உயிரைக் காத்த அறிவியல் கதைகள்! – 2
– இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் பெ.சசிக்குமார்

இன்று கோவிட், போலியோ, தட்டம்மை, காசநோய், ஹெபடைடிஸ்-பி, சின்னம்மை, HPV போன்ற பல நோய்களுக்கு நாம் சாதாரணமாகத் தடுப்பூசி போட்டுக் கொள்கிறோம். ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை முற்றிலும் வேறாக இருந்தது.
18-ஆம் நூற்றாண்டில் உலகையே அச்சுறுத்திய மிகக் கொடிய நோய் பெரியம்மை (Smallpox). காய்ச்சலாகத் தொடங்கும் இந்த நோய் உடல் முழுவதும் கொப்புளங்களை உருவாக்கி, தாக்கப்பட்டவர்களில் சுமார் மூன்றில் ஒருவரைக் கொன்றுவிடும். உயிர் பிழைத்தவர்களுக்குக் கூட முகம் முழுவதும் நிரந்தரத் தழும்புகள் ஏற்படும்; பலர் பார்வையை இழந்தனர். அரசர்கள், ஏழைகள், குழந்தைகள் என்று யாரும் இதிலிருந்து தப்பவில்லை.
அந்தக் காலத்தில் கிருமிகள் பற்றிய அறிவு இல்லாததால், பலர் இதை “தெய்வத்தின் கோபம்” என்று நம்பினர். நோயிலிருந்து தப்பிக்க “வரியோலேஷன்” என்ற ஆபத்தான முறையும் பயன்படுத்தப்பட்டது. பெரியம்மை நோயாளியின் கொப்புளங்களில் இருந்த சீழை ஆரோக்கியமானவரின் தோலில் செலுத்துவார்கள். சிலருக்கு இது பாதுகாப்பளித்தாலும், சில நேரங்களில் அதுவே உயிரிழப்பையும் ஏற்படுத்தியது.
இத்தகைய சூழ்நிலையில்தான் இங்கிலாந்தின் கிராம மருத்துவரான எட்வர்ட் ஜென்னர் ஒரு வித்தியாசமான விஷயத்தைக் கவனித்தார்.
பால் கறக்கும் பெண்களுக்குப் பெரியம்மை அரிதாகவே வந்தது. காரணம், அவர்கள் பசுக்களிடமிருந்து பரவும் “பசுவம்மை” (Cowpox) என்ற லேசான நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நோய் சில கொப்புளங்களை மட்டுமே ஏற்படுத்தி விரைவில் குணமாகிவிடும்.
“ஒருமுறை பசுவம்மை வந்தால், பெரியம்மை வராது,” என்ற நம்பிக்கை கிராமப்புறங்களில் பரவியது. பலர் இதை ஒரு கிராமத்துக் கதையாக எடுத்துக்கொண்டனர். ஆனால் ஜென்னர் அதை ஆராய முடிவு செய்தார்.
1796 மே 14 அன்று, சாரா நெல்ம்ஸ் என்ற பால் கறக்கும் பெண்ணின் பசுவம்மைக் கொப்புளத்திலிருந்து சீழை எடுத்து, எட்டு வயது சிறுவனான ஜேம்ஸ் பிப்ஸின் கையில் செலுத்தினார். சிறுவனுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது; ஆனால் சில நாட்களில் குணமடைந்தான்.
சில வாரங்களுக்குப் பிறகு ஜென்னர் இன்னும் துணிச்சலான ஒரு சோதனையைச் செய்தார். அப்போது உலகின் மிகக் கொடிய நோயாக இருந்த பெரியம்மை நோயாளியின் கொப்புளங்களில் இருந்து எடுக்கப்பட்ட பொருளை அதே சிறுவனின் உடலில் செலுத்தினார். பசுவம்மை உண்மையிலேயே பாதுகாப்பு அளிக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவதற்கான இறுதிச் சோதனை அது.
அனைவரும் பதற்றத்துடன் காத்திருந்தனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஜேம்ஸ் பிப்ஸுக்குப் பெரியம்மை வரவே இல்லை.