பீனிக்ஸ் மனிதர்கள்

ஒரு சிறப்பு நேர்காணல்

நேர்காணல்: கவிஞர் திரு.ஏகலைவன்
98429 74697

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு

ரு மனிதன் தன்னுடைய வாழ்வில் அழிக்கும் குணம், அளவற்ற ஆசை, கடுங்கோபம், வன்மையான வார்த்தைகள் என்கிற நான்கும் இல்லாமல் வாழ்வதும், மனத்தால் தனக்குத்தானே நேர்மையாகவும், மற்றையோருக்கு உதவுபவனாகவும் வாழ்வதே உண்மையான அறமாகும்.

அத்தகைய ஆழமான செயல்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய நல்மனிதர்கள், பெரியோர் நிரம்பிய அவைதனில் மரியாதைக்குரியவராகப் பார்க்கப்படுவதும், செல்வாக்கும், செல்வமும் கொண்டவராக உயர்வடைவதும் உலக நியதியாகும் என்று வள்ளுவப் பெருந்தகை தன்னுடைய குறளின் வாயிலாக உலகத்துக்கான நல்வழியை எடுத்தியம்புகிறார்.

ந்த நேரத்தில் பலருக்கும் தோன்றக்கூடிய ஐயம் என்னவெனில், மற்றையோருக்கு உதவுவதால் செல்வாக்கு வேண்டுமானால் உயர்வடையலாம். ஆனால், செல்வம் எப்படி உயரக்கூடும்? என்கிற கேள்வி எல்லோருக்குள்ளும் எழுவது இயல்பே.. இந்தக் கேள்வி ஓரளவு உண்மைதான்.. மறுக்கவில்லை..

ஆனால், மற்றையோருக்கு உதவுகிற மனிதர்களும் உயர்வடையவே செய்கிறார்கள். அது எந்த வகையில் என்றால், அவர்கள் தங்களது வாழ்க்கையைப் பயனுள்ளதாக வாழ்கின்ற திருப்தியைக் கொண்ட மனப் பணக்காரர்களாக உருவெடுக்கிறார்கள்.

உண்மையில் தன் வாழ்க்கை குறித்த திருப்தியும், மனநிறைவும் பெரும்பாலானவர்களுக்கு தோன்றுவதே இல்லை. அத்தகைய, வெந்ததைத் தின்றுவிட்டு, விதி வந்தால் செத்துப் போகிற நடைமுறை மனிதர்களுக்கு மத்தியிலும், ஒரு மாற்றுத்திறனாளி “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?” என்று மஹாகாளியிடம் உரத்துக் கேட்ட பாரதியைப் போல, தானும் விழாமல் தன் சக மாற்றுத்திறனாளிகளையும் விழுந்துவிடாமல் தாங்கிப் பிடித்து, வாழ்வில் வெற்றி நடை போடுவது எவ்வளவு பெரிய சாதனையல்லவா?

திரு மு.மருதப்பெருமாள் – யார் இந்த மருதப்பெருமாள்?

இள வயதிலேயே போலியோவால் பாதிப்படைந்து, கால்கள் பழுதடைந்தாலும், மனதால் மற்றும் அறிவால் பழுதடையாமல், தன்னுடைய நாற்பது வயதுக்குள்ளாகவே பல்வேறு வாழ்க்கைப் போராட்டங்களை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளியாகவும், சமூகத்தின் மீதான அதீத அக்கறையுள்ள ஒரு மனிதனாகவும், நல்லதொரு குடும்பத் தலைவனாகவும், வேலை வாய்ப்பளித்த கல்வி நிறுவனத்திற்கு விசுவாசமான பணியாளனாகவும், தன் மகனை சாதனையாளனாக்கி உயரத்தில் வைத்து அழகு பார்க்கிற மகத்தான தந்தையாகவும், தன் தெளிவான சொல்லாற்றல் மற்றும் மகத்தான செயல்பாடுகளால் தூத்துக்குடி மக்களின் மனங்களில் இடம்பிடித்து.. அவர்களால் கொண்டாடப்படுகிற மகத்தான மாற்றுத்திறனாளியாகவும் வாழ்வது பேரானந்தம் அல்லவா?

அத்தகைய பெருமை மிக்க மனப் பணக்காரரின் நம்பிக்கை நிறைந்த வாழ்க்கை இதோ உங்கள் கைகளில்..

  1. உங்களைப் பற்றியும், உங்கள் குடும்பத்தினர் பற்றியும் சொல்லுங்கள்..?

என் பெயர் மு.மருதப்பெருமாள் எம்.காம். நான் தூத்துக்குடி மாவட்டம் 3வது மைல், புதுக்குடி, 2வது தெருவில், 1981 பிப்ரவரி 5 ஆம் தேதியன்று பிறந்தேன். என்னுடைய தந்தை மா.முத்துமாலை அவர்கள் உப்பளத்தில் கூலித் தொழிலாளி. எனது தாய் மு.அம்மாள் அவர்கள் இல்லத்தரசி. என்னுடன் பிறந்தவர்கள் – இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் ஆவர்.

எனக்கு 31 வயதில் திருமணம் நடைபெற்றது. மனைவியின் பெயர் ம.நித்தியா இல்லத்தரசி. எனக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். முதல் மகன் ம.சுதன் – 6 வயது. இரண்டாம் வகுப்பு படிக்கிறான். இரண்டாவது மகன் ம.பிரவின் – 3 வயது. இந்த வருடம்தான் LKG
சேர்ந்துள்ளான்.

  1. உங்களுடைய உடற்குறை பற்றியும், அதை கடக்க முயலும் முயற்சிகள் பற்றியும் சொல்லுங்கள்..?

நான் கரண்ட் வசதியற்ற குடிசை வீட்டில், வறுமையான சூழலில் பிறந்தேன். எனது 2 வயது வரை நன்றாக நடந்தேன். ஒருநாள் நன்றாக விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்து படுத்திருக்கிறேன். அப்போது காய்ச்சல் வர, அந்தக் காய்ச்சலே இளம்பிள்ளை வாதமாக மாறி, இரண்டு கால்களையும், கைகளையும் முடக்கி விட்டது. அதன் பிறகு பல்வேறு வைத்தியங்களுக்குப் பிறகும், என்னுடைய இரண்டு கைகளும் செயல்படத் தயாரான நிலையில், கால்களிரண்டும் நடக்க முடியாமல் போய்விட்டன. அன்று முதல் 16 வயது வரை ஊர்ந்துதான் செல்வேன் அல்லது யாராவது தூக்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும் என்கிற நிலைமையில் வாழ்ந்து வந்தேன்.

அதன் பிறகு நண்பர் ஒருவர் கம்பு வாங்கித்தந்து தூண்டுவிக்க, அதன்விளைவாக நடக்க முயற்சி செய்து, இரண்டு கம்பு வைத்து நடந்தேன். அதன்பிறகுதான் வெளியுலகமே எனக்குத் தெரியும். எங்கள் பகுதியிலுள்ள பிள்ளைகளுடன் சேர்ந்து அனைத்து விளையாட்டுகளும் விளையாடுவேன்.

ரோட்டில் உள்ள தெருவிளக்கின் வெளிச்சத்தில்தான் படிக்க வேண்டிய நிலையென்றாலும், ஓரளவு படிப்பேன். 11 ஆம் வகுப்பில் மற்றவர்கள் மாதிரி நாமும் பேண்ட் அணிய வேண்டும் என்பதற்காகவே இரவும் பகலுமாக நடந்து பழகினேன்.. அப்போதுதான் இரண்டு கம்புகளின் மூலம் ஒரளவு நடக்கப் பழகினேன்.

  1. உங்கள் கல்வித்தகுதி மற்றும் பணி வாழ்க்கை பற்றி..?

நான் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை வீட்டருகே உள்ள திரு. சி.ப.முத்துசாமிப் பிள்ளை தொடக்கப் பள்ளியில் படித்தேன். அதன் பிறகு 12 ஆம் வகுப்பு வரை மில்லர்புரம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். பள்ளிக்கூடத்திற்கு 2 கிலோ மீட்டர் தொலைவுவரை செல்ல வேண்டும் என்கிற நிலைமை.

6 ஆம் வகுப்பு முழுவதும் அப்பா சைக்கிள் வைத்து கொண்டு விட்டார்கள். 7 ஆம் வகுப்பில் மூன்று சக்கர சைக்கிள் மூலம் செல்ல ஆரம்பித்தேன். 11, 12 ஆம் வகுப்புகளில் நான்தான் முதல் ரேங்க் எடுப்பேன். அதனைத் தொடந்து B.Com மற்றும் M.Com படிப்புகளை தூத்துக்குடி VOC college-ல் படித்தேன். படித்து முடித்த அடுத்த வருடமே தூத்துக்குடி சாண்டி பாலிடெக்னிக் கல்லூரியில் ஆபீஸ் கிளார்க்காக வேலைக்குச் சென்றேன். அதனைத் தொடர்ந்து மூன்றே வருடத்தில் கல்லூரி அலுவலகக் கண்காணிப்பாளராக பதவியுயர்வு பெற்று என்னாலியன்ற வகையில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறேன்.

  1. பொதுவாக மாற்றுத்திறனாளிகள் தங்களைத் தாங்கள் பாதுகாத்துக் கொள்வதே கடினம். அதைத் தாண்டி இந்த சமுதாய நலனுக்காக செயல்பட வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்குள் எப்போது வந்தது..?

எங்கள் பகுதி பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்களை அதிகமாகக் கொண்ட பகுதி. எங்கள் பகுதியிலேயே முதல் பட்டதாரி நான்தான். எனவே, நான் கல்லூரியில் படிக்கும்போதே, அவர்களுக்கான ரேஷன் கார்டு, ஓட்டர் அட்டை, ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், அரசு சம்பந்தமான மனுக்கள் எழுதுதல், ஏரியாவை சுத்தம் செய்தல், பொங்கல் விழாக்கள் நடத்துதல், கிரிக்கெட் போட்டிகள் நடத்துதல், குடியரசு தின விழா கொண்டாடுதல் என பல நல்ல காரியங்களை ‘‘இளையபாரதம் இளைஞர் சமூகசேவை அமைப்பு’’ எனும் அமைப்பின் தலைவராக இருந்து செய்து வந்தேன். இதன் மூலமாக எங்கள் பகுதியின் மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முடிந்தது.

இந்த இளையபாரதம் அமைப்பு உருவாகக் காரணம் எதுவென்றால், நான் கல்லூரியில் படிக்கும்போது சுவாமி விவேகானந்தர் கேந்திரத்தின் மூலமாக, கல்லூரி மாணவர்களுக்கென ‘‘தமிழகம் கண்ட சுவாமி விவேகானந்தர்’’ என்ற தலைப்பில் கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் நான் தென் மாவட்ட அளவில் முதலாவது மாணவனாக வெற்றியடைந்தேன்.

இதன் மூலமாக கல்லூரி முடித்தபின் மாலை நேரங்களில் விவேகானந்த கேந்திராவுக்குச் சென்று என்னாலான வேலைகள் பார்ப்பது, விவேகானந்தர் புத்தகங்களைப் படிப்பது, திருவிளக்கு பூஜை நடத்துவது, ஏழை எளிய பெண்களுக்கு தையல், படிப்பு சொல்லித் தருவது, பிறர் படிப்புக்கு உதவுதல் போன்ற காரியங்களைச் செய்யக் கற்றுக்கொண்டேன். அதன் தொடர்ச்சியாக என் பகுதி மக்களுக்கு உதவிட இளையபாரதம் இளைஞர் அமைப்பை உருவாக்கி பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டேன்.

  1. “தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வுச் சங்கம்” எனும் அமைப்பைத் துவங்கியது எப்போது? ஏற்கனவே தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் இருக்கும்போது, இதைத் தொடங்கியதன் காரணம் என்ன..?

நான் பல சமூக அமைப்புகளில் இருந்து, என்னாலான உதவிகளை எல்லா மக்களுக்கும் செய்து கொண்டிருந்தேன். அப்போது சக்ஷசம் என்கிற மாற்றுத்திறனாளிகள் தேசிய அமைப்பின் மாவட்டச் செயலாளராக என்னை நியமித்தார்கள். அதனைத் தொடர்ந்து மாநாடு நடத்தி, மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் மிஷன், சைக்கிள் வண்டி போன்ற பல உதவிகள் செய்தோம்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தின் மாநில துணைச் செயலாளராக இருந்து, பிற மாவட்டங்களில் உள்ள மக்களையும் சந்தித்து, அவர்களுக்கு பல உதவிகள் செய்யும்போது, ஏற்பட்ட சிற்சில பிரச்சனைகளின் காரணமாக நாமே ஏன் ஒரு சங்கத்தை அமைக்கக் கூடாது? என்று தோன்றியது.

அதன் விளைவாகவே, ‘‘தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல் வாழ்வுச் சங்கம்’’ எனும் அமைப்பை உருவாக்கினோம். எந்தவொரு மாற்றுத்திறனாளியிடமும் பணம் வாங்காமல், எந்த நேரத்திலும் எந்த சமயத்திலும் உதவிட வேண்டும் என்கிற கொள்கையோடு இந்த அமைப்பு தொடங்கப்பட்டு, சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

  1. மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்காக  சுய உதவிக்குழு, உதவி உபகரணங்கள்
    பெற்றுத் தருதல், நிவாரணப் பொருட்கள் வழங்குதல் என்று தொடர் பணிகளில் ஈடுபட்டுள்ளீர்கள். இவ்விஷயங்களில் சமுதாயத்தின் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது..?

கொரோனா காலத்தில் மிகவும் வறுமையிலுள்ள 900க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களை நேரில் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான அரிசி, மளிகைச் சாமான்கள், காய்கறிகள் ஆகியவற்றைக் கொடுத்து உதவிகள் செய்தோம். இதனைக் கண்ட மாநகராட்சி நிர்வாகம் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சுய உதவிக்குழுவைத் தொடங்கி, அதன் மூலம் அவர்களுக்கு லோன் கொடுத்து, அவர்கள் வாழ்க்கையில் முன்னேறச் செய்யலாம் என்று தெரிவித்ததால், மாநகராட்சி கமிஷனர் மேற்பார்வையில் மாற்றுத்திறனாளிகளை ஒன்றிணைக்கும் விதமாகச் செயல்பட்டு, பல சிறப்பு சுய உதவிக் குழுக்களை உருவாக்க முடிந்தது.

எங்களுடைய பணியினைப் பார்த்து பெரிய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், லயன்ஸ் கிளப் ஆகியோருக்கு நம்பிக்கை பிறந்தது. அதனைத் தொடர்ந்து இன்று வரை அனைவரும் எங்களுக்கு ஆதரவு தந்து
கொண்டிருக்கிறார்கள்.

  1. உங்கள் அமைப்பின் செயல்பாடுகள் மட்டுமன்றி, பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றுவது பற்றி..?

எங்கள் அமைப்பின் மூலம் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு உதவிகள் செய்து வருகிறோம்.மழைக்காலங்களில் நிலவேம்புக் கசாயம் கபசுரக் குடிநீர் என தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மக்களுக்கு இலவசமாக வழங்கி கொரோனா என்ற வைரஸைத் தடுக்க முயற்சி எடுத்துள்ளோம்.

வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ALL CAN TRUST மூலமாக இதுவரை 165 வது வாரமாகத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு
வருகிறோம்.

தூத்துக்குடி சமுதாய நல்லிணக்கப் பேரவையின் சார்பாக இதுவரை 20க்கும் மேற்பட்ட நபர்களிடம் கண்தானம் பெற்றுள்ளோம்.

ரத்ததான அமைப்புகளுடன் இணைந்து நமது சங்கத்தின் மூலமாகவும் பல நேரங்களில் இரத்த தானம் செய்துள்ளோம்.

We Can trust மூலம் பெரிய குளம், கண்மாய் போன்றவற்றை தூர்வாரி இருக்கிறோம். மக்கள் பிரச்சனைகள் உள்ள அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொள்வோம். தனியாகவும் போராடி உள்ளோம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது பல அமைப்புகளுடன் இணைந்து ஸ்டெர்லைட் போராட்டம் தொடங்கியது முதல் 100 நாட்கள் முடியும்வரை தொடர்ந்து போராடியுள்ளோம்.

ஆகையால், தூத்துக்குடியிலுள்ள பல்வேறு சமூக அமைப்புகளோடும் இணைந்தும், தனித்தும் எங்களது சங்கம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

  1. சமுதாயப் பணிக்காக நீங்கள் பெற்றுள்ள அங்கீகாரங்கள் பற்றி..?

எனது பல்வேறு சமுதாயப் பணிகளுக்காக…

சுனாமி வந்தபோது அதிகமான நிவாரணப் பொருள்களை இரண்டு வேன் முழுவதும் ஏற்றிக்கொண்டு, குளச்சல் பகுதி மக்களுக்கு நேரில் சென்று கொடுத்தற்காக “சிறந்த சமூக ஆர்வலர் விருது” வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக “சிறந்த சமூக சேவகர் விருது” வழங்கப்பட்டது.

மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கு பாடுபட்டதற்காக “கலைஞர் விருது” வழங்கப்பட்டது.

ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது பாமர மக்கள் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது அதிகமான ரத்தம் தேவைப்பட்ட நேரத்தில், இளைஞர்களை அழைத்துச் சென்று ரத்த தானம் செய்ததற்காக “குருதிக் கொடையாளர் விருது” வழங்கப்பட்டது.

தூத்துக்குடியை பசுமையாக்கும் நோக்கில் மரக்கன்றுகள் நட்டு வருவதால் “பசுமை நாயகன் விருது” வழங்கப்பட்டது.

சமூகப் பணிகளில் முதலில் வந்து நின்று தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையை அனைவரின் மனதில் ஏற்படுத்தியதற்காக லயன்ஸ் கிளப் சார்பாக, “பாரதி ஆளுமை விருது” வழங்கப்பட்டது.

நான் படித்த புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலை பள்ளியின் சார்பில் “சிறந்த சமூக சேவகர் விருது” தரப்பட்டுள்ளது.

We Can Trust வழங்கிய “சிறந்த சமூக செயற்பாட்டாளர் விருது” மற்றும் பல்வேறு விருதுகளை சமுதாயப் பணிகளுக்காகப் பெற்றுள்ளேன்.

  1. உங்கள் குடும்பத்திலிருந்து இன்னொரு சாதனையாளன் உருவாகி வருவதை அறிகையில், மிகுந்த மகிழ்வு ஏற்படுகிறது. அந்த இளம் சாதனையாளரான உங்கள் மகன் பற்றி..?

எனது மகன் ம.சுதன் சிறு வயதிலிருந்தே ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் உள்ளவன். அவன் படிக்கும் பள்ளியில் ஓட்டப்பந்தயத்தில் எப்போதுமே முதல் பரிசு பெறக்கூடியவனாக இருக்கிறான். அந்த அடிப்படையில் அவனது சொந்த ஆர்வத்தின் காரணமாக, கடந்த ஆறு மாத காலமாக தூத்துக்குடி Square fitting & Boxer club அமைப்பின் பயிற்சியாளர் பாக்ஸர் திரு வி.லெட்மண மூர்த்தி அவர்களிடம் சிறப்புப் பயிற்சி பெற்று வருகிறான்.

அந்தப் பயிற்சி தந்த நம்பிக்கையோடு ஆறு வயது மாணவனான அவன் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளன்று 20 கிலோ மீட்டர் தூரத்தை, 2 மணி நேரத்தில் கடந்து சோதனை ஓட்டமாகச் சாதித்துள்ளான். அந்தவகையில் ஒரு தந்தையாகப் பெருமிதப்படுகிறேன்.

  1. இந்த ஓட்டப் பந்தய ஆர்வம் அவனுக்குள் தோன்றியது பற்றியும், உங்கள் வழிகாட்டுதல், பயிற்சிகள், அவனது எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் சொல்லுங்கள்?

ஆரம்பத்தில் எனது மகனை பாக்ஸிங் கிளாஸ் சேர்த்துவிட்டேன். வாரத்தில் இரண்டு நாள் long running செல்ல வேண்டும். அப்படி செல்லும்போது இரண்டாம் வகுப்பு படிக்கும் இவனை விட மூத்தவர்களான 8 & 12 வரையிலான வகுப்பின் மாணவர்களுக்குச் சரிசமமாக ஓடி வருவான். அந்நேரத்தில் எந்த ஒரு மூச்சிரைப்பும் இல்லாமல் இருப்பான். அதனைப் பார்த்தபோது, இவனால் பல சாதனைகள் புரிய முடியும் என்பதை அறிந்து கொண்டோம்.

அன்றிலிருந்து தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுப்பி, 5 மணிக்கெல்லாம் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு, தினமும் 5 கிலோ மீட்டர் அவனோடு சேர்ந்து நானும் வண்டியில் சென்று, ஓட வைத்தோம். அந்நேரத்தில்தான் அவனுக்குள்ளே ஒரு சக்தியிருப்பதை அறிந்துகொண்டோம். அந்த உந்துதல்தான் இந்த ஆறு வயதில் 20 கிலோ மீட்டர் ஓடி சாதனை புரிய வைத்தது.

இதனையடுத்து விரைவில் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பதிவிற்காக ஓட இருக்கிறான். அதனைத் தொடர்ந்து கின்னஸ் சாதனைகள், ஒலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொண்டு, நம் நாட்டிற்குப் பெருமை தரும் விதமாக பல பதக்கங்களை வாங்கித் தர வேண்டும் என்பதே அவனுடைய எதிர்கால திட்டங்களாகும்.

  1. உங்கள் சமூகச் செயல்பா டுகளை மக்களிடையே கொண்டு செல்வதில் முகநூலை முழுமையாகப் பயன்படுத்துகிறீர்கள். இதன் மூலமாக நீங்கள் பெற்ற அனுபவங்கள் பற்றி..?

முகநூலானது நாங்கள் செய்த சமூகப் பணிகள், போராட்டங்கள், நற்பணிகள், நான் வசிக்கும் பகுதியில் நடக்கும் நல்லது கெட்டது, நான் படித்த நற்கருத்துகளைப் பிறருக்குத் தெரியப்படுத்துதல், இரத்த தேவைகள் போன்ற அனைத்தையும் கடந்த ஐந்து வருடங்களாக வெளிக்கொண்டு வருவதற்கு முழுமையாக உதவியிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல்.. பல்லாயிரம் நண்பர்கள் தொடர்ந்து நம்முடைய பதிவினைப் பார்த்து, பல விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பளிக்கக்கூடிய நல்லதொரு தளமாக முகநூல் விளங்குகிறது.

  1. கல்லூரிப் பணி, சமுதாயப் பொறுப்பு, குடும்பக் கடமை, முகநூல் பங்களிப்பு, மகனை சாதனையாளனாக உருவாக்குதல் என்று தொடர்ந்து இயங்குவதற்கான உத்வேகத்தை எப்படி பெறுகிறீர்கள்..?

நான் தொடர்ந்து இயங்குவதற்கு என்னுடைய மனைவி, என் அம்மா, அப்பா இவர்களுடைய ஒத்துழைப்பு மற்றும் நண்பர்கள், எனது பகுதி மக்களின் பாசமுமே காரணங்களாகும். இன்னுமொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அதிகாலை எழுந்து தொடங்கினால், எந்தவொரு நிகழ்வையும் சிறப்பாக முடிக்க முடியும் என்ற நம்பிக்கையும் காரணம்.

இதனோடு சேர்த்து இறையருளும் துணையிருப்பதாக நம்புகிறேன். எங்கள் பகுதி கோவிலின் முக்கிய பொறுப்பாளராகச் செயலாற்றுவதன் மூலமாக, கோவில் கொடை விழா சிறப்பாக நடத்துதல், ஊரில் நல்லது கெட்டது அனைத்திலும் கலந்து கொண்டு எல்லா வேலைகளையும் செய்ய இறைவன் அருளையும் கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.

  1. தூத்துக்குடி மண்ணின் வீச்சு காரணமாக, இம்மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மிகுந்து காணப்படுவதாக ஒரு தகவலுண்டு. அது எந்தளவு உண்மையென
    நினைக்கிறீர்கள்..?

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 36 ஆயிரத்து 645 மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்துள்ளார்கள்.இன்னும் பதிவு பெறாத மாற்றுத்திறனாளிகளும் ஏராளமாக உள்ளனர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாவட்டத்தில் ஏன் இந்த அளவிற்கு அதிகமான அளவில் மாற்றுத்திறனாளிகள் உள்ளார்கள் என்பதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால், அதிகமான தொழிற்சாலைகளும், சுற்றுச்சூழல் பாதிக்கும் அளவில் பல தொழில் நிறுவனங்களும் இருப்பதாலும், அதிகமான போக்குவரத்து நெரிசல், சாலை விபத்துகள், நச்சுப் புகைகள் மூலமும் மாற்றுத்திறனாளிகள் அதிகமாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாகவே ஒரு சமயம் தூத்துக்குடி நகரமானது மக்கள் வாழத் தகுதியில்லாத நகரம் என்று சுற்றுப்புறச் சூழல் மாசு கட்டுப்பாடு வாரியம் ஒரு அறிக்கைகூட வெளியிட்டது.

ஆகவே, இந்த மண்ணின் வளத்தைப் பெருக்குவதற்காக எங்களைப் போன்ற பல்வேறு பசுமை அமைப்புகள் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மரங்களை நட்டு பசுமையாக்கிக் கொண்டிருக்கின்றன.

  1. உங்கள் எதிர்காலச் செயல்பாடுகள் பற்றி..?

என்னுடைய எதிர்காலச் செயல்பாடுகளில் முக்கியமானது, தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பைக் குறைப்பதாகும். அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளும் அரசியலில் இறங்கி, மக்களுக்கு அனைத்து சேவைகளையும் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தைக் கொண்டிருப்பதோடு, எங்களது சங்க உறுப்பினர்களான அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் சுயதொழில், படிப்பு, வேலை வாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதாரத்தில் முன்னேற்றுவது போன்றவற்றை எதிர்காலத் திட்டங்களாகக்
கொண்டிருக்கிறேன்.

மேலும், எனது மகனை ஒலிம்பிக்கில் நாட்டுக்காக ஓடி, தங்கப் பதக்கம் பெற வைப்பதை என் கனவாகக் கொண்டிருக்கிறேன்.

உயர்ந்த கனவோடு ஒப்பற்ற செயல்களைச் செய்து வரும் திரு.மு. மருதப் பெருமாள் அவர்களின் பொன்னான பணிகள் எந்நாளும் தொடர ‘ஆளுமைச் சிற்பி’ இதயப்பூர்வமாக வாழ்த்துகிறது.  =

இவரை வாழ்த்த,
திரு மு.மருதப்பெருமாள், தூத்துக்குடி
கைபேசி – 94426 35879