அறிவியலின் கதை – 9
– திரு.நன்மாறன் திருநாவுக்கரசு

ண்டைய அறிவியல் உலகில் தவிர்க்க முடியாத நபர் கேலன். மிகவும் புத்திசாலி மனிதர். தன் திறமையில் அதீத நம்பிக்கை கொண்டவர். கேலன் எழுதிக்கொண்டே இருந்தார். தன் கருத்துக்கள், சாதனைகள் எல்லாவற்றையும் எழுதினார். பண்டைய சிந்தனையாளர்கள் எழுத்துக்களில் அழியாமல் அதிகம் இருப்பது இவருடையதுதான். இதைவைத்தே இவரது கருத்தை எந்த அளவுக்கு மக்கள் மதித்துப் பின்பற்றினர், பத்திரப்படுத்தி வைத்திருந்தனர் என்பதை அறியலாம். கிட்டத்தட்ட 20 பெரிய தொகுப்புகள் அவருடைய படைப்புகளில் இன்றும் அழியாமல் இருக்கிறது. மிஞ்சியதே இவ்வளவு என்றால், எழுதியது எவ்வளவு இருக்கும் என யோசித்துக்கொள்ளுங்கள். சரி இப்போது கேலனின் பங்களிப்பு என்ன என்பதைப் பார்ப்போம்.
இன்றைய துருக்கியில் உள்ள பெர்கமும் எனும் நகரத்தில் கேலன் பிறந்தார் (கி.மு. – 129).

அப்போது அந்த இடம் ரோம பேரரசின் கீழ் இருந்தது. அவருடைய தந்தை பெரும் பணக்காரர். கட்டடக்கலை நிபுணர். தன் மகனுக்கு நல்ல கல்வி கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். கிரேக்கம், தத்துவம், கணிதம் எல்லாமும் சொல்லிக் கொடுத்தார். தந்தைக்கு மகனை மருத்துவர் ஆக்க வேண்டும் என்று ஆசை. கேலனும் மருத்துவம் பயின்றார். தந்தை இறந்தபின் கேலன் தன் கல்விக்காக பல இடங்களுக்குப் பயணிக்கத் தொடங்கினார். குறிப்பாக அப்போது அறிவுப் பொக்கிஷமாக விளங்கிய எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியாவில் இருந்த நூலகத்திற்கும் அருங்காட்சியகத்திற்கும் சென்று நூல்களைக் கற்றறிந்தார்.

கிளேடியேட்டியர்களின் மருத்துவர்

நாம் கிளேடியேட்டர் படம் பார்த்திருப்போம். ரோமப் பேரரசின் கீழ் இருந்த குரூரமான வீர விளையாட்டு அது. அடிமைகள் பிடித்துவரப்பட்டு அவர்களுக்கு சண்டையிட பயிற்சி அளிப்பார்கள். அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் சண்டையிட வைப்பார்கள். இல்லை மிருகங்களுடன் மோத விடுவார்கள். இதனை பணக்கார ரோம மக்கள் கூடி நின்று பார்த்து மகிழ்வார்கள். இந்த கிளேடியேட்டர் வீரர்களுக்கு மருத்துவரானார் கேலன்.

சாதாரண மக்களுக்கு மருத்துவம் பார்ப்பதைவிட கிளேடியேட்டர்களுக்கு மருத்துவம் பார்ப்பது கடினம். காரணம், காயம்பட்ட வீரர்களை உடனே குணப்படுத்த வேண்டும். அப்போதுதான் அவர்கள் மீண்டும் சண்டையில் ஈடுபட முடியும். அப்போதுதான் அவர்களை வாங்கி வந்த பணக்காரர்களும் லாபம் பார்க்க முடியும். இதனை மிகச் சிறப்பாக செய்ததால் கேலன் மிகச் சிறந்த மருத்துவராகப் பார்க்கப்பட்டார். குறிப்பாக அறுவைச் சிகிச்சைகள் செய்வதில் நிபுணராக இருந்தார்.

இதனால் கேலன் பணக்காரர்கள் மத்தியில் பிரபலமானார். கி.மு. 160 வாக்கில் அவர் ரோம் நகரத்திற்குச் சென்றார். அங்கே இருந்து உடல்கூறுகள் குறித்து எழுதத் தொடங்கினார். எப்படி உடலில் ஒவ்வொரு பாகங்களும் அமைந்திருக்கின்றன, எப்படி உடல் வேலை செய்கிறது என்பதை எல்லாம் எழுதினார். அதேபோல் புகழ்பெற்ற ரோமப் பேரரசராக இருந்த மார்கஸ் ஆரேலியஸின் ராணுவ திட்டமிடல் குழுவிலும் பணியாற்றினார்.

அப்போது அவருக்கும் மார்கஸ் அரேலியஸுக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. இருவரும் தத்துவங்கள் குறித்து விவாதித்தனர். அரேலியஸ் அவருக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்தார். ரோமப் பேரரசின் முக்கிய அதிகாரிகளுக்கு எல்லாம் மருத்துவம் பார்த்துப் புகழடைந்தார்.
நாம் கடந்த அத்தியாயங்களில் மருத்துவத்தின் தந்தை என அறியப்படுகிற ஹிப்போகிரெடஸ் பற்றிப் பார்த்தோம். கேலன் வாழ்ந்த காலத்தில் ஹிப்போகிரெடஸ் இறந்து 500 ஆண்டுகள் ஆகி இருந்தாலும் அவரையே தன் குருவாக ஏற்றுக்கொண்டார் கேலன். ஹிப்போகிரெடஸ் எழுதிச் சென்ற மருத்துவம் தொடர்பான நூல்களின் தொடர்ச்சியாகத் தான் கண்டறிந்த விஷயங்களையும் இணைத்தார்.

நான்கு நீர்ப்பொருட்கள்

கேலன் எழுதுவதிலும் திறமையானவராக இருந்ததால் ஹிப்போகிரெடஸ் எழுதிய பல புரியாத நூல்களுக்கு விளக்கம் எழுதினார். உடலில் நான்கு வகை நீர்ப்பொருள் இருப்பதாக பண்டைய கிரேக்க மருத்துவர்கள் நம்பினர் என நாம் ஏற்கெனவே பார்த்தோம் இல்லையா? ரத்தம், சளி, கருப்பு பித்த நீர், மஞ்சள் பித்த நீர் ஆகிய நான்கு வகை நீர்ப்பொருள் இருப்பதாகவும், இவை சமநிலையில் இருப்பதே நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது எனவும், இவற்றில் எது கூடினாலும் குறைந்தாலும் உடலுக்கு நோய்மை ஏற்படும் என்கிற கோட்பாட்டை ஹிப்போகிரடஸ் வழி வந்தவர்கள் நம்பினர். அந்தக் கோட்பாட்டை இன்னும் சீர்ப்படுத்தியவர் கேலன்.

கேலனின் மருத்துவச் சிகிச்சையில் இந்த நீர்ப்பொருள் கோட்பாடுக்கு முக்கியப் பங்கிருந்தது. ஹிப்போகிரெடஸ் சொன்னதுபோலவே உடலில் நான்கு வகை நீர்ப்பொருள் இருப்பதாகவும், இதில் ஒவ்வொரு நீர்ப்பொருளுக்கும் வெப்பம், குளிர், ஈரம், வறட்சி எனத் தனித்தனிக் குணம் இருப்பதாகவும் கூறினார் கேலன். உடலின் இந்தத் தன்மையில் ஏதேனும் குறையவோ கூடவோ செய்தால், அதனைச் சரி செய்யும் மருந்துகளை வழங்கினார்.

உதாரணமாக ஒருவருக்குச் சளிப் பிடித்து குளிர்காய்ச்சல் வந்தால் அதற்கு எதிரான தன்மை கொண்ட வெதுவெதுப்பான காய்ந்த உணவுகளைக் கொடுத்தார் கேலன். இவ்வாறு செய்யும்போது அந்த நான்கு நீர்மப்பொருட்களும் மீண்டும் சமநிலையில் வந்து அதன் மூலம் உடல் குணமடையும் என்பது இவரது கருத்து.

இதில் தவறு செய்யும் மருத்துவர்களை அவர் விமர்சித்தார். ஒரு நோயாளியைப் பார்த்தவுடனேயே அவருக்கு என்ன பிரச்னை என்று அறிந்து சிகிச்சை கொடுப்பதிலும் நிபுணராக இருந்தார். இதனாலேயே மிகவும் புத்திசாலியான மரியாதைக்குரிய மருத்துவராக அறியப்பட்டார். உடல்நலம் மட்டுமின்றி நோயாளியின் மனநலனிலும் கவனம் செலுத்தினார்.
இதற்கு ஒரு உதாரணமும் உண்டு. பெண் ஒருவருக்கு நாட்டிய நிகழ்ச்சிக்குச் செல்லும் போதெல்லாம் உடல்நலம் பாதிக்கப்பட்டு பதற்றம் வருவது தெரிந்தது. அவரது உடல்நிலையை ஆராய்ந்தால் எல்லாமும் சாதாரணமாக இருந்தது. பிறகு அந்த நிகழ்ச்சிக்கு அவரை அழைத்துச் சென்று கண்காணித்தபோது அங்கே வரும் ஒரு நடனக்கலைஞரை அந்தப் பெண் விரும்புவது தெரிந்தது. அவரைப் பார்த்தவுடன் பதற்றம் ஏற்படுவதையும் புரிந்துகொண்டு அந்த மனசிக்கலை சரி செய்தார் கேலன்.

நாடி மருத்துவம்

கேலனின் முக்கியப் பங்களிப்புகளில் ஒன்று, நோயாளிகளுக்கு நாடி பார்ப்பது. நாடி என்பது என்ன, அது எந்த வேகத்தில் இயங்கும், ஒருவர் கைகளை பிடித்துப் பார்த்து அவருடைய நாடி வேகமாகத் துடிக்கிறதா, மெதுவாகத் துடிக்கிறதா, வலுவாக இருக்கிறதா, பலவீனமாக இருக்கிறதா, சாதாரணமாக இருக்கிறதா, அசாதாரணமாக இருக்கிறதா என்பதை எப்படிச் சொல்வது, மேலும் இந்த வேறுபாடுகளை வைத்து வந்தவருக்கு எந்த நோய் என எப்படிக் கண்டறிவது என்பதைக் கேலன் விளக்கினார். இத்தனைக்கும் அப்போது உடலில் ரத்த ஓட்டம் பற்றி யாருக்கும் புரிதல் கிடையாது. அதனால் கேலனுக்கும் அது பற்றித் தெரியாது.