சமூகப் பார்வை – 38
திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்
நமது நாட்டின் பெரிய வளம் மக்கள் தொகை. அதிலும் மக்கள்தொகையில் 65% பேர் 35 வயதிற்குட்பட்டவர்கள் என்பது நமக்கான பெரும் வாய்ப்பு. இளைஞர்கள் நாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல, நிகழ்காலமும் கூட. இளைஞர்களின் ஆற்றலை ஆக்கபூர்வமான வழிகளை நோக்கிச் செலுத்துவதன் மூலம் இந்த தேசத்தை உலகின் உயர்நிலைக்குக் கொண்டு செல்ல முடியும்.
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இளமைப் பருவம் மிக முக்கியமானதாகும். இந்தப் பருவமானது வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதோடு, நம்மைப் பற்றிய புரிதலையும் நமக்கு அளிக்கிறது. இளைய வயதில்நாம் செய்யும் செயல்கள்தான் எதிர்காலத்தில் நம் வாழ்வின் முக்கிய அங்கமாகத் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தக் காலகட்டத்தில் நாம் எடுக்கும் முடிவுகள் மற்றும் கற்றுக் கொள்ளும் ஒழுக்கங்களும் பொறுப்புகளும் நமது எதிர்காலத்தை வடிவமைக்கின்றன. பிரகாசமான எதிர்காலத்திற்கு நம்மை இட்டுச் செல்கின்றன. எனவே, இளைய பருவம் நாம் பெற்ற வரம்.
உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. அதற்கேற்ப நம்மைத் தயார்படுத்திக் கொள்கிறோமா என்றால் இல்லை. காரணம் வழக்கமான முறைகளை விட்டுவிடத் தயங்குகிறோம். இந்தச் சிக்கல்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு திணறுவது என்னவோ இளைஞர்கள் தான். ‘இளைஞர்கள் ஆற்றலாளர்கள்’ என்பதனை நினைவில் கொள்வது அவசியம்.
இளைஞர்களால் என்ன செய்யமுடியும்?
சவால்களைக் எதிர்கொண்டு மாற்றத்திற்கான தடைகள், மற்றும் முரண்பாடுகள் மற்றும் சார்புகளை அம்பலப்படுத்த அவர்களால் முடியும். அவர்கள் சிறந்த விமர்சன சிந்தனையாளர்கள். மேலும் மாற்றத்தை உருவாக்குபவர்கள். இவர்கள் மற்றவர்களை அணிதிரட்டும் ஆற்றலைக் கொண்டுள்ளனர். பெரியவர்கள் அணுக முடியாத சிக்கல்கள் பற்றிய நுண்ணறிவு அவர்களுக்கு இருப்பதை நாம் காணலாம். இளைஞர்களால் தங்கள் சக வயதினரையும் மொழி, இனங்களைக் கடந்து ஒருங்கிணைக்கமுடியும்.
இன்றைக்கும் மனித உரிமைகள், பாலின சமத்துவம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் பிற முக்கியமான பிரச்சனைகளுக்காக வாதிடும் விஷயங்களில் இளைஞர்கள் முன்னணியில் நிற்கிறார்கள். அவர்களின் பேரார்வம், ஆற்றல் மற்றும் இலட்சியவாதம் ஆகியவற்றால் முற்போக்கான மாற்றத்தை கொண்டு வர முடியும்.
அவர்கள் சாத்தியமான தலைவர்களும் கூட. அரசியலில் அவர்கள் ஈடுபட்டால் புதிய முன்னோக்குகளையும், வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புக் கூறலையும் கொண்டு வரலாம். இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் நாட்டில் வறுமையை ஒழிக்க முடியும். சமூக ஒற்றுமை, பொருளாதாரச் செழுமை மற்றும் ஒரு நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவை அவர்களால் சாத்தியம்.
இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
‘வாழ்க்கை’ என்ற சொல் ஒரு நபரின் கல்வி, வேலைவாய்ப்பு, உணவு, உடற்பயிற்சி உள்ளிட்ட அன்றாடப் பழக்கவழக்கங்கள் மற்றும் பணிகள், பணியிட சூழல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதில் ஒவ்வொரு நிலையிலும் இளைஞர்கள் சவால்களைச் சந்திக்கிறார்கள்.
கல்வி: இன்று அறிவே ஆற்றல். இந்தியாவின் உயர்கல்வி அமைப்பு சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, மாணவர்களின் எண்ணிக்கையில் உலகின் மூன்றாவது பெரியதாகும். அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்கள் இருந்தபோதிலும், கல்வியில் உலகத் தரவரிசையில் முக்கிய இடம் வகிக்கவில்லை. இந்தியாவில் கல்வியில் முதலீடு பெருகினாலும், மக்கள்தொகையில் 25 சதவிகிதம் பேர் படிப்பறிவில்லாதவர்களாக உள்ளனர். இந்திய மாணவர்களில் 10 சதவிகிதத்தினர் மட்டுமே உயர்கல்வியை அடைகின்றனர்.
உயர்கல்வியில் என்ன சிக்கல் என்று பார்த்தால் (1) கற்பித்தல் தரம் (2) கல்வியின் தரம், (3) அரசியல் காரணிகள். உயர்கல்வியில் அதிகாரம் செலுத்த ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர். (4) தார்மீக சிக்கல்கள். அதாவது ஒரு இளைஞருக்கு ஒரு வேலை மற்றும் அதிகச் சம்பளம் பெறுவதில் காண்பிக்கும் ஆர்வம், அதன் மூலமாகச் சமூகத்துக்கு என்ன செய்யவேண்டும் என்ற சிந்தனை இருப்பதில்லை (5) பாடத்திட்ட சிக்கல்கள். மேல்நிலை பள்ளி கல்வி வரை மாணவர்களைக் குழப்பும் பல்வேறு பாடத்திட்ட அமைப்புகள் உள்ளன (6) பொருளாதாரச் சிரமங்கள்.
இன்றைக்கு 60 சதவிகித கல்வி நிறுவனங்கள் தனியாரால் நடத்தப்படுகின்றன. மொத்த மாணவர்களில் ஏறக்குறைய எழுபத்தைந்து சதவிகிதம் பேர் நிதிப் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர். (7). தவறான சமூகப் பார்வை. அரசாங்கங்களுக்கு, அதிக மதிப்பெண் எடுப்பதே வெற்றி. ஆங்கிலம் அறிவே கல்வித் தரத்தின் அளவுகோலாகப் பெற்றோர்கள் கருதுகின்றனர். தாய்மொழி வழிக் கல்வி வழக்கொழிந்து வருகிறது. (8) திட்ட அடிப்படையிலான கற்றல் இல்லை. பெரும்பாலும் புத்தகத்திலுள்ள பாடங்கள் மட்டுமே போதிக்கப்படுகிறது. கள அறிவும், அனுபவ அறிவும் மிகக் குறைவு.
வேலையின்மை: இந்தியாவில் 30 சதவிகிதத்துக்கும் அதிகமான இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். வேலையில்லாத் திண்டாட்டம் குறிப்பாக நடுத்தர வர்க்க இளைஞர்களிடையே அதிகமாகப் பேசப்படுகிறது என்கிறது ஒரு ஆய்வு. 15-34 வயதுக்குட்பட்ட இந்தியர்களில் கிட்டத்தட்ட 36% பேர் வேலையில்லாத் திண்டாட்டத்தை நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாகக் கருதுகிறார்கள் என்று லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் (CMIE) தரவுகளின்படி, நகர்ப்புற வேலையின்மை 8.4% ஆக உயர்ந்துள்ளது, கிராமப்புறங்களில் 7.5% ஆக உள்ளது. உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கு இணையாக வேலை வாய்ப்பு வளர்ச்சி இல்லாததே இதற்குக் காரணம்.
மனச்சோர்வு: மனச்சோர்வு என்பது இளைஞர்களிடையே மிகவும் பொதுவான ஆனால் கவனிக்கப்படாத பாதிப்பாக உள்ளது. இது, அவர்களின் மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம், கல்வி செயல்திறன் மற்றும் சமூக உறவுகளைப் பாதிக்கிறது. WHO அறிக்கையின்படி, உலகில் அதிக மனச்சோர்வடைந்த நபர்கள் இந்தியாவில் உள்ளனர். இந்தியாவில் ஏழு இளைஞர்களில் ஒருவர் எப்போதும் மனச்சோர்வடைந்தவராகவோ அல்லது விஷயங்களைச் செய்வதில் ஆர்வம் காட்டாதவராகவோ இருப்பதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. குடும்பப் பிரச்சனைகள், உயர் கல்விக்கான சிக்கல் மற்றும் செலவு, வேலைவாய்ப்பின்மை, வேலை இருந்தாலும் போதிய வருமானமின்மை, மகிழ்ச்சியாகவும் மன அழுத்தமின்றியும் பணியாற்றும் சூழல் பெரும்பாலான பணியிடங்களில் இல்லை போன்றவை இளைஞர்களிடையே நிலவும் மனசோர்வின்மைக்கான காரணங்களாகும்.
சுரண்டல்: இன்றைய வேலையில்லாத சூழலை பயன்படுத்திக் கொண்டு படித்த இளைஞர்களின் ஆற்றலானது, “பயிற்சி பணியாளர்கள்” என்ற பெயரில் சுரண்டப்படுகிறது. இவர்கள் அதிக வேலையைச் சுமப்பதுடன் குறைந்த ஊதியம் பெறுகிறார்கள், நீண்ட நேரம் வேலை செய்கிறார்கள், சமூகப் பாதுகாப்பு அல்லது சட்டப் பாதுகாப்பு இல்லை. இது இளைஞர்களுக்குப், பணிமீதான ஆர்வத்தினைக் குறைக்கிறது.
பணி மீது வெறுப்பு: தாங்கள் பார்க்கும் வேலை மீது 85% பணியாளர்கள் வெறுப்புக் கொண்டிருக்கிறார்கள் என ஒரு ஆய்வு சொல்கிறது. 2% பேர் மட்டுமே தங்களின் தற்போதைய வேலையில் தொடர விரும்புவதாகக் கூறியுள்ளனர். பெரிய நிறுவனங்கள் சில மட்டுமே வேலை பாதுகாப்பையும் சிறந்த ஊதியத்தையும் வழங்குகின்றன.
சமூகப் பிரச்சனைகள்:இந்தியாவில் உள்ள இளைஞர்கள் போதைப் பழக்கம், சாதிய அபிமானம், வன்முறை, குற்றம், வகுப்புவாதம் மற்றும் பாலினப் பாகுபாடு போன்ற பல்வேறு சமூகப் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இந்தப் பிரச்சனைகள் அவர்களின் தார்மீக விழுமியங்கள், குடிமை உணர்வு, சமூகப் பொறுப்பு ஆகியவற்றைப் பாதிக்கின்றன. இது அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியைத் தடுக்கிறது.
இளவயது மரணங்கள்: இன்றைக்கு உலக அளவில் இளைஞர்கள் எதிர் கொண்டிருக்கும் அபாயகரமான சவால் இளவயது மரணம். நம் நாட்டில் எடுத்துக் கொண்டால் கூட நடனம் ஆடிய போது மரணம், மணமேடையில் மரணம், விளையாடிக் கொண்டிருந்த போது மரணம், உடற்பயிற்சி செய்த போது மரணம், பள்ளி மாணவன் மயங்கி சரிந்து பலி என வரும் செய்திகள் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. அண்மையில் சென்னையில் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த பெண் மருத்துவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இளைஞர்கள் என்ன செய்யவேண்டும்?
கடின உழைப்பு : ஈடுபடும் எந்தத் துறையானாலும் இளைஞர்கள் கடினமாக உழைக்க வேண்டும். விரும்பியதை அடையும் வரை கிடைக்கும் வேலை வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வேலை வாய்ப்பு : எந்த வேலையானாலும் அதற்குத் தகவல் தொடர்பு, குழுப்பணி, சிக்கலைத் தீர்ப்பது மற்றும் தலைமைத்துவம் போன்ற திறன்கள் அவசியம். அதளை வளர்த்துக் கொள்ளவேண்டும். அத்தோடு திறன் மேம்பாடு, மற்றும் புதுமைகளை வளர்ப்பதன் மூலம் சொந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும். திறன்களைத் தரப்படுத்துவதன் மூலம் சுரண்டலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
ேநர்மறையான சிந்தனை: எப்போதும் நேர்மறையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் சிந்திக்க வேண்டும். உணர்ச்சிவசப்படக்கூடாது. ஈடுபடும் தொழிலில் அர்ப்பணிப்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும், இளைஞர்களின் கவனம், தான் அடைய விரும்பும் இலக்குகளில் மட்டுமே இருக்க வேண்டும்.
துணிவு: சமூகச் சிக்கல்களை எதிர்கொண்டு தீர்க்கும் துணிவும், அச்சமற்ற தன்மையும் இளைஞர்களுக்கு இருக்க வேண்டும். இதன் மூலம் இளைஞர் ஒரு திறமையான தலைவராக மாறமுடியும். மேலும் மற்றவர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
நேர நிர்வாகம்: நேரத்தை கடைபிடித்தல் மிக அவசியம். இதுதான் அனைத்து சவால்களையும் எதிர்கொள்வதற்கான அடித்தளம். வெள்ளம் வந்தபோது ஓடிச்சென்று உதவுவதுதான் உதவி.
ஒழுக்கம்: இளமை உணர்வு நிறைந்தது. ஒழுக்கம் இல்லாமல், இளைஞர்கள் ஆர்வத்துடனுடனும், அர்ப்பணிப்புடனும், முழுமையாகவும் வேலை செய்ய முடியாது.
உடல்நலத்தில் கவனம்: இளவயதினருள் 39.8% பேர் உடல் பருமனுடன் இருப்பதாக, தேசியக் குடும்ப நல ஆய்வறிக்கை கூறுகிறது. சிறு தானியங்கள், நார்ச்சத்துமிக்கக் கீரை வகைகள் நமது சாப்பாட்டுத் தட்டில் தினமும் இருக்க வேண்டும். நடை, மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றில் ஈடுபடலாம். மதுவுக்கும் புகைபழக்கத்துக்கும் நிரந்தரமாகக் குட்பை சொல்லலாம். முறையாகத் தூங்கி, மன அமைதி தரும் செயல்களில் ஈடுபட்டு, பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் குறைத்துக்கொள்ள வேண்டும். 35 வயதானவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
அரசு செய்யவேண்டியவை
உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. மக்கள்தொகையில் மிகவும் ஆற்றல்மிக்க மற்றும் துடிப்பான பிரிவை அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர். அவர்களுக்கு அதிகாரமளிப்பதும், அவர்களுக்கான சவால்களைத் தீர்ப்பதற்கும் வழிகாட்டுதல் அரசின் கடமை
கல்வி: இளைஞர்களை வலுவூட்டுவதற்கும் 21ஆம் நூற்றாண்டின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்திச் செய்வதற்கும் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளமாகக் கல்வி உள்ளது. திறன் மேம்பாடு, நடைமுறை அறிவு, நேரடி பயிற்சி, மற்றும் தொழில் வழிகாட்டுதல் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் இளைஞர்கள் முறையான கல்வியைப் பெறமுடியும். வேலைவாய்ப்புக்கேற்ற பாடத்திட்டம் வடிவமைக்கப்படவேண்டும். மேலும், கல்வியில் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், புதுமை மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கவேண்டும். கற்பிக்கும் திறனை மாற்றியமைக்கவேண்டும். பண்புடன் கூடிய தரமான கல்வியை வழங்கவேண்டும். மேலும், தரமான தொடர் கல்வி இளைஞர்களுக்குக் அதிகச் செலவின்றிக் கிடைத்திடவேண்டும்.
ஒருங்கிணைந்த முயற்சி: இளைஞர்களின் திறனை வெளிக்கொணர ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை. இது அரசாங்கம், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு கூட்டு அணுகுமுறையாகும். திறன் மேம்பாடு, தொழில் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் இளைஞர்களை ஈடுபடுத்துவது அவசியம்.
திறன் மேம்பாடு: திறன்மேம்பாடு என்பது குறிப்பிட்ட பணிகளைத் திறமையாகச் செய்வதற்கு ஏற்ற வகையில் தனிநபர்களின் திறன்களை மேம்படுத்தும் செயல்முறையாகும். திறன் மேம்பாடு பெற்ற இளைஞர்களால் தங்கள் முழுத் திறனையும் அடையவும், நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கவும் உதவும்.
வேலைவாய்ப்பும் தொழில்முனைவும்: உலகின் அதிகமான இளைஞர் சக்தியை கொண்டுள்ள இந்தியாவில், இளைஞர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை. இந்தியாவில் வேலை செய்யும் திறன்கொண்டவர்களில் 40 சதவிகிதம் இளைஞர்கள் மட்டுமே வேலையில் இருக்கிறார்கள்.
இளைஞர்களின் தொழில் முனைவு மனப்பான்மை பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கிறது. புதுமைக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதன் மூலமும், ஆதரவை வழங்குவதன் மூலமும், நமது இளைஞர்களின் மறைந்திருக்கும் தொழில் முனைவோர் உணர்வை மேலும், நாம் வெளிக்கொணர முடியும். தொழில் அதிபர் ரத்தன் டாடா, “இளைஞர்கள் தொழில்முனைவோராக மாறி, வேலைகளை உருவாக்கவும் வேண்டும்” என்கிறார்.
இளைஞர்களைத் திறம்படப் பயன்படுத்தினால் அது இந்தியாவின் மிகப்பெரிய சொத்தாக மாறும். இந்தியா உலகின் திறன் தலைநகராக மாறுவதற்கும், பல்வேறு துறைகள் மற்றும் நாடுகளில் திறன்மிக்க மனிதவளத்தின் தேவையைப் பூர்த்திச் செய்வதற்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பைப் பெறும்.
இளைஞர்கள் சமுதாயத்தின் எதிர்காலம். “உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக நீங்களே இருங்கள்” என்ற காந்திஜியின் வார்த்தைகளில் இளைஞர்கள் நம்பிக்கைக் கொள்ளவேண்டும். மாற்றம் உங்களில் இருந்து அதுவும் இன்றிலிருந்து துவங்கட்டும். இந்தத் தேசம் இன்றும் என்றும் இளைஞர்களுக்கானது.. வாருங்கள் இளைஞர்களே.. =