வழிகாட்டும் ஆளுமை – 20

திரு. நந்தகுமார் IRS

பொதுவாக நமக்குப் பல ஆசைகள் இருக்கும். நம் வீட்டிலோ அல்லது நண்பர்களிடமோ அந்த ஆசையைப் பற்றி நாம் கூறும் போது, ‘‘இதற்கெல்லாம் நீ ஆசைப்படலாமா?  உனக்கு என்ன தகுதி இருக்கிறது இதற்கு நீ ஆசைப்படுவதற்கு!’’ என்ற எதிர்வினைகள்  நிச்சயமாக வரும். இதுபோன்ற கேள்விகளால் உண்மையிலேயே நாம் இதற்கு தகுதி இல்லாதவன் தான் என்று கூடத் தோன்றலாம். நாம் ஏன்? இதை ஆசைப்படுகிறோம் என்றும் சிந்திக்கலாம்.

ஒரு ஊரில் ஒரு தொழிலாளி இருந்தார். அவரின் வேலை, கட்டைகளை, விறகுகளை எரியூட்டிய பிறகு, அதனை கரியாக்கும் வேலையை செய்து வந்தார். காட்டிற்கு செல்வார் மரங்களை வெட்டி விறகுகளை, கட்டைகளை எல்லாம் எடுத்து வந்து கரியாக்கி அதனை அனைவருக்கும் விற்கும் வேலை செய்து வந்தார். அதுதான் அவருடைய தொழிலாக இருந்து வந்தது. இது மிகவும் சிறிய தொழில் அல்லவா? எனவே, அவருக்கு  ஒரு ஆசை. நாம் பெரிய பணக்காரனாக வேண்டும் என்று. தினமும் கடவுளிடம் வேண்டிக் கொள்வார்.

 சினிமாவில்  வருவது போல, ஒரு நாள் அந்த தொழிலாளி முன் கடவுள் தோன்றினார். “பக்தா உனக்கு என்ன வரம் வேண்டும்” என்று கேட்டார். உடனே அந்தத் தொழிலாளியோ “நான் பெரிய பணக்காரனாக வேண்டும்” என்றாா். கடவுளும் “இதோ வைத்துக் கொள்” என்று அவர் விறகு வெட்டும் அந்த  காட்டில் உள்ள அனைத்து மரங்களையும் சந்தன மரங்களாக மாற்றி விட்டார். ‘‘நீ கேட்டது போலவே அனைத்து மரங்களையும் சந்தன மரங்களாக மாற்றிவிட்டேன். இதனை வைத்து நீ பணக்காரனாகிவிடு’’ என்று சென்று விட்டார்.

மீண்டும் ஓராண்டு கழித்து அந்தப் பக்தனை காண இறைவன் வந்தார். வந்து பார்க்கும் போது, தான் எந்த நிலையில் அவரைச் சந்தித்தாரோ அதே நிலையில் தான் இப்போதும் இருக்கிறார் அந்த தொழிலாளி. 

‘‘ஆசைப்படுகிறான் என்று அந்த வாய்ப்பை அவனுக்கு அளித்தேன் ஆனால் அவன் அதே நிலையில் தான் நீடித்துக் கொண்டிருக்கிறான். ஓராண்டு கழித்தும் இந்த பக்தன் இதே நிலைமையில் இருக்கிறானே’’ என்று கடவுள் ஆச்சரியத்தோடு அவன் என்ன செய்கிறான் என்று கவனித்துக் கொண்டிருந்தார். அந்த தொழிலாளி முன்பு செய்து கொண்டிருந்த அதே கரியாக்கும் பணியைத் தான் இப்போதும் செய்து  கொண்டிருந்தான். சந்தன மரங்களை வெட்டி கரியாக்கிக் கொண்டிருந்தான். கடவுள் தலையிலே அடித்துக் கொண்டு சிரித்தார்.

ஆசைப்படுகிறவனுக்கு இது போன்ற வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது. ஆனால், அந்த வாய்ப்பை எவ்வாறு நாம் பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம். அந்த தொழிலாளி ஆசைப்பட்டான் என்பதற்காக கடவுள் ஒரு வாய்ப்பை வழங்கினார். ஆனால், அந்த வாய்ப்பை அவன் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இன்னும் அந்த நிலையில் தான் இருந்தான்.

இதே போல் தான் நாமும் பலவற்றிற்கு ஆசைப்படுகிறோம். நாம் ஆசைப்படுகிற அனைத்திற்கும் கடவுள் வாய்ப்பு அளித்துக் கொண்டே இருக்கிறார். அந்த வாய்ப்பை நாம் எவ்வாறு பயன்படுத்தி வெற்றி பெறுகிறோம் என்பதே முக்கியம்.

ஆனால், நாம் எதற்கெல்லாம் ஆசைப்படுகிறோம். ஏன்? என்ன? எதற்கு? எப்படி? எதனால்? என்று தேவையில்லாத விஷயத்திற்கு எல்லாம் ஆசைப்படுகிறோம். அல்லது அளவுக்கு அதிகமாக ஆசைப்படுகிறோம். ஒன்று நம் ஆசைப்பட்டதற்கான வாய்ப்பு அமையும் போது அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது. அல்லது, நம் ஆசைப்பட்ட அந்த விஷயத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வது.

அனைத்திற்க்கும் ஆசைப்படலாம். ஆனால் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி முன்னேற வேண்டும்.

நான் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றால் அதற்காக தயார் படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு பிசினஸ்மேன் ஆக வேண்டும் என்றால் அதற்கு ஏற்றார் போல் நம்மை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 வெற்றி பெற்ற பெரிய பெரிய மாமனிதர்கள் எல்லாம் ஆசைப்பட்டதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதற்கான வாய்ப்பைக் களம் கண்டு சிறப்பான முறையில் பயன்படுத்தி வெற்றி கண்டார்கள். வாய்ப்புக் கிடைக்கும்போது அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லது அதற்கான வாய்ப்பை நாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு நாம் நம்மை பயன்படுத்திப் பயணிக்கும் போது அது சின்ன சின்ன ஆசைகளாக இருந்தாலும் சரி, பெரிய கனவுகளாக இருந்தாலும் சரி உங்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறி வெற்றி பெற்ற மனிதர்களாக ஜொலிப்பீர்கள்.  வாழ்த்துகள்!!! =