மூளை என்னும் முதல்வன் – 27
– திரு.A.மோகனராஜூ

நீண்ட காலம் அமைதியாக ஆனந்தமாக வாழ வேண்டுமானால் நமக்கு விழிப்புணர்வு வேண்டும் என்று அப்பா, ஆசிரியர், உறவுகள், நண்பர்கள், உலகத்தலைவர்கள், எல்லோரும் சொல்கிறார்கள். நானும் விழிப்புணர்வோடுதான் வாழ வேண்டுமெனெ நினைக்கின்றேன். ஆனால் விழிப்புணர்வு என்றால் என்ன என்றுதான் எனக்குச் சற்றே சரியாகப்புரியவில்லை. அது புரியாமல் மேற்சொன்ன அனைவரின் பேச்சையும் எப்படி நான் கேட்பது. சரி அகராதி ஒன்றில் தேடினேன் அதன் அர்த்தம் எண்ணங்கள், உணர்வுகள், உண்மைகள், அல்லது சுற்றுப்புறங்கள் போன்றவற்றை உணர்ந்த நிலையில் ஏற்படும் புரிதல் அல்லது அறிவு என்று சொல்கிறது.

அதாவது உறக்கத்தில் ஒருவருக்கு என்ன நடக்கிறது என்று தெரியாது, ஆனால் விழித்திருக்கும் நிலையில் என்ன நடக்கிறது என்று நன்றாகத்தெரியும். கண்கள் பார்க்கும் தொலைவுவரை, காதுகள் கேட்கும்வரை, மூக்கு நுகரும்வரை நம்மால் நம்மைச்சுற்றி என்ன நடக்கிறது என்று உணரமுடியும், அதற்கேற்ப நாம் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். உறக்கத்திற்கு நேர் எதிர் முனையில் விழிப்பு இயங்குகிறது.

ஒரு காட்டில் சிங்கம் இருக்கிறது, அது காட்டுக்கே ராஜா, கர்ஜித்தால் காடே அதிர்கிறது, அனைத்து உயிரினங்களும் ஓடி ஒளிந்துகொள்கின்றன. அதனால் அதற்கு உணவு கொடுக்கிறார்களா?. அதற்கு சேவகம் செய்ய யாராவது இருக்கிறார்களா, அது ராஜா என்பதற்கு ஏதாவது இருக்கிறதா?. தனக்கு வேண்டியது எதுவானாலும் அதைத் தானேதான் செய்துகொள்கிறது. உணவு தண்ணீர் இருக்குமிடம் சென்று உண்டு பருகி மகிழ்கிறது. அதனிடம் இருக்கும் விழிப்புணர்வையும் மகிழ்வையும் கொண்டுதான் நாம் காட்டுராஜா என்று அழைக்கிறோம். அது தான் தான் ராஜா என்று யாரிடமும் சொல்வதில்லை. பறவை 5000 அடிவரை உலகில் உயரப்பறக்கிறது, அதற்காக அதற்கு யாராவது உதவுகிறார்களா, தனக்கு வேண்டியது அனைத்தையும் அது தரையில் வந்துதான் தானாகவே செய்துகொள்கிறது. எல்லா உயிர்களும் விழிப்புணர்வோடு இருக்கின்றன.

விழிப்புணர்வோடு நாமும் இருந்தால் நடக்க வேண்டியது எல்லாம் தானாக நடக்கும். உண்ணும்போது உணவில், எண்ணும்போது மனதில், உறங்கும்போது படுக்கையில, படிக்கும்போது புத்தகத்தில், நடக்கும்போது பாதையில் முழுக்கவனம் செலுத்துவதே விழிப்புணர்வு என்பது.

விழிப்புணர்வு என்பது நம்மை நாமே தெளிவாக அறிந்துகொள்வது, நாம் யார் என்பதை நாம் ஆழமாகப் புரிந்துகொள்வது, பிறர் நம்மை எப்படி பார்க்கின்றார்களோ அப்படியே நாம் நம்மைப் பார்ப்பது, இந்த உலகம் சுழலும்போது அதனுடன் நம்மை எப்படி இணைத்துக்கொள்வது என்ற திறன். நாம் விழிப்புணர்வுடன் இயங்கும்போது நமக்குத் தேவையான சக்தியும் படைப்பாற்றல் திறனும் கிடைக்கிறது, அப்போது நாம் ஒரு முழுப் பாதுகாப்பை உணரமுடிகிறது. இதனால் நமக்கு அதிகமான நம்பிக்கையும், உறுதியான சொந்தமும், பிறருடன் எளிமையானத் தொடர்பும் கிடைக்கிறது. நம்மிடம் பொய்யும், திருட்டும், ஏமாற்றுதலும் தேவையில்லாமல் போகிறது என்று ஒரு ஆய்வு சொல்கிறது.

ஒருவர் நடந்துபோய்க்கொண்டிருக்கிறார் அவரின் நண்பர் கண்டுபிடித்துவிடுகிறார், தொடர்ந்து பின்னால் இருந்து “நில்லுங்கள் நில்லுங்கள்” என்று அவர் பெயரைச்சொல்லி கூப்பிட்டுக்கொண்டே வருகிறார், அவர் நிற்கவில்லை அவர்முன் சென்று வழிமறித்தபின்பே “நண்பா நீயா, கவனிக்கவில்லை, நீ இங்கே எப்படி?” என்று ஆச்சரியத்தில் கேட்கிறார். அவர் அந்த இடத்தில் நடந்துகொண்டு இருந்தார், ஆனால் அவர் மனம் எங்கோ ஓரிடம் அலைந்துகொண்டு இருந்தது.

ஒரு நண்பர் வெகுத்தொலைவில் உள்ள தனது நண்பரிடம் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார், அவர் பேசும்போது இவர் பழைய நண்பன் அன்புவின் பேசும்குரல் கேட்கிறது, அன்பு அங்கே இருக்கின்றானா என்று கேட்டார், உனக்கெப்படி தெரியும் என்றார் நண்பர், கைப்பேசியில் (Cell) அவர் குரல் கேட்கிறது என்று சென்னார். ஆமாம் அவர் எப்படி உங்கள் நண்பர் ஆனார் என்று கேட்டுவிட்டு கைப்பேசியை அவர் பேசக்கொடுத்தார். இருவரும் சற்றே பேசிமகிழ்ந்தனர், வெகுத்தொலைவிற்கு இவர் போகவில்லை ஆனாலும் இவர் நண்பர், நண்பரின் வீட்டில் இருப்பது கண்டுபிடித்தார், பேசமுடிந்தது. இது அதிசயம் அல்ல விழிப்புணர்வு. 3.84 இலட்சம் கி,மீ தொலைவில் உள்ள சந்திர மண்டலத்தில் உயிரினங்களும் தண்ணீரும் இருக்கிறதா இல்லையா என்று இங்கிருந்தே கண்டுபிடித்தார்கள் இது ஆச்சரியமல்ல அறிவியல், ஆழமான விழிப்புணர்வுதான்.

நிகழ்காலத்திற்கும் விழிப்புணர்வுக்கும் மிகவும் நெருங்கியத்தொடர்பு இருக்கிறது. நீங்கள் கனவிலும் கற்பனையிலும் இருந்தால், மற்றும், கனவிலும் கற்பனையிலும் இருக்கும் ஒருவருடன் பேசவோ செய்திகளைப் பரிமாறிக்கொள்ளவோ, தொடர்புகொள்ளவோ முடியாது. நீங்கள் இருவரும் நிகழ்காலத்தில் இருந்தால்தான் அவருடன் தொடர்பில் இருக்க முடியும். ஒருவர் கனவிலும் கற்பனையிலும் இருந்தால், அவரை எறும்பு கடித்தாலும், கொசுக்கடித்தாலும், அவர் பக்கத்தில் பாம்பு சென்றாலும், பனைமரத்தில் இருந்து ஓலை விழுந்தாலும், அவருக்குத்தெரியாது. காரணம் அவருக்கு விழிப்புணர்வு இருக்காது. காது திறந்திருக்கும், கண்கள் பார்த்துக்கொண்டிருக்கும் ஆனால் நினைவு எங்கேயோ இருக்கும். எல்லோருக்கும் தெரியும், அப்படியா எனக்குத்தெரியவே தெரியாது என்பார், அவர் இந்த உலகில் இல்லை கனவுலகில் இருக்கிறார்.

கதவு, தாழ்ப்பாள், சுற்றுச்சுவர், எல்லாம் சரியாகவே இருக்கிறது, அற்புதமாக இயங்குகிறது, கணவனும் மனைவியும் அதே வீட்டில் உறங்கினார்கள், திருடன் புகுந்து அனைத்தையும் திருடிச் சென்றுவிட்டான். எங்களுக்குத் தெரியவே இல்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். விழிப்புணர்வுடன் இருந்தது திருடனா அல்லது வீட்டில் உறக்கத்தில் இருந்தவர்களா.?