
நம்பிக்கையே வாழ்க்கை!
‘அமுதா’B.பாலகிருஷ்ணன்
‘’To be liked and appreciated is a deep seated human desire’’ என்கிறார் நார்மன் வின்சென்ட் பீல்.
பிறர் தன்னை விரும்ப வேண்டும், பாராட்ட வேண்டும் என்பதே மனித இனத்தின் அடி மனது ஆசை.
அன்றாட வாழ்வில் எத்தனையோ தடவை, எத்தனையோ வழிகளில், எத்தனையோ நபர்களை நாம் பாராட்ட முடியும்.
பாராட்டுகிறோமா….? இல்லை…!
ஏன்…?
அவசரம், ஆணவம், அறியாமை, அலட்சியம்… இன்னும் எத்தனையோ…
காலையில் எழுந்து வெளியே வருகிறோம்.
அதற்கு முன்னமே எழுந்து வாசல் பெருக்கி, கோலம் போட்டு, பால் வாங்கி, காய்ச்சி, காபி போட்டு தருகின்ற வேலைக்காரியாகட்டும்,
அவசர அவசரமாக அரக்கப்பரக்க ஓடியாடி டிபன் பண்ணி, பிள்ளைகளைத் தயார் பண்ணி, பள்ளிக்கு அனுப்பி, கணவனுக்கும் வேண்டியதைக் கவனித்து அலுவலகத்தக்கு அனுப்பும் மனைவியாகட்டும்,
நகரத்து டிராபிக் நெரிசலிலும், மோசமான ரோடுகளிலும் கூட, பக்குவமாகக் காரை ஓட்டி அலுவலகத்தில் கொண்டுவிடும் டிரைவராகட்டும்,
இன்னும் சின்னச் சின்ன விஷயங்களையும் நமக்காகச் செய்யும் யாரையாவது நாம் பாராட்டியிருக்கிறோமா…?
என்ன இது…?
தினம் தினம் நடக்கிற சமாச்சாரம்… இதெல்லாம் போய் பாராட்டிகிட்டு இருக்க முடியுமா…
முடியணும்.
முடிந்தால்… உங்களுக்குச் சேவை செய்பவர்கள், உங்களுக்காகவே சேவை செய்பவர்கள் ஆகிவிடுவார்கள்.
இதுவரை இல்லையென்றாலும்…
இன்றிலிருந்தாவது முயன்று பாருங்களேன்;
உங்களைச் சுற்றி ஒரு சொர்க்கத்தையே உருவாக்கிய உணர்வும் மகிழ்வும் உண்டாவது நிச்சயம்.
சொர்க்கம் என்பது என்ன…? மேலோகத்திலா இருக்கிறது…? இல்லை.
சொர்க்கம், நரகம் மேலோகத்திலும் இல்லை, கீழோகத்திலும் இல்லை.
பின் எங்கிருக்கிறது…?
நம்மிடம்தான்… உங்களிடம்தான்.
வாழும் வாழ்க்கையை இனிமையாக்கிப் பாருங்கள், சொர்க்கம் பக்கத்தில்.
சொர்க்கத்தை எப்படி உருவாக்குவது?
சந்தோஷமும் மகிழ்ச்சியும் உங்கள் மனதில் மட்டுமல்ல, உங்களைச் சுற்றியும் பரவச் செய்யுங்கள்.
உங்களைச் சுற்றியுள்ளவர்களை உற்சாகப்படுத்துங்கள்; பாராட்டுங்கள்.
நேரில், தொலைபேசியில், கடிதம் மூலமாக, தெரிந்தவர்கள் மூலமாக… எந்த வழியிலேனும் பாராட்டிவிடுங்கள்.
பாராட்டுக்கு மயங்காதவர்கள் பாரினில் இல்லை.
எரிச்சலில் எரிந்து விழாதீர்கள். அவர்களுக்கு வெறுப்பும் விரக்தியும் தான் வரும். வேலை தடைபடும், நிறுவனத்தின் வளர்ச்சியும் தடைபடும்.
விரட்டி வேலை வாங்குவதைவிட, பாராட்டி வேலை வாங்குங்கள் – பல மடங்கு வேலை நடக்கும்.
ஒன்றுமில்லை, ஒரு கல்யாண வீட்டிற்குப் போகிறீர்கள்; சாப்பாட்டு வேளை. பரிமாறுபவரைப் பார்த்து ‘‘உங்க மாஸ்டர் எங்கே இருக்கார்… நான் கொஞ்சம் பார்த்துப் பேசணும்’’-னு சொல்லுங்க. அவர் போய் சொல்லுவார்.
என்னமோ ஏதோன்னு நினைச்சுக்கிட்டு மாஸ்டரும் வருவார்.