
சாதனையாளர்கள் பக்கம்
மதுரை.ஆர்.கணேசன்
தமிழகத்தில் சாதிக்க நினைக்கும் மாணவர்கள் பல வகையில் சாதனையாளர்களாகத் தடம் பதிக்கிறார்கள்..! அத்தகைய வெற்றி பெறும் சாதனை மாணவர்கள் தங்களை முன்னிறுத்தி தமிழாலும் வெற்றி பெறுகிறார்கள்..!
தமிழ் தாத்தா உ.வே.சா கண்டெடுத்த பொக்கிஷங்கள் சங்க இலக்கியங்கள். அதில் “..தொல்காப்பியம்..” தமிழ் மொழியின் வேர்களின் ஒன்றாக விளங்குகின்றது..!
அப்பேர்ப்பட்ட “..தொல்காப்பியம்
3 – அதிகாரங்கள், 27 இயல்கள், 1610 நூற்பாக்களைத் தன்னகத்தே கொண்டது..!
தொல்காப்பியம் நூலை எழுதிய தொல்காப்பியர் சமதக்கினி முனிவரின் மகனாவார். இவரது இயற்பெயர் “..திரணதூமாக்கினியர்..” என்றும் இவருடன் உடன் பிறந்த சகோதரர் பரசுராமர் என்றும் நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார்.
தொல்காப்பியர் கி.மு.,200, கி.மு.,500, கி.மு.,5000, கிமு.,12,000 என்று யூகத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டாலும் அவர் வாழ்ந்த காலத்தை யாராலும் சரியாகக் கணிக்க முடியவில்லை?!
திருக்குறளை மாணவர்கள் முற்றோதல் செய்திருக்கிறார்கள், மற்றும் தமிழ் ஆர்வலர்களும் முற்றோதல் செய்வதும் அவ்வப்போது நடைபெறுகிறது.
அதே போல சிலப்பதிகாரமும் முற்றோதல் செய்வதையும் கேள்விப்பட்டிருக்கிறோம், தொல்காப்பியம் முற்றோதல் செய்வதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?!
தொல்காப்பியத்தை, தமிழ்ச் சான்றோர்களைத் தவிர மாணவர்கள் முற்றோதல் செய்திருக்கிறார்களா என்றால் விரல் விட்டு எண்ணி விடலாம்..?
தொன்மையின் சின்னமான “..தொல் காப்பியத்தை..” தன்னுடைய விடா முயற்சியால் விருதுநகர் மாவட்டம் சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கின்ற மாணவி மு.உமாமகேஸ்வரி முற்றோதல் செய்து சாதனை படைத்திருக்கிறார்..!!!
இவரது சாதனை இந்திய அளவிலும் மற்றும் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்று அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது..!!!
இனி நம்மோடு மு.உமாமகேஸ்வரி..,
“..நான் ஆறாம் வகுப்புப் படிக்கும் போது கொரோனா காலம், மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை, ஆசிரியர்கள் மட்டுமே பள்ளி சென்றார்கள்.
எங்களைப் போன்ற மாணவர்கள் பள்ளி செல்ல முடியாததால் 6 முதல் 12 ஆம் வகுப்புப் படிக்கும் மாணவர்களுக்கு வாட்ஸ்ஸாப் குழு ஆரம்பித்தார்கள், அதில் எங்களுக்கு ஒரு செய்தி வந்தது.
திருக்குறள் மனனம் செய்ய ஆர்வமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்ற அந்தச் செய்தியை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அனுப்பியிருந்தார்கள், அதைப் பார்த்து விட்டு நானும், எட்டாம் வகுப்புப் படிக்கும் நான்கு மாணவிகளும் ஒன்றாகச் சேர்ந்து படிக்கச் சென்றோம்.
ஒரு சமயத்தில் ஐந்து பேரில் மூன்று பேரால் தொடர முடியாமல் விலகி விட்டார்கள், முடிக்கும் போது நானும் இன்னொரு மாணவி மட்டும் “..திருக்குறள் முற்றோதல்…” செய்தோம்.
அத்துடன் நாங்கள் “..1330 திருக்குறளைப் பார்க்காமல் எழுதியது ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்..” சாதனையாகப் பதிவு பெற்றது, எங்களை ஊக்கப்படுத்த ஆசிரியையும் எங்களுடன் சேர்ந்து எழுதினார்கள்.
தொல்காப்பியத்தில் எனக்கு எப்படி ஆர்வம் வந்தது என்றால் அதாவது என்னோட ஆசிரியை ஜான்சிராணியின் கணவர் நா.சுப்பையாபுரம் அரசுப் பள்ளித் தமிழாசிரியர் ராஜசேகர் ஐயா மற்ற மாணவிகளுக்கு அந்த நேரத்தில் சிலப்பதிகாரம் கற்றுத் தந்து கொண்டிருந்தார்கள்.
அதை பார்த்து விட்டு ‘‘தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தை நீ முற்றோதல் செய்யலாம்’’ என்று என்னுடைய ஆசிரியை அறிவுறுத்தினார், அதன் அடிப்படையில் நான் தொல்காப்பியம் முற்றோதல் செய்யத் தொடர் பயிற்சி எடுத்துக் கொண்டேன்.
அதில் எழுத்ததிகாரத்திலுள்ள 9 இயல்கள் 483 நூற்பாக்களையும் படித்து ஒப்புவித்தேன், அடுத்து சொல்லதிகாரத்திலுள்ள 9 இயல்கள் 463 நூற்பாக்களை ஒப்புவித்தேன்.
பொருளதிகாரம் படிக்கும் போது எனக்குச் சற்று பயமாக இருந்தது, ஏனெனில் பொருளதிகாரத்தில் உள்ள நூற்ப்பாக்கள் எல்லாம் பெரியதாக இருந்தது.
அதற்கு மட்டும் தமிழாசிரியர் ராஜசேகர் ஐயா என்னை அலைபேசியில் அழைத்து உன்னால் முடியும் என்றும், தெரியாததையும் தெளிவாகச் சொல்லிக் கொடுத்தார்கள்.
அத்துடன் அரசுப் பள்ளி மாணவர்களால் தான் எதையும் சாதிக்க முடியும் என அடிக்கடி ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தார்கள், ஆங்கிலத்தில் இன்ஸ்பிரேசன் (Inspiration) என்று சொல்லுவார்கள் அது முழுக்க முழுக்க ஐயாவால் தான் நடந்தது.
ஒரு நாளைக்கு இரண்டு பக்கம் வாய்ஸ் மெசேஜ்ஜில் வாசித்து அனுப்புவார்கள் ஐயா. எந்தெந்த இடங்களில் ஏற்ற இறக்கத்துடன் உச்சரிக்கிறார் எனக் கவனிப்பேன்.
இப்படியாக 1610 நூற்பாக்களையும் படித்து ஒப்புவிக்கும் போது நான் சில நூற்பாக்களை விட்டு விடுவேன், மறந்து விடுவேன் அதனையெல்லாம் ஐயா கொடுத்த பயிற்சியும், ஆசிரியை கொடுத்த அன்பும், ஊக்கத்தில் தான் நான் தவறாமல் முற்றோதல் செய்து விட்டேன்.
இப்படி நான் தொல்காப்பியத்தை முழுவதுமாக முற்றோதல் செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது, தொல்காப்பியம் படித்ததால் தான் இலக்கணச் செய்திகளையும் இலக்கியச் செய்திகளையும் ஆழமாகத் தெரிந்து கொண்டேன்.
குறிப்பாகப் பொருளதிகாரத்தில் “..இல்வாழ்க்கைச் செய்தியில் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு, பிந்தைய நிகழ்வு கருத்துக்கள்..” சொல்லப்பட்டிருக்கிறது.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், வாழ்க்கை நாகரீகம் உள்பட அனைத்தும் படித்துத் தெரிந்து கொள்ள “..தொல்காப்பியம்..” படியுங்கள்.
மேலும் “..தொல்காப்பியத்தில் நான் உள் வாங்கியிருக்கிற இலக்கியங்கள், இலக்கணங்கள் யாவும் எதிர்காலத்தில் மேடைப் பேச்சாக வெளிப்படுத்த விரும்புகிறேன் அதற்காக முயற்சி செய்வேன், அப்படிப் பயணிக்கும் போது தொல்காப்பியமே எனக்குப் பாதையை வகுத்துத் தரும் என் நம்புகிறேன்.