சிந்தித்தார்கள்! வென்றார்கள்! –23

‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்

சீன ஞானி கன்பூசியஸிடம் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடுகளின்றி பல மாணவர்கள் படித்து வந்தார்கள். ஒரு நாள் ட்சே-லு என்ற மாணவர் நெள-வு என்ற மாணவரை அடித்துவிட்டார். தான் இப்படி அடிக்கடிக் கோபப்பட்டுப் பிறரைத் துன்புறுத்துவதைக் கண்டு வருந்திய ட்சே-லு கன்பூசியஸிடம் வந்து மன்னிப்புக் கேட்டார்.

அப்போது, ‘‘குருவே, என் உடலுக்கு என்ன ஆயிற்று? இந்தக் கல்லூரியில் என்னால் ஒழுங்காக இருக்க முடியவில்லையே!’’ என்று வருந்தினார். கன்பூசியஸ் அவரிடம், ‘‘உனது உடலுக்கு ஒன்றும் இல்லை. ஆனால் நீ சிலவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நான் உனக்கு இன்று அதை விளக்கிச் சொல்கிறேன்’’ என்று கூறி அதை விளக்கினார்.

‘‘ட்சே-லு உன் இளமைக் காலத்தில் உனக்கு எத்தனை பற்கள் இருந்தன?’’ என்று கேட்க, அவர் ‘‘முப்பத்தி இரண்டு’’ என்றார். ‘‘சரி, இப்போது எத்தனை பற்கள்’’, ‘‘ஆறு பற்கள் விழுந்துவிட்டன. எனவே இருபத்து ஆறு பற்கள் உள்ளன’’ என்றார் ட்சே-லு. ‘‘சரி, உனக்கு இளமையில் எத்தனை நாக்கு இருந்தது?’’, ட்சேலு உடனே ‘‘ஒன்று தான்’’. ‘‘இப்போது’’, ‘‘இப்போதும் ஒன்று தான்’’ என்றான் ட்சே-லு.

கன்பூசியஸ் ‘‘உனக்குத் தெரிந்த தாத்தா முன்-கன்னுக்கும் இளம்வயதில் முப்பதுக்கும் மேறப்ட்ட பற்கள் இருந்தன. ஆனால் இப்போது எத்தனை பற்கள் உள்ளன?’’ என்று கேட்டார். ‘‘இரண்டு, ஆனால் ஒரு நாக்கு தான் உள்ளது’’ என்று அறிவோடு பதில் கூறினார்.

கன்பூசியஸ் அவரிடம், ‘‘நல்லது, சரியாகச் சொன்னாய், நாக்கு மென்மையாக உள்ளது. ஆனால் பற்கள் கடினமானவை. கடினமாக உள்ளவை விரைவில் உடைந்து போகும். அல்லது சிதைந்து போகும். ஆனால் மென்மையாக உள்ளவை நாக்கு போல எளிதில் பாதிப்படையாது. நிலை குலையாது. எனவே நீ கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். உன் கோபம் பற்களைப் போன்று கடுமையானது. ஆனால் பாதிப்பைத் தரக்கூடியது’’ என்று விளக்கம் தந்தார். ட்சே-லு தன் கோபத்தை முற்றிலும் குறைத்துக் கொண்டு சாந்தமானவராக மாறினார்.
இப்படித் தன் வாழ்நாள் முழுவதும் போதனையால், அறிவுரைகளால் அழியாத வாழ்வியல் கோட்பாடுகளை வழங்கிச் சென்றவர் தான் கன்பூசியஸ் என்னும் சீன தேசத்து ஞானி.

இளமையும் புதுமையும்!

கி.மு.551 – ஆம் ஆண்டில் இன்றைக்கு 2575 – ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் மாதம் 28 – ஆம் தேதி ஷ லியாங் என்ற தந்தைக்கும் ஜென் சென் ட்சாய் என்ற தாய்க்கும் மகனாகப் பிறந்தவர் ‘குங் சியு’ என்ற இயற்பெயர் கொண்ட கன்பூசியஸ். பின்னாளில் இவரது சீடர்கள் ‘குங்க்புட்சு’ என்று அழைத்தார்கள். இதன் அர்த்தம் ‘குருநாதர் குங்’ என்பதாகும்.

பிற்காலத்தில் ‘கன்பூசியஸ்’ என்று மருவி அழைக்கப்பட்டார். இன்று சீன தேசத்து நாட்டு மக்களுக்குத் தலைச்சிறந்த தத்துவ ஞானியாகவும், அவர்களது மேலான குருவாகவும் திகழ்கின்றார்.

கன்பூசியஸ் பிறந்த காலத்தில் ஒரு கதை சொல்லப்பட்டதாம். சி லின் என்ற ஒரு ஒற்றைக் கொம்புக் குதிரை தோன்றி ஒரு செய்தியைச் சொன்னதாம். அதாவது, ‘‘பளிங்கு போல் தூய்மையான ஒரு குழந்தை விரைவில் பிறக்கப் போகிறது. அக்குழந்தை எந்த நாட்டையும் ஆட்சி செய்யாத ஒரு அரசனாகத் திகழும்’’ என்பதே அந்தச் செய்தி. அந்தச் செய்தியில் சொல்லப்பட்ட அதிசயக் குழந்தையாகவே கன்பூசியஸ் கருதப்பட்டார்; இன்றளவும் கருதப்படுகின்றார்.

கன்பூசியஸ் பிறந்த மூன்று ஆண்டுகளில் அவரது தந்தை இறந்துவிட்டார். தாயின் அரவணைப்பில் வளர்ந்த கன்பூசியஸ் பல்திறன் கொண்டவராகத் திகழ்ந்தார். கணிதப் பாடத்தில் தெளிவு, இசைத் துறையில் பயிற்சி, ேதரோட்டம் விடுதலில் அனுபவம், சடங்கு முறைகளில் தேர்ச்சி என்று பலவற்றைத் தேடித் தேடிக் கற்றுக்கொண்டார். இவரது 23 – வயதில் தாயை இழந்தார். தாயை இழந்த பின்பு மூன்று ஆண்டுகள் தனிமையில் தவம் புரிந்தார் என்றும், அந்தத் தவத்தின் பின்பு மிகவும் திறமையுடன் தத்துவ ஞானத்தோடு செயல்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.

ஆரம்பத்தில் ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகள் பராமரிப்புத் தொழில் செய்த கன்பூசியஸ், அரசினுடைய கருவூலத்தின் கண்காணிப்பாளராக இருந்தார். அவர் பிறந்த லூ நாட்டு அரசர் கன்பூசியஸின் கணித மற்றும் அறிவுத் திறமையைக் கண்டு அவருக்கு அரசரின் ஆலோசகர் என்ற உயர் பதவியை வழங்கினார். அவரது ஆலோசனைகள் மக்களுக்கு அமைதியான வாழ்வைக் கொடுக்க உதவின.

ஆனால் சிறு சிறு, குறு நில மன்னர்களாகவும் உறவினர்களாகவும் இருந்த சீன தேசத்து அரசர்களுக்கு இடையில் அடிக்கடி அதிகாரப் போர் நடந்து கொண்டேயிருந்தது. இதனால் எதையும் உருப்படியாகச் செய்ய முடியாத சூழல் உருவானதால் கன்பூசியஸ் அரசுப் பதவியிலிருந்து வெளியேறினார். முதன்முதலாக ஒரு கல்லூரியை ஆரம்பித்தார். பல மாணவர்கள் படிக்க வந்தனர். பணக்கார மாணவர்களிடம் பொருளுதவி பெற்றுக் கொண்டு ஏழை மாணவர்களுக்கு இலவசமாகத் தன் கற்பித்தலை வழங்கினார். ஆனால், நாட்டில் தொடர்ந்து போர்ச் சூழல் இருந்ததால் கல்வி நிலையத்தை மூடிவிட்டு அடுத்த நாட்டிற்குச் சென்றார்.

தொடர் பயணம்

‘லூ’ நாட்டைவிட்டு அடுத்த நாட்டுக்குக் கன்பூசியஸ் சென்ற போது அவரது மாணவர்களும் அவரோடு சென்றனர். அடுத்த நாட்டு அரசர் ஒரு சிறந்த அறிவாளி தன் நாட்டுக்கு வருகிறார் என்பதால் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டார். அவருக்கு அரசின் ஆலோசகர் பதவியைத் தந்தார். கன்பூசியஸ் காட்டிய வழியில் அந்த மன்னன் நடந்த போது நாட்டில், மக்களிடம் மகிழ்ச்சி நிலவியது.

இப்படி ‘நியூ’ என்ற நாட்டுக்குச் சென்ற போது அந்த அரசர் நீதிபதி பதவி தந்தார். பின்பு காவல் மற்றும் இராணுவத் துறை அமைச்சர் பதவியும் தந்தார். மக்கள் மகிழ்ச்சியோடு வாழ கன்பூசியஸ் வழிகாட்டினார். இதனால் அரசரும் மகிழ்ந்தார். ஆனால், அரசரோடு பல ஆண்டுகள் ஒட்டிக்கொண்டிருந்த பல மூத்தவர்கள் அரசரிடம் ‘‘இப்படியே போனால் கன்பூசியஸ் சொல்வதைத்தான் மக்கள் கேட்பார்கள். எனவே அரசர் தனக்கே உரிய மிடுக்கோடு இருக்க வேண்டும். மேலும் போர் செய்வதுதான் மக்களைக் காக்கும் அரசனின் தர்மம்’’ என்றெல்லாம் தூண்டிவிட்டார்கள். வேறு வழியின்றி கன்பூசியஸ் வெளியேறினார்.

இப்படிப் பதினான்கு ஆண்டுகள் பல நாடுகளுக்கும் சென்று அறிவுரை கொடுப்பதும், பின் அவர்கள் அவரை அவமதிப்பதும் நடந்தது. கன்பூசியஸ் அதுபற்றிக் கவலைப்படவில்லை. செல்லுமிடமெல்லாம் அவருக்குப் புதிய சீடர்கள் கிடைத்தார்கள். அவர்களுக்கும் போதிப்பதைத் தன் தினசரிக் கடமையாகக் கொண்டிருந்தார் கன்பூசியஸ். ஏறக்குறைய மூவாயிரம் சீடர்கள் அவருக்கு இருந்ததாக எழுதப்பட்டுள்ளது. தனது அறுபது வயதில் தன் சொந்த நாட்டுக்கே திரும்பிய கன்பூசியஸ் போதிப்பதைத் தன் இறுதி நாட்களில் மேற்கொண்டார்.