுவை
உலகில் எத்தனையோ புகழ்பெற்ற நகரங்கள் இருந்தாலும், இலண்டன் நகரைப் போல பிரசித்தி பெற்றது எதுவுமில்லை. ‘‘இவர் பெரிய இலண்டன் ரிட்டர்ன் என்று நினைப்பு’’ என்போம்; ‘‘இலண்டன் துரை இவர்னு நினைப்பு’’ என்று கேலி செய்வோம். அத்தகைய இலண்டன் மாநகரைப் பார்ப்பேன் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. அதுவும் ஆங்கில இலக்கியம் படித்த எனக்கு அது ஓர் ஏக்கமாகவே இருந்தது. ‘‘கிட்டாதாயின் வெட்டென மற’’ என்று படித்து இருந்ததால் அந்த ஆசை மறந்தே போனது.
இலண்டனின் சிறப்பு என்ன?
இலண்டன் பழமையும், புதுமையும் கைகோர்த்த அதிசயம். இலண்டன் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான வரலாறு கொண்டது. ரோமானியர்களால் ‘இலண்டினியம்’ (Londinium) என்று அழைக்கப்பட்டது. இன்று உலகின் மிக முக்கியமான கலாச்சார மற்றும் நிதி மையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
இலண்டன் கோபுரம், வெஸ்ட் மின்ஸ்டர் அரண்மனை, கடல்சார் கிரீன்விச் மற்றும் கியூ கார்டன்ஸ் ஆகிய நான்கு இடங்கள் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. பிக்பென் இலண்டனின் அடையாளம். அது அங்குள்ள பெரிய மணியின் பெயர். கோபுரத்தின் பெயர் ‘எலிசபெத் டவர்’. இப்படி நான் பார்க்க ஆசைப்பட்ட இடங்களின் பட்டியல் ஏராளம்.
கொரோனா போது, அதாவது 2020 – இல் இங்கிலாந்து சென்ற போது, என் அறுவை சிகிச்சை குறித்து எழுதியிருந்தேன். 42 – நாட்கள் படுக்கையில் கழித்துவிட்டு, இந்தியா திரும்பும்முன் இலண்டனையாவது நான் பார்த்தே ஆகவேண்டும் என்று மகன் ஆசைப்பட்டான்.
என்னால் நடக்க முடியாது என்று நான் மறுத்த போது, சக்கர நாற்காலி ஏற்பாடு செய்து அழைத்துச் சென்றான். லாக் டவுன் என்பதால் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் ஒரு சில இடங்களை மட்டுமே சக்கர நாற்காலியில் சென்று பார்த்தேன். மீண்டும் வருவேன் என்று தெரியாததால், மிக்க மனவருத்தம் ஏற்பட்டது. ‘‘ஆறு நிறையத் தண்ணீர் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்’’ என்பதுபோல, லாக் டவுன் மற்றும் அறுவை சிகிச்சை காரணமாக அந்தப் பயணம் பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூ வைத்த கதையாகிவிட்டது.
மீண்டும் நான் 2023 – ஆம் ஆண்டு சென்றதுதான் உங்களுக்குத் தெரியுமே!
அன்று வெள்ளிக்கிழமை. மருமகள் அலுவல் காரணமாக காலையிலேயே இலண்டன் சென்றுவிட்டாள். நான், என் கணவர் மற்றும் மகன் மட்டுமே இருந்தோம். இரவுக்கு கிச்சடி செய்யலாம். அதற்கு கேரட், பீன்ஸ், வெங்காயம் என அனைத்தையும் மாலையே நறுக்கி வைத்துவிடலாம் என்று எடுத்து வைத்தேன். மகன் வந்து, ‘‘அம்மா, எதுவும் ெசய்ய வேண்டாம்.
நாம் இப்போ இலண்டன் போறோம்’’ என்றான். ‘‘இப்போதா?’’ என்று கேட்டேன். ‘‘ஆம் அம்மா அங்கு தங்குவதற்கு ஒரு வீட்டை ஏற்பாடு செய்துவிட்டேன். படுக்கை அறை மட்டும் தனியாக இருக்கும். இங்கு தங்குபவர்கள் அனைவருக்கும் பொதுவான சமையலறை இருக்கும். இரண்டு நாட்களும் நாம் அங்கே சமைத்துக் கொள்ளலாம்’’ என்று கூறிவிட்டு, சமைக்கத் தேவையான பொருள்களை எடுத்துப் போக வேண்டும் என்று சொன்ன போது, என்னென்ன எடுத்துப் போக வேண்டும் என்று தெரியவில்லை. இதுகாறும் பழக்கமில்லை.
ஆனால் மகனோ பத்ேத நிமிடங்களில் அத்தனையையும் பேக் (Pack) செய்த அதிசயத்தைக் கண்டேன். ரைஸ் குக்கர், அரிசி, எலுமிச்சம் பழம், தாளிப்பு பொருட்கள், உப்பு, ரொட்டி, ஆயத்த சப்பாத்தி, இன்ஸ்டன்ட் கொத்துமல்லி சட்னி, ஊறுகாய், டப்பாக்கள், தட்டுகள் என அனைத்தும் ரெடி. எனக்கு வியப்பாக இருந்தது. அவர்களுக்குப் பழகிப் போயிருந்தது. ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்கும் இப்படி எடுத்துப்போய் சமாளித்த அனுபவம். ‘‘அம்மா, சைவ உணவைத் தேடி அலைய முடியாது. ஆகவே எல்லா இடங்களுக்கும் இப்படித்தான் போவோம்’’ என்று மகன் கூறியபோது புரிந்தது.