கேட்டலும் அறிதலும் – 14
– திரு.ப.திருமலை

வணக்கம் ஐயா..
வணக்கம். எல்லோரும் பால் சாப்பிட்டீர்களா?
ஆமாம் ஐயா. இன்று ஏதாவது சிறப்பு நாளா ஐயா?
இந்தக் கல்வியாண்டில் பள்ளி திறந்த பின்னர் நாம் சந்திக்கும் முதல் நாள். அதனால்தான் அனைவருக்கும் பால்.
நன்றி ஐயா, எங்களுக்குப் பசு, ஆடு, எருமை போன்றவற்றின் பால் தெரியும். கழுதைப்பால் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறோம். உலகிலேயே காஸ்டிலியான பால் எது ஐயா?
சிங்கம், புலி ஆகியவற்றின் பால் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், உண்மையில் எலியின் பால் தான் மிகவும் அரிதானதும், சேகரிக்க மிகவும் கடினமானதும் ஆகும். ஒரு லிட்டர் எலிப் பாலை சேகரிக்கச் சுமார் 4000 எலிகள் தேவைப்படும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஒரு எலியிடமிருந்து ஒருநேரத்தில் அரைத் தேக்கரண்டி அல்லது அதற்கும் குறைவான அளவே பால் கிடைக்கும். விஞ்ஞானிகள் ஆய்வகங்களில் சிறப்பு இயந்திரங்களின் உதவியால் இந்தப் பாலை எடுக்கிறார்கள். இந்தச் செயல்முறையானது சிரமமானது. இதற்கு நேரம் பிடிப்பதோடு செலவும் அதிகமாகும்.
சேகரிப்பதிலுள்ள சிரமங்கள் காரணமாகத்தான் எலிபால் விலை அதிகமா அல்லது அதற்கு வேறு ஏதாவது மருத்துவக் குணங்கள் உள்ளனவா?
இந்தப் பாலில் அதிகப் புரதம் மற்றும் சிறப்பு ஊட்டச்சத்துக்கள் உள்ளனவாம். இந்தப் பால் சாதாரண மக்கள் குடிப்பதற்கானதல்ல. இந்தப் பால் புற்றுநோய் ஆராய்ச்சி, நோயெதிர்ப்புச் சக்தி ஆய்வு, புதிய மருந்துகள் உருவாக்குதல் போன்ற ஆய்வுகளுக்காகப் பயன்படுகிறது. அதனால் மருந்து நிறுவனங்களும் ஆராய்ச்சி ஆய்வகங்களும் இந்தப் பாலை மிகவும் விலைமதிப்புக்குரியதாகப் பார்க்கின்றன.
ஐயா, ஜுவாலஜி (விலங்கியல்), பாட்டனி (தாவரவியல்) தெரியும் அது என்ன ஜியோடசி (Geodesy) என்றால் என்ன?
நல்ல கேள்வி. பூமியின் வடிவம், அளவு, சுழற்சி, ஈர்ப்பு விசை ஆகியவற்றை மிகத் துல்லியமாக ஆய்வு செய்யும் அடிப்படை அறிவியல் தான் ஜியோடசி. கிரேக்க மொழியில் `பிரித்து அளவிடுதல்’ என்கிற பொருளிலிருந்து உருவான சொல் ஜியோடசி. பூமியை அளக்கும் அறிவியல்’ இது. 21 – ஆம் நூற்றாண்டின் முக்கியமான, ஆனால் அதிகம் அறியப்படாத துறைகளில் இதுவும் ஒன்று.
அன்றாட வாழ்க்கையில் ஜியோடசியால் பயனிருக்கிறதா?
உலகளாவிய வழிகாட்டி அமைப்புகள் அனைத்தும் துல்லியமான ஜியோடசி தரவுகளின் அடிப்படையில் இயங்குகின்றன. 2004 சுனாமி போன்ற பேரிடர்களில் ஜியோடசி கருவிகள் முக்கியத் தகவல்களை வழங்கின. நிலநடுக்கம், நிலம் சரிவு, எரிமலை வெடிப்பு போன்றவற்றை முன்கூட்டியே கணிக்கவும் ஜியோடசி பயன்படுகிறது. மெட்ரோ ரயில், அணைகள், விமான நிலையங்கள், கடல்பாலங்கள் போன்ற பெரும் கட்டமைப்புத் திட்டங்களில் நில அமைப்புத் தரவுகளைத் துல்லியமாகக் அளவீடுகளை வழங்குவதில் ஜியோடசி முக்கியப் பங்கு வகிக்கிறது. விண்வெளி ஆராய்ச்சி துறைகளிலும் ஜியோடசியின் தேவை முக்கியமானதாகும்.
அறிவியலை நினைத்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. அதுபோலத் தொட்டாலே மனிதர்களுக்கு ஆபத்து தரக்கூடிய ஒரு பறவையும் இருக்கிறதாமே?
ஆமாம். இந்தத் தனித்துவமான மற்றும் அதிக விஷத்தன்மை கொண்ட பறவையின் பெயர் ஹூடட் பிட்டோஹுய் (Hooded Pitohui). இந்தப் பறவை குறிப்பாக நியூ கினியாவின் காடுகளில் வாழ்கிறது. 1992 – இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு அறிக்கையில், ஹூடட் பிட்டோஹுய் பறவையில் ‘பேட்ராகோடாக்சின்’ என்ற ஆபத்தான விஷம் இருப்பதாக டம்பாச்சர் மற்றும் அவரது ஆராய்ச்சிக் குழுவினர் கண்டறிந்தனர்.
எப்படி இந்தப் பறவை விஷத்தன்மையைப் பெறுகிறது?
ஹூடட் பிட்டோஹுய் தன் உணவின் மூலம் இந்த விஷத்தைப் பெறுகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். இது ‘மெலிரிட் வண்டுகள்’ என்ற விஷமுள்ள பூச்சிகளைத் தின்னுகிறது. அந்தப் பூச்சிகளில் இருக்கும் பேட்ராகோடாக்சின் என்ற விஷம், பறவையின் தோல் மற்றும் இறகுகளில் படிந்துவிடுகிறது. இந்தப் பறவையின் பிரகாசமான கருப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தை ‘அபோசெமாடிசம்’ என்பார்கள். அதாவது எச்சரிக்கை நிறம். இதைப் பார்த்தவுடனே “இது ஆபத்தானது, இதைத் தொடக்கூடாது” என்று எச்சரிக்கை உணர்வில் மற்ற விலங்குகள் விலகிச் சென்றுவிடும். நியூ கினியாவின் மக்களும் இந்தப் பறவையிடமிருந்து விலகியே இருக்கிறார்கள். இதை ‘குப்பைப் பறவை’ என்கிறார்கள். இன்று வரை விஞ்ஞானிகளுக்கும் வனவிலங்கு ஆர்வலர்களுக்கும் ஒரு வியப்பூட்டும், மர்மமான பறவையாகத் திகழ்கிறது.
இந்தப் பறவையால் பிறருக்குப் பாதகம். ஆனால் அந்தப் பறவைக்குப் பாதகமா? சாதகமா?
சாதகம் தான். பறவையின் விஷத்தன்மையை அறிந்த பிற விலங்குகள், ஒட்டுண்ணிகள் இதனை நெருங்குவதில்லை. நேற்று ஞாயிற்றுக்கிழமை எல்லோரும் என்ன செய்தீர்கள்.. வரிசையாகச் சொல்லுங்கள்..
நண்பர்களுடன் சினிமாவுக்குப் போனேன், உறவினர் வீட்டுக்குப் போனேன், அப்பாவோடு காய்கறி, இறைச்சி வாங்க மார்க்கெட் போனேன்.. துணி துவைத்தேன், சமையலுக்கு ஒத்தாசையாக இருந்தேன் என ஒவ்வொருவரும் ஞாயிறு எவ்வாறு கடந்துபோனது என்பதைச் சொன்னார்கள்.
“அப்படியென்றால் யாரும் புத்தகம் எடுத்துப் படிக்கவில்லை அப்படித்தானே? சரி.. இதில் துணி துவைத்தவர்கள் கையைத் தூக்குங்க..” அஸ்வினும், ராகவ்வும் கையைத் தூக்கினர். “உலகில் ஒரு நாட்டில் ஞாயிற்றுக்கிழமை துணி துவைத்தால் அபராதம், சில நேரங்களில் சிறைத்தண்டனையும் கிடைக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?”
தெரியாது. எந்த நாட்டில் ஐயா?
சுவிட்சர்லாந்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு அதிகாரப்பூர்வ ஓய்வு நாள். அந்த நாளில் புல் வெட்டுதல், சலவை இயந்திரம் ஓட்டுதல் போன்ற சத்தம் உண்டாக்கும் வேலைகளைச் செய்யக்கூடாது. அங்குள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுவான சலவை அறை இருக்கும். அங்கு இருக்கும் விதிமுறைகளின்படி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், பொது விடுமுறை நாட்களிலும் சலவை இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது. விதியை ஒருவர் மீறினால் முதலில் அண்டை வீட்டார் புகார் அளிக்கலாம். ஒரே நபர் மீண்டும் மீண்டும் விதியை மீறினால் சட்டப்படி அபராதம் விதிக்கப்படும். அந்த அபராதத்தைச் செலுத்தாமல் இருந்தால், அது பெரிய குற்றமாகக் கருதப்பட்டுச் சிறைத்தண்டனை வரை அளிக்க வாய்ப்பு உண்டு. ரமேஷ் நீ ஏதோ சொன்னியே..
“எங்க வீட்டில ஞாயிற்றுக்கிழமை அம்மா மீன் குழம்பு வைத்தாங்க. நான் ஒத்தாசையாக இருந்தேன்” என ரமேஷ் சொன்னதும், “அம்மா மீன் குழம்பு வைப்பாங்க.. இவன் சாப்பிடுவான் அதைத்தான் ஒத்தாசையாக இருப்பேன் என்கிறான்” எனச் சதீஷ் எழுந்து நின்று சொல்ல, “உட்காரு.. மீன் குறித்துச் சுவாரஸ்யமான தகவல்களைச் சொல்கிறேன் கேளுங்க..