சாதனையாளர்கள் பக்கம்

மதுரை.ஆர்.கணேசன்
அன்போடு தட்டிக் கொடுக்கின்ற பெற்றோர்களும், அறிவுப்பூர்வமாக கற்றுக் கொடுக்கின்ற ஆசிரியர்களும் இணைந்து குழந்தைகள், மாணவர்களின் திறமைகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துவது மூலம் அவர்களது எதிர்காலம் பிரகாசிக்கின்றது..!
உலகத்திலேயே இளைய தலைமுறைகள் அதிகமாக வாழுகின்ற நம் நாட்டில் புதிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் மாணவர்களில் தமிழகத்தை சார்ந்த மாணவர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காது..!
அந்த வகையில் மதுரை மாநகராட்சி காக்கைப்பாடினியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி என்.எம். ரிஷிதா தன்னுடைய ஆக்கப்பூர்வமான கண்டுபிடிப்புக்களால் “..இஸ்ரோவின்..” கவனத்தை ஈர்த்து பாராட்டும் பெற்றிருக்கிறார்..!!!
ரிஷிதாவின் வீடு முழுவதும் கண்டு பிடிப்புக்களுக்கான பொருட்கள் பரவியிருக்கிறது, கண்டுபிடிப்புக்கு கிடைத்த ஏராளமான விருதுகள், பரிசுக்கோப்பைகள், ஷீல்டுகள் அதற்கான சான்றிதழ்கள் நிறைந்திருக்கிறது.
அத்துடன் ‘போட்டிக்கு ரெடியா?’ என்ற தலைப்பில் மாணவர் கதைப் புத்தகம் ஒன்றை கிருத்திகா எனும் மாணவியுடன் இணைந்து எழுதியுள்ளார்.
அம்மா திருமதி.மேகலா நந்தகுமார்,
“…எங்க பொண்ணு ரிஷிதா மூன்று வயதிலிருந்து கிரியேட்டிவாக யோசிப்பாள், பொம்மைகளை வைத்து விளையாடும் போது கூட அந்தப் பொம்மை எப்படித் தயாரிக்கப்பட்டிருக்கிறது? எப்படி நகருது? எப்படி வேலை செய்யுது? என்று அப்பாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுவாள், அதே சமயம் பொம்மைகளை உடைக்க மாட்டாள்.
அவளுடைய சின்ன வயதில் வாங்கிக் கொடுத்த விளையாட்டுப் பொருட்கள் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறாள், அதை அவளது தங்கைகள் இப்போது பயன்படுத்துகிறார்கள்.
நாங்கள் சொல்வதைக் கேட்டுக் கொள்வாள், ஒரு முறை சொல்வதைக் கேட்டுக் கொண்டால் நல்லா ஞாபகம் வைத்துக் கொள்வாள், இதற்கெல்லாம் காரணம் சின்ன வயதில் எதையும் ஆராய்ச்சிக் கோணத்தில் பார்க்கின்ற எண்ணம் இருந்தது என்பதே.
அத்துடன் அவுங்க அப்பா நிறையத் தகவல்கள் சொல்லிக் கொடுப்பாங்க, ஆங்கில அறிவியல் சம்பந்தமான படங்களுக்கும் அறிவியல் கண் காட்சிக்கும் கூட்டிட்டு போவாங்க.,
அவள் கேட்கும் புத்தகங்கள் வாங்கித் தருவார்கள், அந்தப் புத்தகத்தை எழுதியது யார்? எதைப் பற்றி புத்தகம் சொல்லுகிறது? என்பதைத் தெரிந்து கொண்டு எங்களுக்கும் சொல்லுவாள்.
அதேபோல டிஸ்னி ரொம்ப பிடிக்கும், விரும்பி பார்ப்பாள், அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பற்றிச் சொல்லுவா, இதெல்லாமே தான் அவளுடைய புதுசு புதுசா கண்டுபிடிப்புக்களுக்கு உதவுகிறது என நினைக்கின்றோம்.
“..இஸ்ரோ விஞ்ஞானி ஆவது தான் என் லட்சியம்..” எனக்கூறும் என்.எம்.ரிஷிதா இனி நம்மோடு..,
“..என்னோட சின்ன வயதிலிருந்து எதையும் ஆராய்ச்சி நோக்கத்தில் பார்ப்பேன், அறிவியல் சம்பந்தமான படங்கள், விஷயங்கள், தகவல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும், அதற்கு என்னோட அப்பா அம்மா உறுதுணையாக இருக்கிறார்கள்.
கொரொனோ காலத்தில் “..ஸ்கில் ஸ்கூல் எனும் ஆன்லைன் பயிற்சியாளர் பாலகிருஷ்ணன் மூலமாக கோடிங்..” கற்றுக் கொண்டேன்.
எங்கள் பள்ளியில் “..சில்ரன்ஸ் பார்லிமென்ட்டில் நான் இரண்டாவது முறையாக அனைத்து வகுப்பு சார்பாக நாற்பது மாணவர்கள் ஓட்டு போட்டு பிரதமராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன்..” அதன் மூலமாக பல்வேறு நடவடிக்கைகளால் நிறைய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
இந்தக் கண்டுபிடிப்புக்கள் பற்றிய ஐடியா எனக்கு எப்படித் தோன்றியது என்றால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒரு முறை விமான விபத்து நடைபெற்று அதில் இருநூறு பேர் இறந்து போனார்கள், அது என் மனதை மிகவும் பாதித்தது.
ஒரு விமானப் பயணம் என்பது பாதுகாப்பான பயணம் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், அதிலும் நூற்றுக்கணக்கானோர் பயணிக்கும் போது இன்னும் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல வேண்டும் என்று யோசித்து இந்த புராஜெக்ட்ஸ் பண்ணியிருக்கிறேன்.