
நீ என்னவாகப் போகிறாய்..?
– 2– கவிஞர் மு.முருகேஷ்
“யார் நீ..?”
– என்ற கேள்வியை என்றாவது எதிர்கொண்டிருக்கிறீர்களா..? நம்மை யாரென அறிந்திராத ஒருவர், நம் முன்னே இப்படியொரு கேள்வியை எழுப்பினால், அதற்கான நம் பதில் என்னவாக இருக்கும்..?
முதலில் நம்மைக் கேள்வி கேட்கிற நபர் யாரெனப் பார்ப்போம். அடுத்ததாக, அவர் கேட்ட இந்தக் கேள்வியானது நம்மைப் பற்றி என்ன தெரிந்துகொள்ள வேண்டுமென்கிற நோக்கத்தினால் எழுந்தது என யோசிப்போம். மூன்றாவதாக, நாம் பதில் சொல்வதற்கான தேவை இருக்கிறதா, கேள்வி கேட்டவருடனான நட்பை நாம் தொடர விரும்புகிறோமா… ஆகியவற்றின் அடிப்படையிலேயே பதிலளிக்க முன்வருவோம்.
கேள்விக் கேட்டவர் வயதில் முதிர்ந்தவராக இருந்தால், நம் அப்பா, அம்மா ஆகியோரின் பெயரைச் சொல்லி, இவரது மகன் / மகள் என்போம். நடுவயதினராக இருப்பின் நம் அண்ணன் அல்லது அக்காக்களைப் பற்றிச் சொல்வோம். நம் சம வயதினராக இருப்பின், இந்தப் பள்ளியில் படிக்கிறேன், இந்தப் பகுதியில் வசிக்கிறேன் என்பதாகவே நம் பதில்கள் அமையும்.
இப்போது அதே கேள்வியை, நம்மைப் பற்றி நன்கு அறிந்த ஒருவர் கேட்கிறாரென்று வைத்துக்கொள்வோம். இப்போது நம் மனநிலை என்னவாக இருக்கும்..? கேள்விக் கேட்ட அடுத்த நொடியே நமக்குள் ‘சுர்’ரென்று கோபம் அல்லது எரிச்சல் தலைக்கேறி விடுகிறதே… அது ஏன்?
நம்மைப் பற்றி எல்லாம் தெரிந்திருக்கிற ஒருவர், ‘யார் நீ?’ எனும் கேள்வியைக் கேட்கையில், அதற்கு முன்னும் பின்னுமாகப் பல கேள்விகள் தொக்கி நிற்பதால்தான் நமக்கு அந்தக் கேள்வி கோபத்தை உண்டாக்குகிறது. அதென்ன ‘தொக்கி நிற்கும் கேள்விகள்..?’
‘நீ என்ன பெரிய இவனா..?’, ‘உனக்கெல்லாம் என்னடா பெரிய மரியாதை?’, ‘எனக்கு நீயெல்லாம் ஒரு பொருட்டேயில்லை..!’, ‘நான் நினைச்சா உன்னை இல்லாம ஆக்கிடுவேன்..!’
இப்படியாக இன்னும் பல கேள்விகளை உள்ளடக்கியே ‘யார் நீ?’ எனும் கேள்வி, நம் முகத்துக்கு நேரே நன்கு அறிந்த நபரால் கேட்கப்படுகிறது.
சரி; இப்போது இதே கேள்வியைக் கேட்கிறவர் நம்மை அறிந்தவரோ, அறியாதவரோ அல்லாமல்
‘வேறொருவர்’ கேட்கிறாரென்றால், அதற்கு நம் பதில் கனத்த மெளனமும் நிறையத் தயக்கமுமாகவே இருக்கும். ‘அப்படியா இருக்கும்..?’ என்று சற்றே வியந்து, “சரி, யாரந்த ‘வேறொருவர்..?’” என்று நீங்கள் கேட்கக்கூடும்.
அவர் வேறு யாருமல்ல… நீங்களே தான்! என்றாவது ஒரு நாள் கண்ணாடி முன்நின்று, உங்களைப் பார்த்து நீங்களே இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்களா..? அப்படிக் கேள்விக் கேட்டு, அதற்கான நேரான பதிலை என்றாவது சொல்லியிருக்கிறீர்களா என்று ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். அதற்கான பதிலாக ‘இல்லை’யென்றே வரும்.
நம்மைப் பற்றி நமக்கே என்னவெனத் தெரியாதபோது, பிறரைப் பற்றி எவ்வித சங்கடமுமின்றி கேள்வி கேட்க மட்டும் நாம் தயங்கியதேயில்லை. நம்மை நாமே சில கேள்விகளைக் கேட்டுத் தெளிய வேண்டும். இல்லை; நமக்குப் பரிட்சயமான ஓரிருவராவது நம்மை நோக்கி உள்ளன்போடும், வெளிப்படையாகவும் விமர்சனம் செய்யும் வகையிலான நட்பு வட்டத்தையாவது நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், “என் பிரச்சினையை நான் மனம் விட்டுப் பேச எனக்கென்று யாரிருக்கிறார்கள்..?’ என்று வாய்விட்டுப் புலம்புவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விடும்.
ஒன்று; நமக்குள் நாமே சுயமாகக் கேள்விகளை எழுப்பிக்கொண்டு, நமக்குள்ளிருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வந்து, நம்மை யாரென்று வெளியுலகிற்குக் காட்ட வேண்டும். இல்லையெனில், நம்மிடமிருக்கும் ஆற்றலை எவ்விதத் தயக்கமுமின்றி வெளிப்படுத்தி, பிறரிடம் நம் திறமை என்னவென அடையாளப் படுத்திக்கொள்ள வேண்டும். சிறிய வயதிலேயே தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ஆளுமை ஒருவரைப் பற்றித் தெரிந்துகொள்வோமா..? அனைவரும் அறிந்த ஆளுமைதான் அவர். என்றாலும் பலரும் அறிந்திராத அவரது இன்னொரு பக்கத்தை அறிகையில், நமக்குள்ளுமொரு உத்வேகம் பிறக்கவே செய்கிறது.
கூத்தாலி – கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள பெரம்ப்ராவிற்கு அருகிலுள்ள அழகிய கிராமம். அந்தச் சிறிய கிராமத்தில், ஓர் எளிய – வறுமை சூழ்ந்த விவசாயக் குடும்பத்தில் 1964-ஆம் ஆண்டு ஜூன் 27 அன்று பிறந்தவர் அவர். அருகிலிருந்த பய்யோலி கிராமத்தில் வளர்ந்தார்.
டி.வி.பாலகிருஷ்ணா – லெட்சுமி தம்பதியினருக்கு மொத்தம் 6 குழந்தைகளில் ஐந்தாவதாகப் பிறந்தார். குடும்பத்தைச் சூழ்ந்திருந்த வறுமையினால் மூன்று வேளை உணவுக்குக்கூட வழியில்லை. அன்றாடம் அரை வயிறு, கால் வயிறுதான் பசி நிறையும். வயிற்றில் பசியோடு கல்விக் கற்க வேண்டுமென்கிற ஆவலில் பள்ளிக்குச் சென்று படித்து வந்தார்.