முயற்சி தரும் முன்னேற்றம்! (புதிய தொடர்)
‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்

ந்த ஐந்து வயதுச் சிறுவனைத் தவிர அவனது குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் கடற்கரையில் நீந்தி விளையாடினார்கள். அதை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவனின் உறவினர், ‘‘இன்னும் ஓராண்டில் நீ நீச்சல் கற்றுக்கொண்டால் உனக்குப் பத்து ஷில்லிங் பணம் தருவேன்’’ என்று சொன்னதும், ஆர்வமுடன் அடுத்த இரண்டு மாதத்துக்குள் நீச்சலில் தேறிவிட்டான். இப்படிச் சிறுவயது முதலே எதையும் ஆர்வமுடன் கற்கும் பழக்கம் கொண்டிருந்த அந்தச் சிறுவனுக்கு ‘டிஸ்லக்ஷியா’ என்ற கற்றல் குறைபாடு இருந்தது.
அவனைச் சரியாகப் புரிந்துகொள்ளாத ஆசிரியர்கள் ‘‘இவன் எதிர்காலத்தில் ஒரு முரடனாக வருவான்’’ என்றார்கள். சிலர் ‘‘பெரிய பணக்காரனாக வருவான்’’ என்றார்கள். படிப்பதற்கு லாயக்கு இல்லை என்று புறக்கணிக்கப்பட்ட அந்தச் சிறுவன் தன் பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டான். ஆனால், எதையாவது செய்து சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் உள்ளத்தில் இருந்தது.

அந்தச் சிறுவனின் பெயர் ‘ரிச்சர்ட் சார்லஸ் பிரான்சன்’ என்பதாகும். எட்வர்ட் ஜான்சன் பிரான்சன் என்ற வழக்கறிஞருக்கும், பாலே நடனக் கலைஞர் மற்றும் விமானப் பணிப்பெண்ணாகப் பணி செய்த எவெட் ஹன்ட்லிக்கும் மகனாக 1950 – ஆம் ஆண்டு ஜூலை 18 – இல் பிறந்தவர்.

பிரான்சனின் அப்பா திருமணம் ஆகிப் பிள்ளைகள் பிறந்ததும் எவெட் விமானப் பணிப்பெண் பணியை விட்டுவிட்டுப் பிள்ளைகளைக் கவனித்தார். சிறிய மரப்பெட்டிகள், குப்பை சேர்க்கும் பெட்டிகளைச் செய்து வீட்டு வருமானத்துக்கு உதவினார். ஒவ்வொரு மாதமும் வருவாய்க்கு ஏற்ப பட்ெஜட் போட்டு செலவு செய்யும் விதத்தைத் தன் பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்த்தாராம். ஆகையால் இளம் வயது முதலே பணத்தைச் சம்பாதிப்பது மற்றும் முறையாகச் செலவழிப்பதில் பயிற்சி பெற்றதாகப் பின்னாளில் பிரான்சன் கூறினார்.

பிரான்சனின் கொள்ளுப்பாட்டனார் தமிழ்நாட்டின் கடலூருக்கு 1773-ஆம் ஆண்டு வந்துள்ளார். இங்கு ஆரியா என்ற தமிழ்ப் பெண்மணியைத் திருமணம் செய்துள்ளார். அதன் பிறகு நான்கு தலைமுறைகளாக அவர்கள் சென்னையில் வாழ்ந்துள்ளார்கள். ஆக பிரான்சனிடம் தமிழ் மண்ணின் இரத்தமும் கலந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

16 – வயதில் பிரான்சன்

தன் நண்பரோடு சேர்ந்து கிறிஸ்மஸ் மரம் வளர்த்து விற்கலாம் என்று விதைகளைத் தன் வீட்டருகில் இருந்த நிலத்தில் விதைத்து அவை முளைக்கும் என்று பல நாள் இவரும், நண்பரும் காத்திருந்தார்கள். ஆனால் விதை முளைக்கவில்லை. என்னவென்று ஆய்ந்த போது அருகிலே சுற்றித் திரிந்த முயல்கள் அந்த விதைகளைச் சாப்பிட்டுவிட்டது என்று தெரிந்தது. உடனே அந்த முயல்களைப் பிடித்து விற்றுக் கொஞ்சம் பணம் சம்பாதித்தார் பிரான்சன். இதுதான் அவரது முதல் வியாபாரம், வருமானம்.

பள்ளியில் படித்த போது கிரிக்கெட் மற்றும் கால்பந்தில் நன்றாக விளையாடிப் பெயர் பெற்றார். ஆனால் பரிசு பெறவில்லை. ஒரே ஒருமுறை கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார். இதுதான் அவர் பள்ளி வாழ்வில் பெற்ற முதல் மற்றும் இறுதியான அங்கீகாரம். ஆனால், இந்த அங்கீகாரம் தான் அவர் வாழ்க்கையை மாற்றியது.

ஆம், 16 – வயதில், கற்றல் குறைபாட்டால் படிக்க முடியாத நிலையிலிருந்த பிரான்சன் மாணவர்களுக்கு என்று ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். எப்படிப் பத்திரிகை நடத்துவது?, பணம் வேண்டுமே என்று சிந்தித்தார். முழுக்க முழுக்க விளம்பரம் பெற்று பல பெரிய எழுத்தாளர்களின் கட்டுரைகளைக் கொண்டு ‘STUDENT’ ‘மாணவர்’ என்ற ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார். முதல் இதழே அமோகமாக விற்றது. விரைவில் ஐம்பதாயிரம் பிரதிகள் விற்பனை என்று அந்தப் பத்திரிகை இங்கிலாந்து முழுவதும் புகழ்பெற்றது.

இந்தச் சூழலில் ‘மாணவர்களுக்கு ஆலோசனை மையம்’ என்ற ஒன்றை இலவசமாக நடத்தினார் பிரான்சன். பலரிடமிருந்து வந்த கடிதங்களுக்கும் பதில் எழுதி ஊக்கம் தந்தார். அதற்காக முழுநேரமும் செலவு செய்த போது தனது பத்திரிகையில் முழுக் கவனம் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டார். ஆகையால் பத்திரிகை விற்பனை குறைந்தது. அப்போது வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினார்.

அக்காலத்தில் இசைத்தட்டுகள் மக்களிடையே விரும்பி வாங்கப்பட்டது. பிரான்சன் இசைப் பிரியர். எப்போதும் பாடல்களைக் கேட்கும் ரசிகர். அன்று ஒரு இசைத்தட்டு விலை ஐம்பது ரூபாய் இருந்தது. ஆனால் முப்பது ரூபாய்க்குக் கொடுக்கலாமே என்று முயற்சித்தார். அதன்படி இசைத்தட்டை வாங்கி குறைந்த இலாபத்தில் முப்பது ரூபாய்க்கு விற்க ஆரம்பித்தார். இதற்கு கடை ஒன்றும் திறக்கவில்லை. தனது ஸ்டூடன்ட் பத்திரிகையில் விளம்பரம் தந்தார்.

இசைத்தட்டை தபால் மூலம் அனுப்புவதாகச் சொன்னார். இந்தத் தொழிலை 1970 – ஆம் ஆண்டு தொடங்கினார். ‘மெயில் ஆர்டர்’ என்று இது தொடங்கப்பட்டது. பணம் தபால் மூலம் வந்துவிடும் என்பதால் சுலபமாக தபால் மூலமே இசைத்தட்டுகளை விற்றார். இருபது ரூபாய் குறைகிறது, வீட்டிற்கே வருகிறது என்றதும் ஏகப்பட்ட வரவேற்பு. நன்றாக விற்பனை நடைபெற்றது. நிறையப் பணம் பிரான்சனுக்குக் கிடைத்தது.
ேசாதனை தந்த சாதனை

இப்படித் தபால் மூலம் இசைத்தட்டு அமோகமாக விற்றுக்கொண்டிருந்த சூழலில், இங்கிலாந்தில் தபால் ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். ஓரிரு நாளில் இந்தப் போராட்டம் நின்றுவிடும் என்று பிரான்சன் எதிர்பார்த்தார். ஆனால் பல வாரங்கள் ஆகியும் தொடர்ந்ததால் இவரது இசைத்தட்டு விற்பனை சரிந்தது.

அப்போது இலண்டனில் ஆக்ஸ்போர்டு சாலையில் ஒரு பேருந்து நிறுத்தம் அருகிலிருந்த ஷுக்கடையின் மேல்பகுதியில் இசைத்தட்டு விற்பனைக்கு ஒரு கடையைப் பிடித்தார் பிரான்சன். அந்தக் கடை முதலாளியிடம், வாடகைத் தர இயலாது என்பதையும் தங்களது இசைத்தட்டைத் தேடிப் பல இளைஞர்கள் வருவார்கள். எனவே உங்கள் ஷுக்கள் விற்பனை கூடும் என்று கூறிட, அவரும் அதற்குச் சம்மதித்தார். அந்தக் ஷுக்கடை மேலே அமைந்த இசைத்தட்டுக் கடைக்கு ‘VIRGIN RECORDS’ என்று ெபயரிட்டார். கடையில் இசை பற்றித் தெரிந்த சிலரையும் வேலைக்கு வைத்திருந்தார். மேலும் தேவையான இசைத்தட்டைப் போட்டுக் கேட்பதற்கு ஒரு சிறிய பகுதியும் இருந்ததால் பலரும் வந்து ஒன்றுக்குப் பல என்ற இசைத்தட்டுகளைப் பெற்றுச் சென்றார்கள். இதனால் மீண்டும் அவரது தொழில் வளர்ந்தது.

இசைத்தட்டு விற்பனை அதிகரித்து வந்ததாலும், தேவை அதிகம் என்பதையும் உணர்ந்த பிரான்சன் ஒரு நல்ல கட்டடத்தை அதிகக் கடன் வாங்கி வாங்கினார். அங்கே இசையைப் பதிவு செய்யும் இடமும் இருந்ததால், பலர் வாடகை தந்து அந்த இடத்தைப் பயன்படுத்தினார்கள். பிரான்சனும் மிகச்சிறந்த இசைக்கலைஞர்களைக் கொண்டு நான்கு ஆல்பங்களை வெளியிட்டார். 1973 – ஆம் ஆண்டு மே மாதம் வெளிவந்த ‘‘Mike Oldfied and friends, Tubular Bells’’ என்ற ஆல்பம் உலகம் முழுக்கப் புகழ்பெற்றது. அவரது இசைத்தட்டுகள் வியாபாரம் பெரும் இலாபம் தந்தது.

தொடர் பயணங்கள்

‘நெக்கர்’ என்ற ஒரு தீவினை வாங்கிட விரும்பினார் பிரான்சன். ஆனால் விலை அதிகமாகத் தோன்றியது. அப்போது இலண்டன் திரும்ப வேண்டிய விமானத்தில் கோளாறு என்றும் தாமதம் ஆகும் என்று கூறினார்கள். பிரான்சன் போலப் பலரும் அந்தத் தீவில் காத்திருக்க வேண்டியிருந்தது. அப்போது பிரான்சனுக்கு ஒரு உத்தி தோன்றியது. அதன்படி ஒரு தனியார் விமானத்தை வாடகைக்கு எடுத்தார். அதன் பயணக் கட்டணத்தினைச் செலுத்திப் பயணிக்க விருப்பமுள்ளவர்கள் உள்ளனரா என்று கேட்ட போது எல்லோரும் விருப்பம் தெரிவித்தார்கள். தீவில் காத்திருந்தவர்களைத் தான் எடுத்த வாடகை விமானம் மூலம் கொண்டு வந்தார்.