கலாமைக் கொண்டாடுவோம் 12 –
இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

விஞ்ஞானி வி.செல்வமூர்த்தி – இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல்

முனைவர் வில்லியம் செல்வமூர்த்தி, டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானியாக, உயிர் அறிவியல் ஆராய்ச்சிப்பணிகளுக்குத் தலைமையேற்று வழி நடத்தியவர்.
தமிழகத்தின் சிவகாசியைச் சேர்ந்த இவர், வேலூர், கிருத்துவ மருத்துவக் கல்லூரியில் மனித உடலியலில் எம்.எஸ்சி பட்டம் பெற்றவர். தில்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

மத்திய அமைச்சரவையின் அறிவியல் ஆலோசனைக்குழு உறுப்பினராகப் பங்களித்தவர். ஐந்து கெளரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றவர். ஏறக்குறைய 25 ஆண்டுகள் அப்துல் கலாமுடன் ஒருங்கிணைந்து பணியாற்றியவர். தற்போது அமிட்டி பல்கலையின் சத்தீஷ்கர் வளாக வேந்தராகச் சேவையாற்றி வருகிறார்.

ஒரு சாயங்காலத்தில் அப்துல் கலாம் அவர்களின் நினைவுகளை காணொலி வாயிலாக அசைபோட்டோம். அந்த உரையாடலில் இருந்து…

கலாம் அவர்களுடனான முதல் சந்திப்பு எப்படி நிகழ்ந்தது?

ஹைதராபாதில் நடந்த இந்திய அறிவியல் மாநாட்டில் உரையாற்ற அப்துல் கலாம் அழைக்கப்பட்டிருந்தார். நானும் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தேன். அப்போது தான் அவரை முதன் முதலில் சந்தித்தேன். முதல் பார்வையிலேயே அவருடைய விசிறியாக மாறினேன்.
மக்கள் சார்ந்த அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் டி.ஆர்.டி.ஓ நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. அப்துல் கலாமின் பங்களிப்பு இதில் முக்கியம். கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் டி.ஆர்.டி.ஓ கண்டுபிடிப்பான 2டிஜி (2-டிஆக்சி -டி-குளுகோஸ்) மருந்து உயிர்காக்கும் அருமருந்தாக பயன்பட்டது. அதைப் பற்றி?

ராணுவ ஆராய்ச்சியின் உபப்பயன்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்று கலாம் கருதினார். இதற்காக உயிர் மருத்துவ தொழில்நுட்பச் சங்கத்தையும் நிறுவினார். வெண்டிலேட்டர், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் என ராணுவ வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட பல தொழில்நுட்பங்கள் கரோனா காலத்தில் பொதுமக்களை சென்றடைந்தன. 2டிஜி மருந்து உருவாக்கப்பட்ட பின்புலம் சுவாரசியமானது.

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காமா கதிரியக்க சிகிச்சை வழங்கப்படும். இந்தக் கதிரியக்கம் கேன்சர் பாதித்த செல்களோடு, பாதிக்கப்படாத செல்களையும் அழிக்கும். இதற்குத் தீர்வு காண கலாம் ஒரு குழுவை அமைத்தார். அதன் தலைவராக என்னை நியமித்தார். கேன்சர் பாதித்த செல்களை வலுவிழக்கச் செய்தால் குறைந்த சக்தியுள்ள கதிரியக்கத்தைப் பயன்படுத்தி பாதித்த செல்களை அழித்து விடலாம். இதனால் ஆரோக்கியமான செல்கள் அழிக்கப்படாது என்று முடிவு செய்தோம். செல்களின் வளர்ச்சிக்கு குளுக்கோஸ் அவசியம். ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் சக்தியை கொடுக்கும். ‘2டிஜி’ குளுக்கோஸ் போலவே இருக்கும். ஆனால் செல்லுக்கு சக்தியை கொடுக்காது. இதனால் கேன்சர் செல்கள் சக்தி கிடைக்காமல் வலிமை குன்றும். குறைந்த சக்தியுள்ள கதிரியக்கத்தால் இவைகள் அழிக்கப்படும். இதற்காக உருவாக்கப்பட்டது தான் 2டிஜி மருந்து.

கரோனா கிருமி, செல்களைப் பாதித்து வேகமாக பிற செல்களுக்கும் பரவும். 2டிஜி மருந்தைச் செலுத்துவதால் செல்களுக்கு குளுக்கோஸ் சக்தி கிடைக்காமல் அவைகள் வழுவிழந்துவிடும். இப்படித் தான் கரோனா சிகிச்சைக்கு 2டிஜி நல்ல பலனைத் தந்தது. புற்று நோய் சிகிச்சைக்காக உருவாக்கப்பட்ட மருந்து கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டது. அப்துல் கலாம் விரும்பியதைப் போலவே ஆராய்ச்சியின் பலன் மக்களைச் சென்றடைந்தது மிகச்சிறப்பு.
மக்கள் நலன் சார்ந்த மருத்துவத் தொழில்நுட்பங்களோடு, உணவுத் தொழில்நுட்பத்திலும் ராணுவ விஞ்ஞானிகள் பெரும்பங்காற்றி வருகின்றனர். உணவுத் தொழில்நுட்பங்களுக்கான ஆராய்ச்சிகளுக்கு கலாமின் வழிகாட்டுதலுடன் தலைமை வகித்தவர் நீங்கள். அதைப் பற்றி?

பனிமலையின் உயரங்களில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கலுண்டு. உதாரணமாக ஒரு கிலோ தக்காளியை மலையுச்சியிலுள்ள முகாமுக்குக் கொண்டு செல்லப் போக்குவரத்துச் செலவு ஏறக்குறைய 150 ரூபாய். காய்கறிகளை மலையுச்சியில் வளர்ப்பதற்கேற்ற சூழல் இருப்பதில்லை. பசுமைக்குடில், பாலித்தீன் குடில் ஆகியவற்றை அமைக்க அதிக செலவாகும். இதனால் ஒரு புதுமை முயற்சியாக, குழி தோண்டி அதில் காய்கறிகளை வளர்க்கும் ட்ரெண்ச் (Trench) தொழில்நுட்பத்தை உருவாக்கினோம். பகலில் சூரிய ஒளி ஊடுருவத்தக்க தாளினால் குழியை மூடியும், இரவில் கருப்புத்தாளால் மூடியும் காய்கறிகளை வெற்றிகரமாக விளைவித்தோம். ஏறக்குறைய 5000 மெட்ரிக் டன் எடையுள்ள காய்கறிகள் இப்படி விளைவிக்கப்பட்டன. இதனால் ராணுவ வீரர்களுக்கு உடனுக்குடன் உணவுப்பொருள்கள் கிடைத்ததோடு, பெரிய அளவில் போக்குவரத்துச் செலவும் மிச்சமானது.

உடனடி உணவுத் தொழில்நுட்பத்திலும் நாம் ஈடுபட்டோம். கிருமிகளை அழித்துவிட்டு உணவுப்பொருட்களை பொட்டலங்களில் அடைப்பதால், ஒரு வருடம் வரை கெட்டுப் போகாது. சூடுபடுத்தினால் இரண்டு நிமிடங்களில் உணவு தயாராகிவிடும். இந்தத் தொழில்நுட்பம் எம்.டி.ஆர், ஆசீர்வாத், ஐ.டி.சி உள்ளிட்ட நிறுவனங்களுக்குப் பகிரப்பட்டு, உடனடி உணவுகள் பொதுமக்களுக்கும் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.