கலாமைக் கொண்டாடுவோம் -05

இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு
பிரமோஸ் விஞ்ஞானி சிவதாணுபிள்ளையுடன் ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல் தொடர்கிறது..
ப்ரித்வி, அக்னி, பிரமோஸ் உள்ளிட்ட ஏவுகணைகளை உருவாக்கி ஏவுகணை நாயகராக பொதுவெளியில் அறியப்படுகிறார் அப்துல் கலாம். ஏவுகணைகள் உயிர் கேட்கும் ஆயுதங்களாகப் போர்க்களங்களில் பயன்படுத்தப்பட்டாலும், ராணுவத் தொழில்நுட்பங்களை உயிர் காக்கும் தொழில்நுட்பங்களாக மடைமாற்றியதிலும் கலாம் பெரும்பங்காற்றினார். அதைப்பற்றி?
தொழில்நுட்பத்தை ஆக்கம், அழிவு என இரண்டுக்கும் பயன்படுத்தலாம். போருக்காக உருவாக்கப்படுகிற ஏவுகணைகள், போரில்லாச் சூழலில் பயன்படுத்தப் பெறாமல் போகலாம். ஆனால் ஏவுகணைத் தொழில்நுட்பங்களை மக்களின் நல்வாழ்விற்கு எப்படிப் பயன்படுத்துவது எனச் சிந்தித்தவர் கலாம். எடைகுறைந்த அதே சமயம் வலிமையான கூட்டுக்கலவையால் (Composite) செய்யப்படும் பாகங்கள் ஏவுகணைகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு முறை இந்தத் தொழிற்கூடத்தைப் பார்வையிட ஐதராபாத், நிசாம் மருத்துவ அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் வந்திருந்தார்கள். எடைகுறைந்த ஆனால் உறுதியான கார்பன் கார்பன் கூட்டுக்கலவையில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் நடைக்கருவிகளை உருவாக்கினால் என்ன? என்ற சிந்தனை உதயமானது.
அப்துல் கலாம் உடனடியாக இதற்குச் செயலூக்கம் அளித்தார். விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் இணைந்து உருவாக்கியது தான் இலகு நடை கருவி (Light Weight Caliper – Floor Reaction Orthosis). முதல் கட்டமாக போலியோவால் பாதிக்கப்பட்ட 1000 பிள்ளைகளுக்கு இந்தக் கருவி பொருத்தப்பட்டது. இந்தியப் பயனாளிகளின் அளவுகளைக் கருத்தில் கொண்டு 7 வெவ்வேறு அளவுகளில் வரையறுக்கப்பட்டு, பொறியியல் முறைமைகளின் படி நடைக் கருவிகள் உற்பத்தி செய்யப்பட்டன. ஏறக்குறைய 55000 பயனாளிகளுக்கு இந்த நடைக்கருவிகள் பொருத்தப்பட்டன. இந்த முகாம்களில் அப்துல் கலாம் தவறாமல் பங்கேற்றார்.
கலாம் குடியரசுத்தலைவரான பிறகு, ஒரு நிகழ்ச்சியில் ஒரு பள்ளிக்கூடச் சிறுமி அவரிடம் ஒரு கேள்வி கேட்டார். நீங்கள் ஏவூர்தி உருவாக்கினீர்கள், ஏவுகணை வடிவமைத்தீர்கள், அணுசக்தி ஆராய்ச்சியில் ஈடுபட்டீர்கள், குடியரசுத் தலைவரானீர்கள். எது உங்களுக்கு அதிக மகிழ்வை கொடுத்தது? அதற்கு கலாம், ‘எனது அறிவியல் ஆராய்ச்சிகளின் மூலம் இந்தியா வலிமையான நாடானதில் எனக்கு மகிழ்ச்சி. ஒரு முகாமில் மாற்றுத்திறனாளி குழந்தைக்கு நாங்கள் இலகு நடைக் கருவியைப் பொருத்தினோம். அதுவரை தரையில் தவழ்ந்து தவழ்ந்து நகர்ந்த அந்தக் குழந்தை எழுந்து தானாக நடந்ததைப் பார்த்து பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் விட்டனர். அந்தத் தருணத்தில் நான் பேரின்ப நிலையை உணர்ந்தேன்’ என்றார்.
அறிவியல் தொழில்நுட்பம் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதில் கலாம் தீவிரம் காட்டினார். இப்படிப் பல பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை மக்களின் பயன்பாடு சார்ந்த படைப்புகளாக மாற்ற, உயிரி மருத்துவத் தொழில்நுட்பச் சங்கத்தை (Society for Bio Medical Technology) கலாம் ஏற்படுத்தினார். இதன் மூலம் பல மக்கள் சார்ந்த படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அப்துல் கலாம் அவர்களோடு இஸ்ரோ, டி.ஆர்.டி.ஓ, எனத் தொடர்ந்து உடனிருந்த நீங்கள், அவர் குடியரசுத் தலைவரான பின்பும் அவருடன் தொடர்ந்து பயணித்தீர்கள். அடிப்படையில் மிக எளிமையானவரான கலாம், எப்படி குடியரசுத்தலைவர் மாளிகையின் பிரமாண்ட வாழ்வில் பொருந்திப் போனார்?
மிக மிக எளிமையானவர் கலாம். தன்னுடைய தனிப்பட்ட வளர்ச்சியை முன்னிருத்தாமல், தனது முயற்சியினால் எப்படி நாடு முன்னேறமுடியும் என சிந்தித்தவர் அவர். குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் இரண்டு பெட்டிகளோடு தான் குடியேறினார். பதவி வரும் போது ஆடம்பரம் வரும். ஆனால் அவர் எளிமையாகவே இருந்தார். பதவிகளில், உச்சபட்ட நேர்மையைக் கடைபிடித்தவர் கலாம்.
வாஜ்பாய், மன்மோகன் சிங், அப்துல் கலாம், இந்த மூவரும் உலக அரங்கில் இந்தியாவை உயர்த்தியவர்கள். வாஜ்பாய், மன்மோகன் சிங் இருவரும் கலாமின் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தனர்.
கலாம் நிகழ்ச்சிகளில் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரோடும் உரையாடி பரபரப்பாக தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தார். இதனால் மக்கள் மத்தியில் அவர் மிகப் பிரபலம். வாஜ்பாய் பிரதமராக இருந்த போது பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஒரு செய்தி வந்தது. ‘ பிரதமர் தான் ஒரு நாட்டின் தலைமைச் செயல் அதிகாரி, அவர் தான் நாட்டில் பிரபலமாக இருப்பார். ஆனால் நீங்கள் பிரதமரை விடப் பிரபலமாக இருக்கிறீர்கள். கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்’
கலாம் இந்தச் செய்தியை என்னிடம் பகிர்ந்து கொண்டார். ‘‘பிரதமர் சொல்வது சரி’’ என்றேன் நான். ‘‘அரசியல் தலைவர்களுக்கு பிரபல்யம் மிக முக்கியம். ஆனால் நீங்கள் அந்த பிரபல்யத்தைப் பங்கு போட்டுக் கொள்கிறீர்கள்’’ என்று மேலும் கூறினேன். ‘‘சரி சரி’’ என்றார்.
ஆனால் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்றார்.
குழந்தைகள், அரசியல் தலைவர்கள், தொழில்துறை வல்லுனர்கள் என பலதரப்பட்டவர்களோடு அவர்களுக்கு ஏற்ப அவரால் பழக முடிந்தது. ஒரு மனிதன் ஒரு விஷயத்தில் தான் திறமையானவனாக இருக்க முடியும். ஆனால் கலாம் பலதுறைகளில் சிறந்து எல்லாருக்குமானவராக இருந்ததே, மக்கள் அவரை விரும்பியதற்கு முக்கிய காரணம் எனலாம். எல்லோரையும் அரவணைத்துச் செல்பவராக அவர் இருந்தார். குடியரசுத் தலைவரின் எல்லாப் பணிகளையும் சிறப்பாகச் செய்தார்.