கலாமைக் கொண்டாடுவோம் -06

இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு
விஞ்ஞானி-கல்வியாளர் சீனிவாசன் சுந்தர்ராஜனுடன்
இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல்
ஒரு சந்திப்பில் ‘நீங்கள் ஏன் பி.ஹெச்.டி யில் சேரவில்லை?’ என்றார் மூத்த பாதுகாப்புத்துறை விஞ்ஞானியும் திருச்சி தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தின் அப்போதைய இயக்குனருமான டாக்டர்.சீனிவாசன் சுந்தர்ராஜன். அவருடைய அறிவுரையின் படி நான் பி.ஹெச்.டி ஆராய்ச்சியை முடித்தேன். புன்சிரிப்புடன் அவர் முன்வைக்கும் காத்திரமான கருத்துகள் உரையாடல்களின் அடர்த்தியை அதிகமாக்கும்.
டாக்டர் சுந்தர்ராஜன், மதுரை தியாகராஜர் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் பட்டத்தையும், சென்னை ஐ.ஐ.டி யில் தொழிலக உலோகவியலில் முது நிலை மற்றும் முனைவர் பட்டங்களையும் பெற்றவர். ஏறக்குறைய 40 ஆண்டுகள் பாதுகாப்பு ஆராய்ச்சித்துறையில் களமாடிய இவர், பல ஏவுகணைத்திட்டங்களில் பங்களித்திருக்கிறார். ‘‘இலட்சிய இந்தியா 2020’’ திட்டத்திலும் உலோகவியல் தொடர்பாகப் பங்களித்திருக்கிறார்.
2011 முதல் 2016 வரை திருச்சி என்.ஐ.டி யின் இயக்குனராக, இவரின் உயர் கல்விப் பங்களிப்புகள் பரவலான வரவேற்பைப் பெற்றன.
டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் அவர்களுடன் டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றவர் இவர். ஒரு மாலையில் கலாம் அவர்களின் நினைவுகளைப் பற்றி அவருடன் இணைய வழியில் கலந்துரையாடினேன். அவை இங்கே…
கலாம் அவர்களுடனான முதல் சந்திப்பு எப்படி நிகழ்ந்தது? நம்பிக்கை விதைக்கும் ஒற்றைச் சொல் ஒருவருடைய வாழ்க்கையையே மாற்றிவிடும் வல்லமை பொருந்தியது என்பார்கள். முதல் சந்திப்பில் கலாமையும் அவருடைய அந்தச் சொல்லையும் பற்றி…
நான் ஹைதராபாதில் உள்ள டி.ஆர்.டி.எல் (Defence Research and Development Laboratory) நிறுவனத்தில் ஒரு ஏவுகணை ஆராய்ச்சியில் இருந்தேன். ஏறக்குறைய பத்தாண்டுகளாக நடந்த இந்த ஆராய்ச்சியின் முடிவில் நாங்கள் உருவாக்கிய ஏவுகணையை இந்திய ராணுவம் ஏற்கவில்லை. பழைய தொழில் நுட்பத்தில் அமைந்துள்ளதாகக் கூறி ஏவுகணை நிராகரிக்கப்பட்டது. சீட்டுக்கட்டு சரிவது போல எங்கள் பல்லாண்டு உழைப்பு வீணானதை, ஏவுகணைத் திட்டத்தில் பணிபுரிந்த எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் வேறு ஒரு ஆய்வகத்தில் பணி மாறுதல் பெற்றுச் சென்றேன்.
இந்த இக்கட்டான சூழலில் அப்துல் கலாம் டி.ஆர்.டி.எல் நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவர் பங்கேற்ற ஒரு அலுவலகக் கூட்டத்தில் நானும் பங்கேற்க நேர்ந்தது. கூட்டத்தின் முடிவில், அவரைக் கடந்து செல்லும் போது ‘ஹலோ!’ என்றார் கலாம். நானும் பதிலுக்கு வணக்கம் சொல்லி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். உங்களைப் பற்றி எனக்குத் தெரியும் என்றார். ‘10 மணிக்கு என்னைச் சந்திக்க முடியுமா?’ என்று கேட்டார். நான் மறு நாள் காலை 10 மணி என்று நினைத்தேன். ஆனால் அவர் குறிப்பிட்டது அன்று இரவு 10 மணிக்கு!. இரவு அவரைச் சந்தித்தேன். அறையில் ஒரு டேப் ரெக்கார்டர், குமுதம், விகடன் வார இதழ்கள் இருந்தன. ஏன் மாறுதலாகிச் சென்றீர்கள். புதிய ஏவுகணைத்திட்டத்தில் நீங்கள் பங்கேற்க வேண்டும் என்றார். நிறைய விவாதித்தோம். அதிகாலை 2 மணி வரை உரையாடல் நீண்டது.
ஏவுகணைத் திட்டத்தில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் வாய்ப்பைக் கலாம் அளித்தார். அவருடைய ‘ஹலோ’ என்ற சொல் என் வாழ்க்கையை மாற்றிவிட்டது.
அப்துல் கலாமுடன் பல ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறீர்கள். அவருடைய தொழில்நுட்பத் தலைமைப் பண்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எடைகுறைந்த ஆனால் வலிமையான உலோகம் மெக்னீசியம். இதை வார்க்கும் தொழில்நுட்பம் சிக்கலானது. ஆய்வுக்கூடத்தில் இந்த ஆராய்ச்சியில் நான் ஈடுபட்டு, மெக்னீசிய வார்ப்புத் தொழில்நுட்பத்தை உருவாக்கினேன். கலாமிடம் அதை விவரித்தேன். இந்தத் தொழில் நுட்பத்தை உடனடியாக தொழில்துறையினருக்கு பரிமாற்றம் செய்து பெருமளவில் வார்ப்புப் பாகங்களை உருவாக்க வேண்டும் என்றார் கலாம். எனக்கு இது ஏமாற்றத்தைத் தந்தது. ஆய்வுக்கூடத்தை விரிவுபடுத்தி அங்கேயே பாகங்களை உற்பத்தி செய்யலாம் என நான் எதிர்பார்த்தேன். பிறகு தான் கலாமின் தீர்க்க சிந்தனை எனக்கு விளங்கியது.
ஆராய்ச்சி நிலையிருந்து உற்பத்தி நிலைக்கு ஒவ்வொரு படைப்பும் செல்ல வேண்டும். உற்பத்தி நிலையிலிருக்கும் பொருள்/உபகரணம் சந்தைப்படுத்தப்பட்டு நுகர்வோரைச் சென்றடையும். ஆராய்ச்சி நிலையிலிருந்து உற்பத்தி நிலைக்கு வருவதில் பாதுகாப்புத்துறையில் காலதாமதம் ஏற்படும். இதைத் தவிர்க்க கன்கரண்ட் எஞ்சினியரிங் (Concurrent Engineering – நிகழ்நிலைப் பொறியியல்) என்ற முறையைப் பயன்படுத்த முனைந்தார் கலாம். அதனால் கடைசி வரை காத்திருக்காமல், உடனடியாக மெக்னீசியம் வார்ப்புத் தொழில்நுட்பம் தொழிற்சாலைக்குத் தரப்பட்டால் பொருளை உற்பத்தி செய்வதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கலாம். இது கலாமின் தீர்க்க சிந்தனை.