சாதனையாளர்கள் பக்கம்

மதுரை.ஆர்.கணேசன்

“தமிழ் மணக்கச் செய்த மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளையின் கொள்ளுப்பேரன் என நினைக்கையில் மனம் நிறைந்து பொங்குகிறது”

முனைவர் பேராசிரியர் எஸ்.மோதிலால் நேரு

தாய்மொழியை உள்ளன்புடன் நேசித்த, நாம் சேர்ந்து பாடுகிற “..நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்..” என்கிற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றிய மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை தமிழுக்கு பொன்னெழுத்துக்களால் மாலை சூட்டி அழகு பார்த்திருக்கிறார்!

உடல் மொழி உணர்வுகளால் ஒன்றிணைக்கும் “..தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்..” பாடும் போது சிலாகிக்கிற அவரது தமிழ் புலமைக்கு சான்றாகும். இப்பாடல், உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கும் ஊட்ட சத்தாகவும் மாறியிருக்கிறது என்றால் மிகையில்லை!  

தமிழை வணங்கச் செய்த “..மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளையின் புதல்வர் முன்னாள் திருவிதாங்கூர் கொச்சி மாநிலத்தின் நிதியமைச்சர் பி.எஸ்.நடராஜபிள்ளையின்..” பேரனுமாகிய திருவனந்தபுரத்தை சேர்ந்த முனைவர் பேராசிரியர் எஸ்.மோதிலால் நேரு (68) கேரளா விவசாயப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், விரிவியல்துறைத் தலைவர் மற்றும் இணை இயக்குனர் போன்ற பலநிலைகளில் பணியாற்றியவர். 

இவர் இங்குள்ள தமிழ்ச் சங்கத்தின் செயலாளர், திருவனந்தபுரம் சைவப்பிரகாச சபையின் நிர்வாக இயக்குனர் குழு உறுப்பினர் போன்ற பல்வேறு பொது அமைப்புகளில் சமூகசேவைகள் செய்து வருகிறார்.

மனோன்மணியம் பெ.சுந்தரனாரின் SOME MILESTONES IN THE HISTORY OF TAMIL LITERATURE / THE AGE OF TIRUGNANA SAMBANDA 1895 என்ற ஆங்கில கல்வெட்டு நூலை முதல் முறையாகத் தமிழில் மொழி பெயர்த்து மனோன்மணியம் பெ.சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் வாயிலாக 2022-யில் எழுதி வெளியிட்டார்.

2019ஆம் ஆண்டில் எழுதிய
‘‘பி.எஸ்.நடராஜபிள்ளையும் திருவிதாங்கூர் அரசியலும்’’ என்ற மலையாள வாழ்க்கை வரலாற்று நூலை மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் பிச்சுமணி மூலமாக திருவனந்தபுரம் சைவப்பிரகாச சபையிலும் மற்றும் பி.எஸ்.என் னின் 131 ஆவது பிறந்த நாளில் கேரளா சட்ட சபை சபாநாயகர் எம்.பி.ராஜேஷ் மூலமாகவும் வெளியிட்டிருக்கிறார். 

மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை ஆங்கிலத்தில் எழுதிய EARLY SOVEREIGN OF TRAVANCORE  என்கிற கல்வெட்டு ஆய்வு நூலை தமிழில் மொழி பெயர்ப்பு செய்து திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கும் சமர்பித்திருக்கிறார்.

மதுரை உலக தமிழ்ச் சங்கம் நடத்திய சேர நாடும் செந்தமிழும் எனும் தேசிய கருத்தரங்கில் சுந்தரனாரின் தமிழ் இலக்கிய கல்வெட்டு ஆய்வு முடிவுகள் என்ற கட்டுரையை சமர்பித்திருக்கிறார்.

திருவனந்தபுரம் மாமன்னர் கல்லூரி, கேரள பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் சைவப்பிரகாச சபை, பூஜைப்புரை தமிழ்ச் சங்கம் மற்றும் திருநெல்வேலி சைவ சபை போன்ற இடங்களில் சுந்தரனாரின் நினைவுச் சொற் பொழிவுகள் நடத்தியிருக்கிறார்.

மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை மற்றும் பி.எஸ்.நடராஜபிள்ளை பற்றியும் அவர்களது கொள்ளுப்பேரன் எஸ்.மோதிலால் நேரு மனம் திறந்து பேசுகிறார்…,

“..கேரளா மாநிலத்தில் அன்றைய திருவிதாங்கூர் துறைமுக பட்டணம் ஆலப்புழையில் தந்தையார் பெருமாள்பிள்ளை, தாயார் மாடத்தியம்மாளுக்கும் மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை 1855 ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் நாள் பிறந்தார்.

சுந்தரனார் தனது பள்ளிப்படிப்பை ஆலப்புழையில் தொடங்கி சென்னை மாகாணத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்து திரும்பவும் திருவனந்தபுரத்தில் மேற்படிப்பு மற்றும் ஆசிரியர் பேராசிரியர் பணி என தொடர்கிறார்.

தாய்மொழியான தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் மலையாளத்தில் ஆழ்ந்த புலமை பெற்றவர். தத்துவ நூல்களையும், சமய நூல்களையும், வரலாற்றுப் பாடங்களையும் தேர்ந்தவர் மட்டுமின்றி இலக்கியம், மொழியாற்றல், தொல்லியல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் என்பதிலும் பன்முகமாகச் சிறந்து விளங்கியிருக்கிறார்.

தென்னிந்தியாவில் முதன் முதலில் 1885 ஆம் ஆண்டு மனோன்மணியம் பெ. சுந்தரம்பிள்ளை, தான் கற்ற மாமன்னர் கல்லூரியிலேயே தத்துவத்துறையின் முதல் பேராசிரியராக முப்பது வயதில் பணியமர்த்தப்பட்டு பனிரெண்டு ஆண்டுகள் கல்விச் சேவை ஆற்றியிருக்கிறார்!

இப்பதவி குறித்து இந்திய தொல் பொருள் ஆராய்ச்்சித்துறை இயக்குனராக பணியாற்றிய ராவ்பகதூர் கே.வி.ரெங்கசாமி ஐயங்கார் “..வெள்ளைக்காரர்கள் மட்டுமே கல்லூரிகளில் பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டு வந்த காலத்தில் பி.சுந்தரம்பிள்ளையை சென்னை மாகாணத்தின் முக்கிய கல்லூரிகளில் ஒன்றான திருவனந்தபுரம் மாமன்னர் கல்லூரியில் தத்துவத் துறை பேராசிரியராக அதுவும் முதன்மைப் பேராசிரியராக நியமித்தது ஓர் அரிய நிகழ்வாகும்..” என்று கூறுகிறார்.

1891 ஆண்டு தமிழ் மொழியின் முதல் காப்பிய நாடகமான “…மனோன்மணியம்…” என்ற நவீன நாடகத்தை இயற்றினார். இதில் சைவ சித்தாந்த தத்துவங்களும், கோட்பாடுகளும், பதி, பசு, பாசம், என்கிற முப்பெரும் உண்மைகளும் இடையிடையே கூறப்பட்டிருக்கிறது அறிஞரான பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை தமிழ் நாடகத்துறைக்கு தந்திருக்கும் மனோன்மணியம் நாடகம் இவரது தமிழ்ப் புலமைக்குச் சான்றாகும்!

தமிழ் மொழிக்கு மரியாதை செலுத்தும் வகையில் மனோன்மணியம் பெ.சுந்தரனார் எழுதிய நீண்ட பாடலிருந்து தமிழக அரசு சிலவரிகளைத் தேர்ந்தெடுத்து அரசு சார்ந்த எல்லா நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாடி துவங்க வேண்டும் என்று 1970 ஆண்டு நவம்பர் 23ஆம் தேதியன்று ஓர் அரசாணை பிறப்பித்து வெளியிட்டது.

அத்துடன் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இப்பாடலை, மோகன ராகத்தில், திஸ்ர தாளத்தில் பாடவேண்டும் என்று கூறி தமிழக அரசே வெளிட்டது.

தமிழக அரசின் மாநிலப் பாடலாக, சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை அறிவித்த போதும், அவரது நினைவாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய போதும் நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு ஈடுயிணையில்லை!

லண்டன் மாநகரில் செயல்பட்டு வரும் ராயல் ஏசியாடிக் சொசைட்டி ஆப் கிரேட் பிரிட்டன் என்ற பன்னாட்டு ஆய்வு நிறுவனத்தின் தலைமை செயலகத்தில் அமைந்துள்ள நூல் நிலையத்தில் சுந்தரனாரின் சரித்திரப் படைப்பான Some Milestones in the History of Tamil Literature or The Age of Thirugnana Sambanda அதாவது திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி என்ற நூலின் முதல் பக்கத்தில் “..ராயல் ஏசியாடிக் சொசைட்டி, லண்டனுக்கு ஆசிரியரின் வாழ்த்துக்களுடன்..” என்ற அவரது கையெழுத்தைத் தாங்கிய நூலைப் பார்த்த பொழுது உண்மையிலேயே பெருமிதம் கொண்டேன்.

முதலாவதாக நம்மை அடக்கி ஆண்ட ஆங்கிலேயர்களின் இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் மிகமுக்கியமான நூலகத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய 100 ஆராய்ச்சி நூல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இரண்டாவதாக ஐரோப்பிய தொல்லியல் அறிஞர்கள் தமிழின் பழமையையும் தமிழ் இலக்கியங்களின் காலத்தையும் அதன் இலக்கிய நயத்தையும் தவறாக மதிப்பிட்ட போது அதற்கு மறுப்புரைத்து தக்க சான்றுகளுடன் ஆங்கிலத்திலேயே ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டு, தனது கருத்து சரியானது என்று உலகிற்கு தெரிவித்தது.

அந்த நூலை, அரும் பெரும் பொக்கிஷமாக வைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்த பொழுது எனக்கு உண்மையிலேயே பெருமிதமாக இருந்தது.

மூன்றாவதாக, தான் கொண்ட நன்மதிப்பின் அடையாளமாக, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சிறந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளரும், இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் தலைவருமான முனைவர் ஈ.ஹட்ஸ் அவர்களுக்கு இந்த நூலை அர்ப்பணித்தார் என்பது அவரது தன்னடக்கத்திற்கும் தெளிந்த சிந்தனைக்கும் எடுத்துக்காட்டாகும்!

அத்துடன் சுந்தரனார் பெற்ற விருதுகள், பட்டங்கள், பாராட்டுக்கள், சான்றுகள், பதவிகள், கௌரவம் எனக் கணக்கில் அடக்க முடியாதவை ஆகும்!

சுந்தரனார் தனது நாற்பத்து இரண்டாவது வயதில் 1897 ஆம்ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ஆம் நாள் இப்பூவுலகை விட்டு மறைந்தார்.

மங்காப் புகழுடைய “..மனோன்மணியம்..” நாடகக்காப்பியத்தைத் தந்து உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த மனோன்மணியம் பெ.சுந்தரனாரின் கொள்ளுப்பேரன் என நினைக்கையில் மனம் நிறைந்து பொங்குகிறது…” 

எனது பாட்டனார் “..பிஎஸ்என்..” என்று எல்லோராலும் அழைக்கப்படும் பி.எஸ்.நடராஜ பிள்ளை 25ஆம் வயதில் 1916 ஆம் ஆண்டு தனது அரசியல் பயணத்தை மன்னர்  மூலம் மக்கள் சபையில் உறுப்பினராகத் துவங்கி, இந்தியப் பாராளுமன்ற உறுப்பினராக நிறைவு செய்தார்.

தேசிய இயக்கத்தில் ஈடுபட்டு ஒட்டுமொத்த சமூக நன்மையையும், வளர்ச்சியையும் முன்னிறுத்திப் போராடிய பிஎஸ்என் 1954 ஆம் வருடம் அமைச்சரவையில், நிதியமைச்சராகப் பணியாற்றினார். அவர் சட்டசபையில் தாக்கல் செய்த நிதியறிக்கை இன்றும் சமத்துவக் கொள்கையின் உதாரணமாகக் கருதப்படுகிறது.

அந்த நிதி அறிக்கை, பத்தாம் வகுப்பு வரை இலவசக் கல்வி, பொதுமக்கள் துணையுடன் வனம் வகுப்பு, விவசாயத்திற்கு முன்னுரிமை, அரசு வேலை வாய்ப்பு மையம், அரசு தேர்வாணையம், பிற்பட்ட சமூகத்தினருக்கு வேலையில் முன்னுரிமை என்று மேலை நாடுகளில் கூட நடைமுறையில் இல்லாத பல திட்டங்களை சுதந்திர திருவிதாங்கூரில் செயல் படுத்துவதற்கு முன்வந்தார்.

பிஎஸ்என் இந்திய அரசியல் சட்ட நிர்ணய சபையில் பங்கு பெற்று மாநிலங்களின் உரிமைக்கு தக்க மதிப்பீடு கொடுக்கவில்லை என்றும் குறிப்பாக மாநிலத்திலிருந்து கிடைக்கும் சுங்கவரியில் ஒரு பகுதியை மீண்டும் மாநிலத்திற்கு கொடுக்கும் பொழுது கடைபிடிக்கப்படும் அளவுகோல் தவறு என்றும் சுட்டிக்காட்டினார் இதை குறித்து இன்றும் விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சுந்தரனார், திருவனந்தபுரம் பேரூர்கடையில் ஏறத்தாழ 100 ஏக்கர் வளாகத்தில் மாளிகை கட்டி தனது குருநாதர் பேராசிரியர் ராபர்ட் ஹார்வி நினைவாக ஹார்வி மாளிகை எனப்பெயர் சூட்டி, தனது மரியாதையைச் செலுத்தினார்.

பிஎஸ்என் தான் கண்ட சுதந்திர இந்தியா என்ற கொள்கையின் மீது கொண்ட உறுதியின் காரணத்தினால் அன்றைய திவான் சி.பி.ராமசாமி ஐயரின் கோபத்திற்கு ஆளாகி, தனது உடமையையும், ஹார்வி மாளிகையையும் இழந்து ஓலைக் குடிசையிலேயே தனது வாழ்நாள் முழுவதும் வாழ்ந்திருந்தார்.

பிஎஸ்என் எடுத்த முடிவுகளும், அவரது கொள்கையும், அவரது செயல்பாடுகளும் தனி மனித தூய்மையும் போற்றத்தகுந்தது என்று கருதிய திருவனந்தபுரம் வாழ் பொதுமக்கள் அவரை மூன்று முறை சட்டசபை உறுப்பினராகவும், ஒருமுறை இந்திய பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்தனர்.

எங்களுக்காகப் பொருளை சம்பாதித்து வைக்கவில்லை என்றாலும், அவரது சமூகநல மேம்பாட்டுச் செயல்களால் அவர் அடைந்த கீர்த்தியின் முன்னால் தலை வணங்குகிறோம்.

இவ்வாறு தங்களது வாழ் நாட்களின் பெரும்பகுதியை மக்களின் நலனுக்காக அர்ப்பணித்த அருந்தவப்புதல்வர்களின் பேரன் என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன்…”

தமிழுக்காக, தேசத்துக்காகத் தங்களையே அர்ப்பணித்த ஒப்பற்ற பெரியோர்களின் பேரன் பேராசிரியர் மோதிலால் நேரு ஐயா அவர்கள் தம் மேலான நற்பணிகள் தொடர ‘ஆளுமைச் சிற்பி’ வாழ்த்துகின்றது. l