
முயற்சி தரும் முன்னேற்றம்!
‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்
மந்தச் 2019 – ஆம் ஆண்டு, ஜனவரி 28 – அன்று டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையின் கதாநாயகர்கள் டாக்டர் ரவீந்திரா கோல்ேஹ மற்றும் அவரது மனைவி டாக்டர் ஸ்மிதா கோல்ஹே.
1980 – ஆம் ஆண்டு நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்து M.B.B.S. பட்டம் பெற்றவர் டாக்டர் ரவீந்திரா கோல்ேஹ. உடன் பயின்ற எல்லோரும் எப்படி மருத்துவத் தொழில் செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்த வேளையில், ரவீந்திரா கோல்ேஹ வேறு விதமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.
அண்ணல் மகாத்மா மற்றும் வினோபாவேயின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு அவர்களது வாழ்வியல் சார்ந்த நூல்களைப் படித்து வந்தவர் டாக்டர் ரவீந்திரா கோல்ேஹ, அவரது காந்தியத் தேடலுக்குத் துணையாக அமைந்தது அவர் வாசித்த, டேவிட் வெர்னர் எழுதிய ‘மருத்துவர் இல்லாத இடத்தில்’ என்ற புத்தகம். 1980 – களில் ஓரளவு இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் மருத்துவ வசதி கிடைத்துவிட்டது. ஆனாலும் பல பகுதிகளில் மக்கள் மருத்துவ வசதியின்றித் தவிப்பதை டாக்டர் ரவீந்திரா செய்திகள் மூலம் கண்டுகொண்டார்.
தான் மிகவும் மதித்த பல மருத்துவர்களிடம் தனது எண்ணத்தை அவர் பகிர்ந்துகொண்ட போது, பலரும் மருத்துவர் இல்லாத பகுதிகளில் பணிசெய்வதில் உள்ள சவால்களையும் எடுத்துச் சொன்னார்கள். ஒரு மூத்த மருத்துவர் முக்கியமான மூன்று பிரச்சினைகளை எடுத்துச் சொன்னார்.
தேவையான நேரத்தில், அவசர காலத்தில் கிராமங்களின் உள்பகுதிகளில் இரத்தம் கிடைக்காது. பிரசவம் பார்க்கத் தேவையான வசதிகள் இருக்காது. மேலும் நோயாளிகளுக்கு நிமோனியா வந்தால் அதைக் கண்டறிய எக்ஸ்ரே வசதி இருக்காது. மற்றும் அடிக்கடி உருவாகும் வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி போன்ற நோய்களைக் குணமாக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்ற அறிவுரைகளை வழங்கினார்.
எனவே டாக்டர் ரவீந்திரா முதலில் மும்பையில் ஒரு மருத்துவமனையில் சில மாதங்கள் பணிபுரிந்து தன் மருத்துவ அனுபவத்தை அதிகரித்துக் கொண்டார்.
ஒரு ரூபாய் மருத்துவர்
1985 – ஆம் ஆண்டில் மஹாராஷ்டிரா மாநிலம், அமராவதி மாவட்டத்தைச் சேர்ந்த மேல்காட் என்ற பகுதிக்கு அருகில் 40 – கி.மீ. தொலைவிலுள்ள பைராகர் என்ற தொலைதூரக் கிராமம் தான் டாக்டர் ரவீந்திரா தேர்ந்தெடுத்த கிராமம்.
ஒவ்வொரு நாளும் 40 – கி.மீ. தூரம் நடந்து சென்று அங்கு வாழ்ந்துவந்த பழங்குடி மக்களுக்குப் பணிசெய்வதே அவரது நோக்கம். டாக்டர் ரவீந்திராவுக்கு இயற்கையிலேயே காடுகள் மீது ஈர்ப்பு அதிகம் இருந்தது. இந்த பைராகர் கிராமம் மேல்காட் புலிகள் காப்பகத்திற்கு அருகில் இருந்த பசுமையான பகுதி என்பதால் இச்சூழலும் அவருக்குப் பிடித்துப் போனது.
முதலில் டாக்டர் ரவீந்திராவின் மருத்துவச் சேவையைப் பெற்றுக்கொள்ள மிகவும் தயக்கம் காட்டினார்கள் பழங்குடி மக்கள். அவர்களது எண்ணப்படி நோய்கள் என்பது கடவுள் தரும் தண்டனை. எனவே நோய் வந்து இறப்பது கடவுளின் திட்டம் என்ற மனஓட்டத்தில் அவர்கள் இருந்தார்கள். டாக்டர் ரவீந்திரா கோல்ேஹ மருத்துவப் பணியைத் தொடங்கிய போது அங்கே பிறக்கும் ஐந்து குழந்தைகளில் ஒன்று இறந்துவிடும். அதாவது 1000 பிறப்புகளில் 200 பேர் இறப்பது என்பது சாதாரணமாக இருந்தது.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் எதிர்ப்பு சக்தியின்றே காணப்பட்டனர். பள்ளிக்குச் செல்வதற்கு முன்பே 1000 – இல் 400 பேர் இறந்துவிடும் சூழல் தான் காணப்பட்டது. இந்தப் பகுதியில்தான் கட்டாயம் பணிசெய்ய வேண்டும் என்று திடமான உறுதியுடன் டாக்டர் ரவீந்திரா தன் மருத்துவ சேவையைச் செய்தார். தினமும் 40 – கி.மீ. நடந்து வந்து, மக்களைத் தேடி மருத்துவம் செய்து வந்த அவரிடம் பழங்குடி மக்கள் மருத்துவத்துக்கு வர ஆரம்பித்தார்கள்.
இம்மக்களுக்குச் சேவை செய்யத் தன்னையே இன்னும் தயார்படுத்திட எண்ணி மருத்துவத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுக்கொண்டார் டாக்டர் ரவீந்திரா கோல்ேஹ. அப்போது தன்னோடு இணைந்து பணிபுரிய ஒருவர் இருந்தால் நலமாக இருக்கும் என்று எண்ணித் தன் வாழ்க்கைத் துணையைத் தேடினார்.
டாக்டர் ஸ்மிதாவின் வரவு
மருத்துவத்தில் M.D. பட்டம் பெற்ற போது ஊட்டச்சத்துக் குறைபாடு பற்றிய ஆய்வு மேற்கொண்டிருந்தார் டாக்டர் ரவீந்திரா. இது பலராலும் பாராட்டப்பட்டது. இப்படிச் சிறப்பான ஒரு மருத்துவராக இருந்த இவரை மணந்துகொள்ள யாரும் விரும்பவில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இவரை நிராகரித்துவிட்டனர். அதற்கான காரணங்கள் இதோ, “தன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புபவர்களுக்கு நான்கு நிபந்தனைகளைக் கூறிப் பெண் கேட்டார் டாக்டர் ரவீந்திரா கோல்ேஹ. ஒன்று – ஒவ்வொரு நாளும் 40 – கி.மீ. நடந்து தன்னோடு பயணிக்கத் தயாராக இருக்க வேண்டும். இரண்டு – தினமும் நோயாளிகளிடம் வாங்கும் ஒரு ரூபாய் – ஆக மாதத்துக்கு 400 – ரூபாய்க்குள் குடும்பம் நடத்த வேண்டும். மூன்று – திருமணம் வெறும் 5 – ரூபாயில் மட்டுமே நடத்தப்படும். நான்கு – ஏழை மக்களுக்காக உழைக்க சில நேரம் பிச்சைகூட எடுக்க வேண்டியிருக்கும்” என்பதே அந்த நிபந்தனைகள்.