
கேட்டலும் அறிதலும் –
திரு. ப.திருமலை, மூத்த பத்திரிகையாளர்
வணக்கம் ஐயா..
வணக்கம். என்ன சதீஷ் காலையிலேயே கொட்டாவி விடற.. தூங்கல்லையா..?
ஐயா.. காலையில பழையசோறு சாப்பிட்டுட்டு வந்திருப்பான். அதுதான் தூக்கம் கண்ணைச் சுழற்றுது எனக் கிண்டல் செய்தான் சுரேஷ் இல்லைங்க ஐயா.. இரவு நீண்டநேரம் படிச்சிட்டு இருந்தேன்.
பதிலளித்தான் சதீஷ். ‘சுரேஷ்! பழைய சோறு சாப்பிடுவது மோசமானதும் இல்லை. இரவு நீண்ட நேரம் விளக்கு எரிய படித்துக் கொண்டிருப்பது நல்லதும் இல்லை. முதல்ல பழைய சோறு விஷயத்துக்கு வர்றேன். முன்னாடியெல்லாம் நமது உணவு முறையில் பழைய சோறு வழக்கமான ஒன்றாக இருந்தது. அப்படிப்பட்ட பழைய சோறு பிற்காலங்களில் கிராமத்துக்காரர்களின் சாப்பாடு என்று வகைப்படுத்தப்பட்டது. நாகரிக உலகில் பழைய சோறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வந்துவிடும் என்ற தவறான அச்சத்தால் சப்பாத்தி சாப்பிடும் பழக்கத்துக்கு மாறிவிட்டார்கள். ஆனால் பழைய சோறுதான் பல நோய்கள் வராமல் தடுக்கும் என்று ஆய்வில் கண்டுபிடிச்சிருக்காங்க.
பழையசோறு பற்றி ஆராய்ச்சி செய்தாங்களா..?
ஆமாம். 1780-களில் பஞ்ச காலத்தில் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரி சார்பில் ஏழைகளுக்குப் பழைய சோறு கொடுத்ததால் அதை அப்போது கஞ்சித்தொட்டி ஆஸ்பத்திரி என்று மக்கள் அழைத்தனர். இப்போது அதே ஆஸ்பத்திரி பழைய சோற்றினை ஆராய்ச்சி செய்து, அது உடல்நலத்துக்கு எவ்வளவு ஆரோக்கியமானது என்பதை உலகுக்கு அறிவித்து இருக்கிறது
அப்படியா.. ஆராய்ச்சி முடிவைச் சொல்லுங்களேன்
கடந்த 5 ஆண்டுகளாக இந்த ஆஸ்பத்திரியில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் பழைய சோறு குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, மாப்பிள்ளை சம்பா மற்றும் ரேஷன் அரிசி சாதத்தைக் கோடை காலத்தில் மண் பானைகளில் வைத்து 8 மணி முதல் 10 மணி நேரம் வரையிலும், மழைக்காலத்தில் 14 மணி நேரம் வரையும் ஊறவைத்து ஆராய்ச்சி நடத்தினார்கள். அதனால் உருவாகும் பாக்டீரியாக்கள் குடல் ஆரோக்கியத்தையும், இரும்பு சத்தையும் அதிகரிக்கச் செய்கிறது என்று கண்டுபிடித்தனர். அது மட்டுமல்லாமல் பழைய சோறை தொடர்ச்சியாக 55 நோயாளிகளுக்குக் காலை உணவாகக் கொடுத்தபோது அதில் 13 சதவிகிதம் பேருக்கு அந்த நோயின் அறிகுறியே இல்லாமல் போய்விட்டது.
மற்றவர்களுக்கு நோயின் தன்மை 9 சதவிகிதமாகக் குறைந்தது. நீரிழிவு நோய் வராமல் தடுப்பது, உடல் பருமன் ஏற்படாமல் தடுப்பது, கர்ப்பிணிகளுக்குக் குழந்தை நன்றாக வளர்வது, குறைப்பிரசவம் ஏற்படாமல் தடுப்பது, கர்ப்பகால நீரிழிவு, உயர் ரத்தஅழுத்தம் வராமல் காப்பாற்றுவது, இதய நோய் வராமல் தடுப்பது போன்ற பல நோய்களை விரட்டுவது மட்டுமல்லாமல், பல நோய்களைக் குறிப்பாக வயிற்றுப்போக்கை குணமாக்குகிறது என்கிற ஆராய்ச்சி முடிவுகள் இன்றைய தலைமுறையினருக்கு பழையசோறு மீது நாட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மகிழ்ச்சி ஐயா. இவ்வளவு நாளும் நான் பள்ளிக்கு மதிய உணவாகப் பழைய சோறு கொண்டு வருவதைக் கேவலமாக நினைத்திருந்தேன். இதில் இவ்வளவு சத்து இருக்கிறது என்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது ஐயா.. இரவில் நீண்ட நேரம் கண்விழித்துப் படிப்பது குறித்துச் சொன்னீங்களே.. நினைவூட்டினான் சுரேஷ்.
உனக்குச் சதீஷை வம்புக்கு இழுப்பதில் அப்படி ஒரு ஆனந்தம். சரி.. இரவு நேரத்தில் மின் வெளிச்சத்தில் இருப்பது மூளைக்கு அழுத்தத்தை அளித்து, தமனிகளில் வீக்கத்தை உண்டாக்கி, இதயநோய் அபாயத்தை அதிகரிக்கலாம் என்கிறது ஒரு புதிய ஆய்வு. சுரேஷ்,நான் சொல்றது நீண்ட நேரம் மின்விளக்கில் படிப்பவர்களுக்கு உனக்கல்ல. நீ தான் எட்டு மணிக்கு சாப்பிட்டுட்டுப் படுத்துவிடுவதாக உங்க அப்பா பேரன்ட்ஸ் மீட்டிங்கில் சொன்னாரே.
ஐயா.. சென்னை அருங்காட்சியத்துக்குக் கூட்டிட்டுப் போனீங்க.. அடுத்தது வேற எங்கேயாவது அருங்காட்சியகத்துக்கு அழைச்சிட்டு போங்க ஐயா..
நானும் உங்களைத் தரங்கம்பாடி கூட்டிட்டுப் போகலாம்னு நினைச்சிருக்கேன்..
அது எங்க ஐயா இருக்கு.. அப்படி அங்க என்ன விசேஷம்?
மயிலாடுதுறை மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலம் தரங்கம்பாடி. இங்குக் கடற்கரை உள்ளது. இந்தக் கடற்கரையில் டேனிஷ் மன்னர்கள் ஆண்ட டேனிஷ் கோட்டை, கடல்சார் பொருட்கள் அருங்காட்சியகம் எனச் சிறப்புகள் இருக்கின்றன. அதில் முக்கியமாகப் பார்க்கவேண்டியது அங்கு இருக்கும் அச்சு இயந்திரம்.
அந்த அச்சு இயந்திரத்தில் பார்க்க என்னையா இருக்கு..?
அந்த அச்சு இயந்திரம் தான் தமிழ் சமூக உலகில் மாபெரும் மாற்றத்தை கொண்டு வந்தது. ஒட்டுமொத்த தமிழ் இலக்கிய வரலாற்றை அச்சு இயந்திர வருகைக்கு முன்/ பின் என இரு நிலையாகப் பிரிக்கலாம். இந்த அச்சு இயந்திரம் ஜெர்மனி நாட்டில் இருந்து 1712 – ஆம் ஆண்டுச் சீகன்பால்குவால் கொண்டு வரப்பட்டுத் தற்போது தரங்கம்பாடியில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சீகன் பால்கு யார் ஐயா?
ஜெர்மனியை சேர்ந்த பார்த்லோமேயு சீகன்பால்கு 10.7.1682 அன்று ஜெர்மனியில் சாக்சோனி மாநிலத்தில் உள்ள புல்நிட்ஸ் என்ற ஊரில் பிறந்தவர். டென்மார்க் அரசர் 4 – ஆம் ஃபிரெட்ரிக் சமயப் பணி செய்ய அவரை இந்தியா அனுப்பி வைத்தார். 11.11.1705 அன்று தனது நண்பர் ஹென்ரிக்புளுசோவுடன் கோபன்ஹேகனில் இருந்து கப்பலில் இந்தியா புறப்பட்டார்.
222 நாட்கள் கப்பல் பயணத்திற்குப் பின் 9.7.1706 தரங்கம்பாடி வந்தடைந்தார். தரங்கம்பாடியில் இந்தியாவிலேயே முதன் முதலாகத் தமிழ் மொழிக்கான அச்சுக் கூடத்தை 24.10.1712 அன்று அமைத்தார். அச்சு எந்திரம் கொண்டு வருவதற்கும் எழுத்துகளைக் கோர்க்கவும் பலவித இன்னல்களைச் சந்தித்தார். முடிவில் கி.பி.1713 – ஆம் ஆண்டுப் பைபிள் புதிய ஏற்பாட்டுக்கான அச்சு கோர்க்கும் பணி தொடங்கியது. கி.பி.1715 – ஆம் ஆண்டு ஜூலை 15 – ஆம் தேதி பணிகள் முடிவடைந்தன. தமிழில் புத்தக வடிவில் முதன்முதலில் வெளிவந்த நூல் ‘புதிய ஏற்பாடு’தான்.
அதைத் தொடர்ந்து தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் அகராதி, செந்தமிழ் அகராதி இந்து சமயக் கடவுள்களின் வரலாறு உள்ளிட்ட பல்வேறு நூல்களை ஓலைச் சுவடியிலிருந்து காகிதத்தில் அச்சேற்றி வெளியிட்டார்.