வழிகாட்டும் ஆளுமை – 21
திரு. நந்தகுமார் IRS
நாம் நிறையப் பழமொழிகள் கேட்டிருப்போம். அதில் ‘பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்’ ‘‘இருக்கிறவன் சேத்துப் புடிக்கிறான்’’ அப்படின்னு வழக்கமாக இந்த மாதிரியான பழமொழிகளை, பொதுவான வார்த்தைகளை கேட்டிருப்போம். குறிப்பாக மற்றவர்கள் ஏதாவது ஒரு நல்ல வேலையை செய்து விட்டால். ‘‘ஆம் அவர்களுக்கு திறமை இருக்கிறது எனவே செய்கிறார்கள்’’ என்று சொல்வார்கள். ‘இது போன்ற திறமைகள்’ எனக்கு இல்லை அதனால் எனக்கு எதுவும் இல்லை நான் சும்மா இருக்கிறேன், என்று நிறைய பேர் புலம்புவார்கள். யாருக்கும் திறமைகள் இல்லை என்று அர்த்தமில்லை, மாறாக அனைவருக்கும் உள்ள திறமைகளைத் தான் நாம் உணர்வதில்லை. திறன் அறிதல் என்பது நம் அனைவருக்கும் மிக முக்கியம்.
நிறைய வகையான திறன்கள் இருக்கின்றன. பகுப்பாய்வுத் திறன், படைப்பாற்றல் திறன், விமர்சன சிந்தனை, செயலில் கேட்பது, நேர மேலாண்மை, தொடர்புக் கலை, குழுப்பணி, தலைமைத்துவம், முடிவெடுத்தல், உளவியல் ரீதியான திறன், உடல் ரீதியான திறன்கள் என்று பல திறன்கள் உள்ளன. ஒரு சிலருக்கு நடந்தது என்ன என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம். இதனால் இது நடந்திருக்கலாம் அதனால் அது நடந்திருக்கலாம் என்று பயங்கரமாக இது போன்ற நடந்ததை ஆராய்வதில் ஒரு விதமான திறனோடு இருப்பார்கள்.
கூட்டமாக இருக்கின்ற போது வெளிப்படும் திறன்கள், அதாவது குழுவோடு சேர்ந்து பாடும்போது சிலர் நன்றாக பாடுவார்கள். அதுவே தனியாகப் பாடச் சொன்னால் சிறிது தயங்குவார்கள். அதேபோல் தான் நடனமும். குழுவோடு சேர்ந்து ஆடும் பொழுது நன்றாக ஆடுவார்கள். அதே தனியாக அவர்களை அழைத்து ஆடச் சொன்னால் சற்றுத் தயங்குவார்கள். குழுவோடு இருக்கும் பொழுது அல்லது கூட்டு முயற்சியில் ஈடுபடும் போது அவர்கள் தனித்திறமை வெளிப்படுவதில்லை. உதாரணத்திற்கு சதுரங்கப் போட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். இது முற்றிலும் நம்முடைய தனித்திறனைச் சார்ந்து இருக்கும்.
உங்களிடம் எந்தெந்த திறமைகள் ஒளிந்திருக்கிறது என்பதை நீங்கள் அடையாளம் காண வேண்டும். நமக்குத் தெரியாமலே, பல திறமைகள் ஒளிந்து கொண்டுள்ளன. ஆனால் நாம் இதனைச் சரியாக அடையாளம் கண்டு பயன்படுத்துகிறோமா, என்றால் இல்லை. அதற்கான சூழ்நிலை வரணும், அதற்கான வாய்ப்பு அமைய வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறோம். இதனாலேயே நிறையத் தடைகள் வந்து நம்முடைய திறமைகள் அடையாளம் காணாமல் போய்விடுகின்றன.
அதனால் நம்முடைய திறமைகளைச் சரியான இடத்தில் வெளிப்படுத்த வேண்டும். நம்முடைய தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதனை உரிய இடத்தில் வெளிப்படுத்த வேண்டும். மேலும் அதற்கு முன்னால் நிறையப் பயிற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். உள்ளபடியே உங்களுக்குள் என்னென்ன திறமைகள் ஒளிந்து இருக்கிறது என்பதை உணருங்கள், அடையாளம் காணுங்கள். அடையாளம் கண்டு அதனை உலக அரங்கில் வெளிப்படுத்துங்கள்.
நான் நன்றாக நீச்சல் அடிப்பேன் என்றால், நீச்சல் திறமையை வெளிப்படுத்துவதற்காக உகந்த இடத்தில் நீங்கள் தேடிச் செல்ல வேண்டும். பயிற்சி எடுத்து அதில் வல்லவராக வேண்டும். எனக்கும் சிறுவயதில் நிறைய இசைக்கருவிகளை வாசிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் நான் அதனை முயற்சி செய்யவில்லை. இதை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களும் நாளையிலிருந்து உங்களுள் என்னென்ன திறமைகள் ஒளிந்துள்ளன என்ற விவரங்களை உணர வேண்டும். நான் எவ்வாறு இந்தத் திறமைகளை பயன்படுத்த போகிறேன்? எவ்வாறு செயல்படுத்த போகிறேன்? என்று யோசித்து செயல்படுங்கள்,சிந்தியுங்கள்.
மாபெரும் அறிஞர்களான எடிசன், நியூட்டன் போன்றவர்களெல்லாம் அவர்களுடைய தனித் திறமையை கண்டுகொண்டு, அதன்படி செயல்பட்டார்கள். எனவே நீங்களும் நமக்குள் என்னென்ன திறமைகள் உள்ளது என்பதை உணருங்கள். இறைவன் நம்மைப் பல திறமைகளுடன் தான் படைத்திருக்கிறார், அதனை உரிய இடத்தில் பயிற்சி செய்து உலக அரங்கில் அரங்கேற்றி மிகப்பெரிய ஆளுமையாக வளருங்கள். வாழ்த்துக்கள்!!!