சமூகப் பார்வை – 4

‘இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் காவல் நிலையத்தில் விசாரணையின் போது உயிரிழப்பு ஏற்படுவது அதிகமாக உள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. காவல்நிலைய மரணம் என்பது மனிதத்தன்மையற்ற செயல். இது ஜனநாயகத்திற்கு எதிரானது. முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” என மதுரை ஐகோர்ட் கிளையின் நீதிபதி உச்சரித்த வார்த்தைகள் சாதாரணமானவையல்ல.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தங்களது கடையைக் கூடுதல் நேரம் திறந்து வைத்திருந்த காரணத்தால் ஜெயராஜும், அவரது மகன் பென்னிக்ஸும் காவல் துறையால் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இதற்கு நியாயம் கேட்டு அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் போராட்டத்தில் இறங்கினர். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தது. மாநில மனித உரிமை ஆணையமும் காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்தச் சம்பவம் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பேசப்பட்டது. இவ்வழக்கில், 2020 செப்டம்பர் 26ஆம் தேதி, மத்தியப் புலனாய்வு பிரிவு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் ஒன்பது போலீசார் பெயர்கள் இதில் இடம் பெற்றிருந்தன.

தினமும் 5 பேர்…

அண்மையில், மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்த தகவல்களின்படி, 2019-2020 ஆம் ஆண்டில் அதாவது, ஏப்ரல் 1, 2019 முதல் 2020 மார்ச் 31 வரை காவல் மற்றும் நீதிமன்றக் காவலில் இறந்தவர்கள் எண்ணிக்கை 1,697 ஆகும். இதில், 1,584 பேர் நீதிமன்றக் காவலிலும், 113 பேர் போலீஸ் காவலிலும் இருந்தவர்கள். சராசரியாக இந்தியாவில் தினமும் ஐந்து பேர் காவலில் இறந்துள்ளனர்.

நீதித்துறை காவலிலிருந்தவர்களில் அதிகம் பேர் இறந்தது உத்தரப்பிரதேசத்தில் (400) எனப் பதிவாகியுள்ளது. போலீஸ் காவலில் அதிகம் பேர் மத்தியப் பிரதேசத்தில் (14) இறந்துள்ளனர். அடுத்து தமிழகம் மற்றும் குஜராத் தலா 12 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் நீதிமன்றக் காவலில் 57 பேர் இறந்துள்ளனர்.

ஒருவரைக் கைது செய்யும்போது காவல் அதிகாரி கடைப்பிடிக்க வேண்டிய 11 வழிமுறைகளை டி.கே. பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியது. அதில் முக்கியமானது கைது செய்யப்பட்டவருக்கு மருத்துவச்சிகிச்சை, சொந்தங்களுக்குத் தகவல், வக்கீலை ஆலோசிக்க அனுமதி ஆகியவையாகும். ஆனால், சாத்தான்குளம் நிகழ்வில் இவை கடைப்பிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை என ஓய்வு பெற்ற போலீஸ் உயர் அதிகாரியே தெரிவித்திருந்தார்.

இதுபோல விருத்தாசலம் கிளைச் சிறையில் முந்திரி வியாபாரி செல்வ முருகன் மரணமடைந்த விவகாரத்தில் அவர் மனைவி பிரேமா நெய்வேலி காவல் ஆய்வாளர் மற்றும் உடந்தையாக இருந்த காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

கொரோனா காலத்தில்

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தரவுகளின் அடிப்படையில் கொரோனா ஊரடங்கு “வெற்றிகரமாக” நடந்து கொண்டிருந்த 2020 ஜூலை வரையிலான முதல் ஏழு மாதங்களில் 51க்கும் மேற்பட்டோர் போலீஸ் காவலில் இறந்துள்ளனர். அக்டோபர் 12ஆம் தேதிக்குள், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மேலும் 16 வழக்குகளைப் பதிவு செய்தது.

தேசிய குற்ற ஆவணக் காப்பக (என்.சி.ஆர்.பி) அறிக்கைப்படி 2019ஆம் ஆண்டில், அதிகபட்சமாகத் தமிழ்நாட்டில் 11 காவல் மரண வழக்குகள் பதிவாயின. 2018ஆம் ஆண்டில் குஜராத்தும் (14), 2017ஆம் ஆண்டில் ஆந்திராவும் (27) முதலிடத்திலிருந்தன.

காவல் நிலைய மரணம்

சிஐஐ (கிரைம் இன் இந்தியா) வருடாந்திர அறிக்கையின்படி, கடந்த 10 ஆண்டுகளில் 1,004 பேர் போலீஸ் காவலில் இறந்துள்ளனர். இந்த இறப்புகளில் மகாராஷ்டிரா (21.5%), ஆந்திரா (13%), குஜராத் (11%) ஆகிய மாநிலங்களில் ஐந்தில் ஒரு பங்கு பதிவாகியுள்ளன.

அதேபோல் கடந்த பத்தாண்டுகளில் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் போலீஸ் காவலில் 10 அல்லது அதற்கும் குறைவானவர்கள் இறந்தார்கள் என்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகம். அதிலும் சிக்கிம், சண்டிகர், தாத்ரா & நகர் ஹவேலி, டாமன் & டையூ மற்றும் லட்சத்தீவு ஆகியவற்றில் கடந்த பத்தாண்டுகளில் போலீஸ் காவல் மரணங்கள் ஏதும் இல்லை என்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகம்.

24 மணி நேரத்தில்

கைது செய்யப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் தன்னை, ஒரு மாஜிஸ்திரேட் முன் 24 மணி நேரத்திற்குள் ஆஜர்படுத்த வேண்டும் என்று கோர உரிமை உண்டு. ஆனால், போலீசாரின் “விசாரணையின் போது” அவ்வாறு கேட்க வாய்ப்பில்லை என்பதே நிஜம். கடந்த பத்தாண்டுகளில் போலீஸ் காவலில் நடந்த 1,004 இறப்புகளில், காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 63 சதவிகிதத்தினர் இறந்தனர். குஜராத், உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் போலீஸ் காவலில் இறந்த நான்கில் மூன்று பங்கு இறப்புகளானது, கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் நிகழ்ந்துள்ளன. குஜராத்தில் 87% இறப்புகள் கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த ஆறு ஆண்டுகளில் (2014-2019), போலீஸ் காவலில் இறந்ததாகக் கூறப்படும் 46 நபர்களில் 44 பேர் கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இறந்துள்ளனர்.

மாறுபட்ட எண்ணிக்கை

போலீஸ் காவலில் இறந்தவர்கள் குறித்து விவரங்கள் முழுமையாகப் பதிவு செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau – என்.சி.ஆர்.பி.), சித்திரவதைக்கு எதிரான தேசிய பிரச்சாரம் (National Campaign Against Torture – என்.சி.ஏ.டி) மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (National Human Rights Commission – என்.எச்.ஆர்.சி) ஆகிவற்றின் தரவுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இது தெரியவரும்.

2019ஆம் ஆண்டில் இந்தியாவில் போலீஸ் காவலிலிருந்த 124 பேர் இறந்துள்ளனர் எனச் சித்திரவதைக்கு எதிரான தேசிய பிரச்சாரமானது (என்.சி.ஏ.டி) அதன் India: Annual Report On Torture 2019 அறிக்கையில் கூறியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை 85 எனத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் பதிவு செய்தது. தேசிய மனித உரிமைகள் ஆணையமானது அதே ஆண்டில் 117 போலீஸ் காவல் இறப்புகள் நிகழ்ந்ததாகக் கூறியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், உத்தரப்பிரதேசத்தில் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் போலீஸ் காவல் மரணங்களை இல்லை என்று மாநில அரசின் அறிக்கைகள் கூறின. சித்திரவதைக்கு எதிரான தேசிய பிரச்சாரமானது (என்.சி.ஏ.டி) அதன் அறிக்கையில் 2019ஆம் ஆண்டில் மிக அதிக எண்ணிக்கையாக, உத்தரப்பிரதேசத்தில் போலீஸ் காவலில் 14 மரணங்கள் நிகழ்ந்தன என்றது. ஊடகங்களோ அதே காலகட்டத்தில் அம்மாநிலத்தில் பத்துக்கும் மேற்பட்ட சம்பவங்களைச் சுட்டிக்காட்டியது.

டெல்லியில் கடந்த பத்தாண்டுகளில் காவல் நிலைய இறப்புகள் நான்கு மட்டுமே என்கிறது அறிக்கை. 2019ஆம் ஆண்டில் டெல்லியில் போலீஸ் காவலில் ஏழு பேர் மரணித்தார்கள் எனச் சித்திரவதைக்கு எதிரான தேசிய பிரச்சாரக்குழு ஆவணப்படுத்தியது,

இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநிலமான பீகாரில், கடந்த பத்தாண்டுகளில் 10 காவல்நிலைய இறப்புகளை மட்டுமே அறிக்கைக் காட்டியது, 2019ஆம் ஆண்டில் போலீஸ் காவலில் ஒரு மரணத்தை மட்டுமே பதிவு செய்தது. ஆனால், 2019ஆம் ஆண்டில் பீகாரில் ஒன்பது மரண வழக்குகளைச் சித்திரவதைக்கு எதிரான தேசிய பிரச்சாரக்குழு ஆவணப்படுத்தியது. எனவே, காவல்நிலைய மரணப்பட்டியல் குறித்து உறுதியான தரவுகள் இல்லை என்பதனை
அறியமுடிகிறது.

தண்டனை இல்லை

“தற்போதுள்ள சட்டங்களின் கீழ் காவல்துறையினரை உடனடியாகத் தண்டிக்க முடிவதில்லை. தண்டிப்பதற்கு முன்பு அரசின் அனுமதி தேவைப்படுகிறது. நீதி கிடைப்பதற்கு இது ஒரு தடையாக உள்ளது” என்கிறது ஜூலையில் வெளியான “இந்தியா ஸ்பெண்ட்” கட்டுரை.

2009 முதல் 2018 வரை சிறப்பு நீதிமன்றத்தை எட்டிய வழக்குகளில் 25.2 சதவிகிதம் மட்டுமே தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக நீதிக்கான தேசிய தலித் இயக்கத்தின் ராகுல் சிங் கூறுகிறார். அதே நேரத்தில், 62.5 சதவிகித வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

உச்சநீதிமன்றத்தில் திலிப் கே.வாசு என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “இந்தியாவில் 2001 முதல் 2018ம் ஆண்டில் 1,727 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக 2017, மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் மட்டும் சுமார் 148 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் 2 வழக்குகளில் மட்டுமே காவல் அதிகாரிகளுக்கு எதிராகக் குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்கிறார்.

காவல் சீர்திருத்தம்

அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் செயல் இயக்குநர் அவிநாஸ் குமார், “2010 ஆம் ஆண்டு பொதுமக்களிடம் விவாதமோ கலந்துரையாடலோ ஏதுவுமின்றி, அவசரகதியில் சித்திரவதை தடுப்பு சட்ட முன் வரைவு ‘ (Prevention of Torture Bill) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இச்சட்ட முன்வரைவு பல்வேறு குறைகளுடனும், சித்ரவதைக்கெதிரான ஐ.நா உடன்படிக்கையின் பல முக்கிய அம்சங்களை நிறைவு செய்யாமலும் இருந்தது” என்கிறார்.

தமிழகத்தில் காவல் துறை மேம்பாட்டிற்காக 1971ஆம் ஆண்டு கோபால்சாமி கமிஷன், 1989ஆம் ஆண்டு சபாநாயகம் கமிஷன், 2006ஆம் ஆண்டு பூரணலிங்கம் கமிஷன், 2019ஆம் ஆண்டு ஷீலா பிரியா கமிஷன் என நான்கு கமிஷன்கள் அமைக்கப்பட்டன.

இவை, காவல் துறை நவீனமயமாக்கல், பயங்கரவாத தாக்குதலைச் சமாளிக்கத் தேவையான கருவிகள், ஆயுதங்கள், வாகனத் தொடர்பு சாதன வசதி ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. ஆனால் காவல் நிலைய சேவைகள் எவ்வாறு மக்களுக்குச் சென்று அடைய வேண்டும், எப்படிப் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான விசாரணை வசதிகள் போன்றவை கவனத்தில் கொள்ளப்படவில்லை என்கின்றனர் காவல்துறை உயரதிகாரிகள்.

1977ஆம் ஆண்டு தரம் வீரா தலைமையில் மத்திய அரசு அமைத்த போலீஸ் கமிஷன் தந்த அறிக்கையில் காவல் பணி சிறக்கவும் அதிகார துஷ்பிரயோகம் தவிர்ப்பதற்கும் அரிய பல பரிந்துரைகளை அளித்தது.

காவல்நிலைய சித்திரவதையால் இறந்தவர்களின் மரணக் கணக்கில் முரண்பாடுகள் இருக்கின்றன; தவறிழைத்த காவல் துறையினருக்குத் தண்டனை உடனடியாக வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் காவல்நிலைய, நீதிமன்ற சித்திரவதை மற்றும் அது தொடர்பான மரணமே கூடாது என்பதுதான் மனித நேயமுள்ள அனைவரது
விருப்பமும்.