உயிரைக் காத்த அறிவியல் கதைகள்! – 1
இஸ்ரோ விஞ்ஞானி பெ.சசிக்குமார்

னித நாகரிகத்தின் வரலாற்றில் நாம் எத்தனையோ போர்களைக் கடந்திருக்கிறோம், பேரரசுகளைக் கட்டியெழுப்பியிருக்கிறோம், விண்வெளி வரை கொடி நாட்டியிருக்கிறோம். ஆனால் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளுடனும் நோய்களுடனும் மனிதன் நடத்திய போர்தான் எல்லாவற்றையும் விடப் பெரியது. அந்தப் போரில் மனிதகுலத்தைக் காப்பாற்றி, இன்று நாம் வாழும் நவீன உலகை சாத்தியமாக்கியது மருத்துவ அறிவியலின் கண்டுபிடிப்புகளே.

இதைப் புரிந்துகொள்ள, நாம் சுமார் 200 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும். இன்று நாம் சாதாரணமாகக் கருதும் காய்ச்சலோ, ஒரு சிறிய காயமோ கூட 1800-களில் மரண அச்சத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. அக்காலத்தில் உலகளவில் மனிதனின் சராசரி ஆயுட்காலம் வெறும் 30 முதல் 40 ஆண்டுகள் மட்டுமே. பிறக்கும் குழந்தைகளில் கணிசமானோர் ஐந்து வயதைத் தாண்டுவதற்கு முன்பே உயிரிழந்தனர். பெரியம்மை, காலரா, காசநோய், பிளேக் போன்ற தொற்றுநோய்கள் ஒட்டுமொத்தக் கிராமங்களையே அழித்தன.

மேலும், நோய்களுக்கான உண்மையான காரணம் அப்போது மக்களுக்குத் தெரியாது. “தீய காற்று” அல்லது “தெய்வத்தின் கோபம்” காரணமாகவே நோய்கள் ஏற்படுகின்றன என்று நம்பப்பட்ட காலம் அது.

இன்று உலகின் சராசரி ஆயுட்காலம் 73 ஆண்டுகளைக் கடந்துள்ளது. பல வளர்ந்த நாடுகளில் அது 80 ஆண்டுகளுக்கும் மேல் உள்ளது. மொனாக்கோ, சான் மரினோ, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் சராசரி ஆயுட்காலம் 85 ஆண்டுகளைத் தாண்டியுள்ளது.
இந்த நாடுகளின் அனுபவம் ஒரு முக்கியமான உண்மையைச் சொல்கிறது: மருத்துவ முன்னேற்றம், சுகாதார வசதிகள், ஊட்டச்சத்து மற்றும் பொதுமக்களின் விழிப்புணர்வு ஆகியவை இணைந்தால் மனித ஆயுளை குறிப்பிடத்தக்க அளவில் நீட்டிக்க முடியும்.
இந்தியாவின் பயணம்

1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, ஒரு சராசரி இந்தியரின் ஆயுட்காலம் வெறும் 32 – ஆண்டுகள் மட்டுமே இருந்தது. தொற்றுநோய்கள், குழந்தை இறப்பு விகிதம், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் போதிய சுகாதார வசதிகள் இல்லாமை ஆகியவை இதற்குக் காரணங்களாக இருந்தன.

ஆனால் இன்று இந்தியா, மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் துறைகளில் மிகப்பெரிய முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது. தடுப்பூசித் திட்டங்கள், சுத்தமான குடிநீர், மேம்பட்ட மருத்துவ சேவைகள் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் காரணமாக இன்று இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 71– முதல் 72 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. வெறும் 75 ஆண்டுகளில் ஆயுட்காலம் இரு மடங்கிற்கும் மேலாக உயர்ந்திருப்பது மனித முன்னேற்றத்தின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும்.

இந்த மாற்றத்திற்கு காரணமான நான்கு தூண்கள்

மனித ஆயுட்காலம் அதிகரித்தது ஏதோ தற்செயலாக நிகழ்ந்ததல்ல. மருத்துவ அறிவியலின் பல நூற்றாண்டு ஆராய்ச்சிகளின் விளைவாக அது சாத்தியமானது. இந்தப் புரட்சிக்கு அடித்தளமிட்ட நான்கு முக்கியத் தூண்கள் பின்வருமாறு:

தடுப்பூசிகள் (Vaccines)

1796-ஆம் ஆண்டு எட்வர்ட் ஜென்னர் பெரியம்மைத் தடுப்பூசியைக் கண்டுபிடித்தது மருத்துவ வரலாற்றின் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. கோடிக்கணக்கான உயிர்களைக் காவு கொண்ட நோய்களைத் தடுப்பூசிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன; சிலவற்றை முற்றிலும் ஒழித்தும் விட்டன.

கிருமிக்கோட்பாடும் சுகாதாரமும் (Germ Theory & Hygiene)

லூயிஸ் பாஸ்டர் மற்றும் ராபர்ட் கோக் போன்ற அறிவியலாளர்கள் நோய்கள் கிருமிகளால் பரவுகின்றன என்பதை நிரூபித்தனர். இதன் மூலம் கைகளைக் கழுவுதல், மருத்துவ உபகரணங்களைச் சுத்தப்படுத்துதல் மற்றும் சுகாதார நடைமுறைகள் பரவலாகப் பின்பற்றப்பட்டன. இதனால் தொற்றுகளும் மரணங்களும் கணிசமாகக் குறைந்தன.

ஆன்டிபயாட்டிக்குகள் (Antibiotics)

பென்சிலின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் கண்டுபிடிப்பு, ஒருகாலத்தில் உயிருக்கு ஆபத்தானதாக இருந்த பாக்டீரியா தொற்றுகளை எளிதில் குணப்படுத்தும் வழியை உருவாக்கியது. இதனால் கோடிக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன.