வெற்றியோடு விளையாடு! – 13
டாக்டர். ஆதலையூர் சூரியகுமார்
ஒரு வேலையை 500 பேர் சேர்ந்து ஐந்து நாட்களில் முடிக்கிறார்கள் என்றால் 50 பேர் சேர்ந்து செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பார்கள்? என்று நீங்கள் கணித பாடத்தில் கேள்வியை எதிர் கொண்டிருப்பீர்கள். ஆட்கள் குறைகிற போது நிச்சயமாக அந்த வேலையைச் செய்து முடிப்பதற்கு கூடுதலாக நாட்கள் தேவைப்படும். ஆனால் அந்தக் கேள்வியை இப்படிக் கேட்டால் விடை வேறு மாதிரி இருக்கும். 500 ஆண்கள் சேர்ந்து ஒரு வேலையை 5 நாட்களில் முடிக்கிறார்கள் என்றால் அதே வேலையை 500 பெண்கள் செய்வதற்கு எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்வார்கள்? என்று கேட்டால் ஒரே நாளில் வேலையை முடித்து விடுவார்கள் என்பது தான் விடையாகக் கிடைக்கும்’ என்கிறார் கும்பகோணம் சக்தி ரோட்டரி கிளப் செயலாளர் திருமதி ஆனந்தி.
இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பெண்கள் சக்தி மிக்கவர்கள், ஆற்றல் மிக்கவர்கள், அவர்களது மனோசக்தி மூலம் அசைக்க முடியாத மலையைக் கூட அசைத்து விடமுடைய கூடிய ஆற்றல் மிக்கவர்கள். சரித்திரத்தில் இதற்கு பல சான்றுகள் உள்ளன. ஜான்சிராணி, வேலு நாச்சியார், இராணி மங்கம்மாள், தொடங்கி சமீப கால உதாரணங்களாக குத்துச்சண்டையில் மேரி கோம், கிரிக்கெட்டில் மிதாலி ராஜ், செஸ் விளையாட்டில் வைஷாலி வரை அப்படி சாதித்தவர்கள். அதனால்தான் அப்படிச் சொல்கிறேன் என்கிறார் நம்பிக்கையுடன்.
‘‘சொந்த ஊர் மதுரை என்றாலும் அப்பாவின் வேலை காரணமாக என்னுடைய பள்ளிப்படிப்பு பல்வேறு நகரங்களில் தொடர்ந்தது. கும்பகோணம், சென்னை, மதுரை, கோயம்புத்தூர் என்று பெரிய நகரங்களில் சுற்றி வந்திருக்கிறேன்.
என்னுடைய கல்லூரிப் படிப்பை முழுமையாக முடிக்க முடியாமல் போய்விட்டது. ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்த வயதில் திருமணம். குடும்பம், குழந்தைகள் என்று ஒரு சிறு வட்டத்திற்குள் சுற்றும் சராசரிப் பெண்ணாக நானும் மாறிப் போனேன். ஆனால் ஏதேனும் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மங்கிப் போய்விடவில்லை. அது மனதிற்குள் சுடர் விட்டு எரிந்து கொண்டே இருந்தது. திருமணம், குழந்தைகள், என்று ஓரளவு செட்டில் ஆன பிறகு ஏதாவது சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு விதம் விதமான தங்க நகைகள் டிசைன்களை கலெக்சன் செய்வது மிகவும் பிடிக்கும்.
சிறுவயதிலேயே தோழிகளுக்கு அவர்களுக்கு ஏற்ற மாதிரி நல்ல டிசைன் வளையல்களை செலக்ட் பண்ணி கொடுப்பேன். அது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதையே கொஞ்சம் டெவலப் செய்து தங்க நகைகளை செலக்ட் பண்ணிக் கொடுப்பதை தொழிலாகச் செய்யலாம் என்று தொடங்கினேன். முதலில் என்னுடைய நெருங்கிய வட்டத்தில் இருந்த தோழிகளுக்கு மட்டுமே செய்து கொடுத்தேன். அவர்களுக்கு என்னுடைய டிசைன் செலக்சன் மிகவும் பிடித்திருந்ததால், தொடர்ந்து என்னிடம் வாங்க ஆரம்பித்ததுடன், தோழிகளையும் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். அதனால் ஓரளவு வருமானம் கிடைத்தது. நண்பர்கள் வட்டம் விரிவடைந்தது. என்னுடைய சொந்த வாழ்க்கையில் ஓரளவு காலூன்றி நிற்கலாம் என்ற தைரியம் வந்தவுடன் சமூக சேவை செய்யும் ஆர்வம் வந்துவிட்டது. அதுவும் சிறுவயதில் இருந்தே வந்ததுதான். அந்த ஆர்வத்திற்கான வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது.
ஆம், கும்பகோணம் சக்தி ரோட்டரி கிளப்பில் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறேன். இது முழுக்க முழுக்க பெண்களே நடத்தக்கூடிய கிளப். ஆனாலும்,சேவை என்று வருகிறபோது அது பெண்கள் என்று மட்டும் பிரித்து பார்க்காமல் ஒட்டுமொத்த சமூகத்திற்காகவே செய்து கொண்டிருக்கிறோம். பள்ளிகளைத் தேடிச் சென்று உதவி செய்கிறோம். இதே சக்தி ரோட்டரி கிளப் தலைவராக அடுத்த ஆண்டு தேர்வு செய்யப்பட இருக்கிறேன். அதன் மூலம் என்னுடைய சேவை வட்டம் மேலும் விரிவடையும்.
இந்த நேரத்தில் நான் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் பொழுது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனையோ தடைகள், சிரமங்கள், குறுக்கீடுகள், எல்லாவற்றையும் தாண்டித் தான் இந்த உயரத்தை எட்டி இருக்கிறேன். இது போன்ற பொதுச் சேவை அமைப்புகளில் பெண்கள் பொறுப்பு வகிப்பது என்பதை மிகப்பெரிய சாதனையாகவே கருதுகிறேன் ஏனென்றால் இது ஒரு சர்வதேச அமைப்பு. அமைப்பு சார்ந்த உயர்மட்ட குழுவின் ஆலோசனைப்படி நம்முடைய சேவையை சமூகத்தில் அடித்தட்டு மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அந்த வகையிலேயே இதை உயரமான இடம் என்று கூறுகிறேன். இந்த உயரத்திற்கு மற்றவர்களையும் அழைத்து வர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். அதே சமயம் என்னுடைய இலக்கை அடைந்து விட்டதாக நான் கருதவில்லை. ஆனால் வெற்றியை நோக்கிய எனது பயணத்தில் ஒரு மைல் கல் என்று வேண்டுமானால் சொல்லலாம்’’ என்கிறார் திருமதி ஆனந்தி.
சக்தி ரோட்டரி கிளப் செயல்பாடுகள் மூலமும் பிற சேவைகள் மூலமும் ஆனந்தி அவர்கள் ஆனந்தமான சேவையை தொடர்ந்து செய்து அவர் தனது வெற்றி இலக்கை அடைய ‘ஆளுமைச் சிற்பி’ வாழ்த்துகிறது.