கேட்டலும் அறிதலும் – 05

திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்
வணக்கம் ஐயா..
வணக்கம். கடந்த வகுப்பில் நான் சொல்லியது போல நீர்நிலைகளின் பெயரைப் பலர் எழுதிக் கொண்டு வந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
ஐயா, நீங்களும் அது பற்றிச் சொல்லுங்களேன்
தமிழர்கள் நீரைப் போற்றியவர்கள். நம் முன்னோர்கள் நாற்பதுக்கும் அதிகமான நீர் ஆதாரங்களை உருவாக்கிப் பராமரித்தனர். கிணறு தோண்டுதல் உள்ளிட்ட நீர் கட்டுமானங்களை விளக்கும் ‘மயமதம்’ எனும் ஒரு பொறியியல் நூல் நம்மிடம் இருந்ததாகக் கூறப்படுகிறது. மற்றொரு நூல், ‘ஞானவல்லியம்’. இந்நூலானது கிணறு முதலியன வெட்டுவதற்குரிய நிலத்தின் இயல்பினைக் கூறும் நூலாகும். பிறிதொருநூல் ‘கூம நூல்’. இந்நூலானது நீர் நிலையினை அறியும் நூலாகும்.
மேற்பரப்பு நீருக்கு ‘பரப்பு நீர்’ என்றும் நிலத்திலுள்ள நீருக்கு ‘கரப்பு நீர்’ என்றும் துல்லியமான சொற்களைத் தந்துள்ளது. ‘நீர்த்தாக்கு’ என்றால் நீர் அதிகமாய்த் தேங்கி நிற்கும் இடம் எனப் பொருட்படும். நீர்நிற்கும் ஒரு குழிபோன்ற இடம் ‘நீர்த்தாழ்வு’ அல்லது ‘நீர்நிலை’ என்று அழைக்கப்பட்டது. நிலத்துக்குள் பாயும் நீரோட்டத்துக்கு “நீர்நரம்பு” என்று பெயர். ஓரிடத்தில் இருந்து மற்றோரிடத்துக்கு நீரைப்பாச்சுதலை “நீர் மாறுதல்” என்பார்கள். “மலங்கல்” என்றால் கலங்கிய நீர் உள்ள நீர்நிலை. சரி நீர் நிலைகள் தொடர்பாக ஒரு தனி வகுப்பில் நான் விரிவாகச் சொல்கிறேன். நீங்கள் எழுதிக் கொண்டு வந்ததில் சிலரது கையெழுத்து சிறப்பாக இருந்தது. அதனை மேம்படுத்தி பிரகிருதி மல்லா போலப் பெயரெடுக்கவேண்டும்.
அது யார் ஐயா பிரகிருதி மல்லா?
உலகின் மிக அழகான கையெழுத்து என்ற பட்டத்தைப் பெற்ற நேபாளத்தைச் சேர்ந்த சிறுமி தான் பிரகிருதி மல்லா. அழகான கையெழுத்துக்காக நேபாள ராணுவத்தால் பிரகிருதி மல்லா கௌரவிக்கப்பட்டார். பிரகிருதி மல்லாவின் கையெழுத்து உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
சதீஷ், உன்னைப் பற்றிப் பேரன்ட்ஸ் மீட்டிங்கில் உங்க அப்பா ஒரு குற்றச்சாட்டு சொன்னார். நீ புகை பிடிக்கிறியாமே?
அப்படியெல்லாம் இல்லீங்க ஐயா.
ம்.. கடையில எளிதாக, எல்லோருக்கும் கிடைப்பதும் ஒரு காரணம். மாலத்தீவில் சிறப்புமிக்க நடவடிக்கையாக, 2007 – க்குப் பிறகு பிறந்தவர்களுக்குப் புகையிலை பொருட்களை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகில் முதல் முறையாக, ஒரு நாடு தனது வருங்காலச் சந்ததியினர் சிகரெட் அல்லது புகையிலையால் பாதிக்கப்படாது என்கிற ரீதியில் இந்தத் தடையினைக் கொண்டுவந்துள்ளது. கடந்தமாதம் முதல் (நவம்பர்) இது அமலுக்கு வந்துள்ளது.
இந்தியாவில் புகையிலைப் பொருட்களால் ஆண்டுதோறும் சுமார் 13.5 லட்சம் பேர் செத்துப் போகிறார்கள் என நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தரவுகள் கூறுகின்றன.
ஐயா, சென்னையில் “செத்த காலேஜ்” இருக்குதுன்னு எங்க அப்பா சொன்னாரு. அப்படின்னா என்னங்க ஐயா.
சென்னையின் எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தைத் ஒரு காலத்தில், மக்கள் “செத்த காலேஜ்” என்று அழைத்தனர். இப்பெயர் சற்று விசித்திரமாகத் தோன்றினாலும், அதன் பின்னால் சென்னையின் கல்வி மற்றும் உயிரியல் ஆய்வுகளின் நீண்ட வரலாறு பதிந்திருக்கிறது.
தமிழ்நாட்டின் கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட முக்கியமான இடமாகத் திகழ்கிறது. 1851 – ஆம் ஆண்டு வெறும் ஆயிரம் பொருட்களுடன் தொடங்கிய இந்த அருங்காட்சியகம், பின்னர் ஆயிரக்கணக்கான வரலாற்றுப் பொருட்கள், சிற்பங்கள், ஓவியங்கள், மற்றும் அறிவியல் மாதிரிகளுடன் விரிவடைந்தது.
எங்களை ஒருநாள் அங்குச் சுற்றுலா கூட்டிட்டுப் போறீங்களா?
போகலாம். ஆனால், அது வெறும் சுற்றுலா இடமல்ல; அது ஒரு கல்வி அனுபவம். உயிரியல் ஆர்வத்தை விதைத்த இடம் அது. 1960 – களுக்குப் பிறகு அருங்காட்சியகத்தின் காட்சியறைகள் புதுப்பிக்கப்பட்டன. புதிய பிரிவுகள் உருவாக்கப்பட்டதால், “செத்த காலேஜ்” என்ற பகுதி ஒரு தனிப்பிரிவாக இருந்து, தற்போது “Natural Science Gallery” என அழைக்கப்படுகிறது.
ஐயா.. குளிர் அதிகமாக இருக்கிறது. வழக்கமானப் பணிக்கு இது இடையூறாக இருக்கிறது.
அதை எதிர்கொள்ள என்ன செய்யலாம்?
இதுபோன்ற சூழ்நிலையில், வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது நன்மை பயக்கும். அதிகாலையில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது நச்சுகளை வெளியேற்றி செரிமானத்தை மேம்படுத்துகிறது. கூடுதலாக, குளிரில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள உங்கள் கைகள் மற்றும் கால்களில் கையுறைகள் மற்றும் சாக்ஸ் அணியுங்கள். காலையிலோ அல்லது மாலையிலோ லேசான ஜாகிங், விறுவிறுப்பான நடைபயிற்சி அல்லது யோகா செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். குளிர் மற்றும் மழையின் காரணமாக இன்றைக்குப் பரவலாக எல்லா இடங்களிலும் காய்ச்சல் பாதிப்பு உள்ளது.
ஆமாங்க ஐயா.. எங்க தாத்தாவுக்கும் முடியவில்லை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போனோம் கலர் கலராய் மாத்திரை கொடுத்தாங்க..