முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்!
‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்
தன் சக தோழி ஒருவர் நோயுற்ற நிலையில் படுத்திருக்கின்றாள். அவரைப் பார்க்கச் செல்கின்றார் எலிசபெத் பிளாக்வெல். அந்தத் தோழி தனது நோயின் வேதனைகளைப் பகிர்ந்து கொள்கின்றார். அப்போது “என்னைக் கவனிக்க ஒரு பெண் மருத்துவர் இருந்திருந்தால் எப்படி இருக்கும்? எனது வேதனைகளை நான் சரியாகச் சொல்லி விளக்கவும், உதவி பெறவும் முடியுமே!” என்று தன் வருத்தத்தை வெளிப்படுத்துகின்றார்.
இச்சம்பவத்தால் அவரைக் காணச்சென்ற எலிசபெத் பிளாக்வெல் என்னும் இளம் நங்கையின் மனதில் “தான் பெண் மருத்துவராக” ஆகவேண்டும் என்ற எண்ணம் உதிக்கின்றது. பெண் மருத்துவர்களே இல்லாத உலகம் அவரைச் சிந்திக்க வைக்கிறது. என் தோழியைப் போல எத்தனை பெண்கள் ஒரு பெண் மருத்துவரிடம் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டிருப்பார்கள் என்று ஆராய்ந்து பார்க்கின்றார். பெண் மருத்துவர் ஆக வேண்டும் என்கிற அவரது தேடல் ஆரம்பமானது.
எலிசபெத் பிளாக்வெல்
இங்கிலாந்து நாட்டில், பிரிஸ்டல் என்ற இடத்தில் 1821-ஆம் ஆண்டு பிப்ரவரி மூன்றாம் தேதி சாமுவேல் பிளாக்வெல் மற்றும் ஹன்னா தம்பதிகளுக்குப் பிறந்தவர் தான் எலிசபெத் பிளாக்வெல். சாமுவேல் பிளாக்வெல் சிறந்த சமுதாயச் சிந்தனைகள் மிகுந்தவர். இரண்டு மூத்த சகோதரிகள், நான்கு இளைய சகோதரர்கள் மற்றும் இரண்டு இளைய சகோதரிகள் என்று ஒன்பது குழந்தைகளில் மூன்றாவது மகளே எலிசபெத் பிளாக்வெல்.
தன் குழந்தைகள் படிப்பதிலும், திறமைகளை வளர்த்துக் கொள்வதிலும், பல்ேவறு பயிற்சிகள் பெறுவதிலும் முழு சுதந்திரமும், ஊக்கமும் கொடுத்தவர் சாமுவேல் பிளாக்வெல். தனது சர்க்கரை ஆலை தீயில் எரிந்து நாசமாகிவிட்டதால் குடும்பத்தைப் பொருளாதார வளர்ச்சி வேண்டி நியூயார்க் நகருக்குக் கொண்டு வந்தார் சாமுவேல். எலிசபெத் பிளாக்வெல்லுக்குப் பதினேழு வயது நடந்த காலத்தில் சாமுவேல் இறந்துவிடவே, குடும்பப் பொருளாதார நிலை கருதி ஆசிரியப் பணியை ஆற்றினார் எலிசபெத்.
அவரும், அவரது சகோதரிகளும் இணைந்து, “சின்சன்னாட்டி ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் மகளிர் பள்ளி”யை ஆரம்பித்தார்கள். இப்பள்ளியின் வருமானம் குடும்பத்தை அப்போது காத்தது.
இளம் வயதில் எலிசபெத் பிளாக்வெல்லின் ஆசிரியை ஒரு நாள் வகுப்பிற்கு ஒரு காளையின் கண்ணைக் கொண்டு வந்து காட்டி உயிரியியல் பாடம் எடுத்தார். இதனைக் கண்ட எலிசபெத் வெறுத்துப்போய் உயிரியியல் பாடங்கள் படிக்க விரும்பவில்லை. எனவே, அவருக்கு மருத்துவராகப் படிக்கவோ அல்லது அது சார்ந்து படிக்கவோ எண்ணம் ஏற்படவில்லை. ஆகையால் தான் ஆசிரியராகப் பணிசெய்தார். ஆனால், தன் தோழியோடு தனக்கேற்பட்ட அனுபவத்தால் மருத்துவர் ஆகவேண்டும் என்று முடிவு செய்தார். தன் விருப்பத்தை டாக்டர். டிக்சன் என்பவரிடம் தெரிவித்தார்.
முதல் பெண் மருத்துவர்
டாக்டர். டிக்சன் ஒரு மத போதகர் மற்றும் மதகுரு. முன்னதாக அவர் மருத்துவராகப் பணிசெய்தவர். எலிசபெத் பிளாக்வெல் ஆர்வத்தைக் கண்ட அவர், அவரது எண்ணத்தை ஊக்கமூட்டியதோடு, தனது நூலகத்திலுள்ள மருத்துவ நூல்களைப் படிக்க அனுமதி வழங்கினார். டாக்டர். டிக்சனின் தம்பியும் ஒரு மருத்துவர் தான். அவர் மூலமாகவும் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கேட்டு விண்ணப்பித்தார் பிளாக்வெல். எல்லா இடங்களிலும் இருந்து “பெண்ணுக்கு மருத்துவக் கல்லூரியில் இடமில்லை” என்று மறுப்புக் கடிதங்கள் வந்தன.
இந்த மறுப்புக் கடிதங்கள் எலிசபெத் மனதில் மேலும் ஆர்வத்தைத் தூண்டியது. பெண்களுக்கு எதிராக உள்ள இச்சமுதாயத்தில் கட்டாயம் போராடி ஜெயிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார். நேரடியாகச் சென்று சில மருத்துவக் கல்லூரிகளில் அணுகிக் கேட்டார். இறுதியாக ஒரு இடத்தில் அனுமதி கிடைத்தது.
1847, அக்டோபர் மாதம் நியூயார்க் அருகிலுள்ள ஹோபாட் கல்லூரியில் அவருக்கு இடம் தரப்பட்டது. அங்கும் ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. அதாவது, அங்கு மருத்துவம் பயின்ற 150 ஆண்பாலின மாணவர்களிடமும் ஓட்டெடுப்பு நடத்தப்படும். அதில் ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்தாலும் எலிசபெத் பிளாக்வெல்லை அனுமதிக்க முடியாது என்று கூறி ஓட்டெடுப்பு நடந்தது. அந்த 150 ஆண் பாலின மாணவர்களும் ‘சரி’ என்று சொன்னதால் எலிசபெத் பிளாக்வெல் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
ஆரம்பத்தில் இந்த மாணவர்களும் எலிசபெத் பிளாக்வெல் சேர்ந்ததை மனதார விரும்பவில்லை. எனவே வகுப்பறை, நூலகம், விவாதம், செய்முறைப் பயிற்சி என்று பல இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டார். சில நேரங்களில் புறக்கணிக்கப்பட்டார். 150 ஆண் பாலின மருத்துவ மாணவர்கள், ஒரேயொரு பெண் மருத்துவ மாணவி என்ற சூழலை நாம் சிந்தித்துப் புரிந்து கொள்ளலாம். சமுதாயத்தில் நல்லதை, சரியானதைக் கொண்டுவர பலர் இப்படித் துன்பங்களை அனுபவிக்கத்தான் வேண்டியுள்ளது.
ஒரு வழியாக மருத்துவப் படிப்பை முடித்தார் எலிசபெத். டைபாய்டு பற்றிய தனது ஆய்வறிக்கையை சமுதாய உடல் நலம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த மரபோடு இணைத்துச் சமர்ப்பித்தார் எலிசபெத். மருத்துவத் துறை வரலாற்றில் முதன்முதலாக ஒரு பெண்ணின் கட்டுரை இப்படி ெவளியானது. உலகின் முதல் பெண் டாக்டர் உருவாகினார். அமெரிக்காவில் 23-ஜனவரி, 1849 அன்று உலகின் முதல் பெண் மருத்துவர் என்ற நிலையை எலிசபெத் பிளாக்வெல் பெற்றார். அதன் பிறகு பொது மருத்துவர்கள் கூட்டமைப்பில் முதல் பெண் மருத்துவராகத் தன்னைப் பதிவு செய்து கொண்டார்.
பெண் மருத்துவ முன்னோடி
இங்கிலாந்தில் பிறந்தவராகவும், அமெரிக்காவில் வளர்ந்தவராகவும் திகழ்ந்த எலிசபெத் பிளாக்வெல் தனது மருத்துவப் பணி விரிவாக்கத்துக்காக இரண்டு நாடுகளுக்கும் மாறி, மாறிப் பயணித்துப் பணி செய்தார். இலண்டனில் புகழ்பெற்ற பல மருத்துவமனைகளில் பணியாற்ற வந்தார். ஆனால், அங்கிருந்த மருத்துவர்கள் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். வேண்டுமானால் ‘மருத்துவச்சி’யாக இருக்க அனுமதித்தனர். மருத்துவர்களுக்கு உதவியாக பேறு காலம் போன்றவற்றில் பணிபுரிவது என்று இப்பணியைக் குறிப்பிடலாம். பெண் என்பதால் தன்னை ஆண் வர்க்கம் அவமானம் செய்கிறது, ஏற்க மறுக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட அவர் அதை ஏற்றுக்கொண்டு பணிசெய்தார். அவரது உள்ளத்தில் பெண் மருத்துவத்தைப் பிரதானப்படுத்துவதே இலக்காக அமைந்தது.
சிறிது காலத்தில் தனது பணியை மருத்துவராகத் தொடர அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இவரது இளைய சகோதரி எமிலியும் பெண் மருத்துவராகினார். இவர் உலகின் மூன்றாவது பெண் மருத்துவர். புனித பார்த்லேமோயு மருத்துவமனையில் பணிசெய்த எலிசபெத் பெண் மருத்துவத்தை வலியுறுத்தினார்.
இடையில் நியூயார்க் சென்ற அவர் பெண்களுக்கான மருத்துவக் கல்லூரியை ஆரம்பித்தார். இலண்டனிலும் பெண் மருத்துவப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இவரது பெரும் முயற்சியால் பிரிட்டனில் மட்டும் 460-க்கும் மேற்பட்ட பெண் மருத்துவர்கள் உருவாகியிருந்தார்கள். முதலில் பெண்கள் நடத்தும் மருத்துவமனைகளுக்கு வரத் தயங்கியவர்கள் பின்னாளில் துணிவோடு வந்தார்கள். இன்று நமது ஊரிலேயே பல புகழ்பெற்ற பெண் மருத்துவர்கள் உள்ளதை நாம் காண்கின்றோம்.
பெண் மருத்துவக் கல்விக்கு அடித்தளமிட்டதோடு, பொதுவான பெண் கல்வி, சுகாதாரம், குடும்பக் கட்டுப்பாடு என்று பல துறைகளில் உலகமெங்கும் பயணித்துத் தனது இறுதிக் காலங்களில் உரை நிகழ்த்தினார் எலிசபெத் பிளாக்வெல். பெண் மருத்துவத்தை விடத் தாதியர்கள் அதிகம் தேவை என்பதை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் வலியுறுத்தினார். ஆனால், எலிசபெத் பிளாக்வெல் பிடிவாதமாக பெண் மருத்துவத்தை ஊக்கமூட்டி உயர்த்தினார்.
பெண் மருத்துவர்கள் இல்லாத ஒரு உலகத்தை நாம் நினைத்துப் பார்க்க இயலாது. மருத்துவ உலகிலும் சரி, அறிவியல் துறையிலும் சரி, பெண்களின் வரவு உலகளவிலும் காலம் கடந்தே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மதத்தை ஒரு காரணமாகவும் ஆணாதிக்க சமுதாயம் கொண்டிருந்தது என்றும் கூறலாம். ஆயினும் அதனை வெற்றி காணப் பல போராட்டங்களைப் புரிந்துள்ளனர் பெண் சாதனையாளர்கள்.
அமெரிக்காவுக்கும், இலண்டனுக்கும் பல முறை பயணித்து, நிதி திரட்டி அதன்மூலம் மருத்துவக் கல்வி நிறுவனங்களைத் தொடங்கி உலகமெங்கும் பெண் மருத்துவர்களை அறிமுகம் செய்த எலிசபெத் பிளாக்வெல்லின் சாதனை பிரமிக்கத்தக்கது ஆகும். பல்வேறு இயக்கங்களில் போராட்டக்காரராகவும், மாற்றங்களுக்கு வழிவகுத்த வீராங்கனையாகவும் இவர் திகழ்ந்துள்ளார். சமத்துவமின்மை புரையோடிப் போன ஒரு சமூகத்தில் போராட்டத்தின் மூலம் புதுமை படைத்த எலிசபெத் பிளாக்வெல் உலகை மாற்றியவர்களின் வரலாற்றுச் சுவற்றில் என்றும் நினைவுகூரப்படுகின்றார் என்பது உண்மை. =
எலிசபெத் பிளாக்வெல்லின்
பொன்ெமாழிகள்
- பெண்களின் சுதந்திரமான வளர்ச்சியை இந்தச் சமுதாயம் அனுமதிக்க மறுக்குமேயானால், இந்தச் சமுதாயத்தை மாற்றியமைக்க வேண்டும்.
- நாம் சரியான சவால்களுக்கு உட்படுத்தப்படாதவரை நமது திறமைகள் நமக்குத் தெரிவதில்லை.
- குறிப்பிட்ட சில ெபண்களால் கற்றுக்கொள்ளப்பட்டது அல்லது செய்துமுடிக்கப்பட்டது என்பது ஒட்டுமொத்த பெண் சமுதாயத்துக்கும் வழிகாட்டிடக் கூடிய பெரும் சொத்தாக அமைகின்றது.
- ஒரு மருத்துவர் பட்டத்தை வாங்கிவிட வேண்டும், மருத்துவராகிவிட வேண்டும் என்று தொடங்கிய எனது ஆவல், ஒரு காலக்கட்டத்தில் பெரிய போராட்டத்தையும், பெரிய பல முயற்சிகளையும் என்னிடம் உருவாக்கிவிட்டது.
- ஒரு முன்னோடியாக இருப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல. ஆஹா, எனது வேதனையான சில நிமிடங்களை நான் இவ்வுலகில் பெரும் எந்தச் செல்வத்திற்கும் ஈடாகக் கூடத் தரமுடியாது. அந்த அளவுக்குச் சில நேரங்கள் எனக்கு மதிப்புள்ளதாக இருந்தன.
- நமது பள்ளிக்கல்வி பல ஆயிரம் வகைகளில் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. கல்வியில் பெரும் மாற்றங்கள் உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்து கொண்டுவரப்பட வேண்டும்.
- எல்லாத் தீமைகளின் ேவர்கள் மீது தாக்குதலை ஏற்படுத்தும் அறிவைப் பெறுவது மிகவும் மதிப்புக்குரியதாகும். இந்தத் தீமைகள் சமூகத்தில் பல ஆண்டுகள் இருந்துள்ளதால் சில சக்திகள் அதன் இருத்தலை ஆதரிக்கலாம். ஆனால், நாம் போராடித் தான் வெல்ல வேண்டும்.
- மனிதகுலத்தின் ஒரு பாதி இனத்தால் (ஆண் வர்க்கத்தால்) உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு முறைகள் மற்றும் தீர்வுகளுக்குச் சரியான திருத்தங்கள் தருவதன் மூலமே இக்குலத்தின் வேறொரு பாதி (பெண் வர்க்கம்) உயர்வினை அடைய முடியும்.
- பொது வாழ்க்கையை நேசிக்கும் நான், நாளின் நல்ல பகுதியைக் காண்கின்றேன். ஒரு துறவியைப் போல வாழும் நான் என் அடையாளத்தை இழக்கும் போது பொது வாழ்வில் சரணடைகின்றேன்.