அறிவியலின் கதை – 01


திரு.நன்மாறன் திருநாவுக்கரசு

றிவியலின் கதை என்ன? எளிமையான கேள்வி இல்லையா? ஆனால் பதில் அத்தனை எளிமையானது அல்ல. மேலோட்டமாகப் பார்க்கும்போது அறிவியலின் கதை என்பது மனிதர்கள் எப்படி அறிவியல் கோட்பாடுகளை உருவாக்கினார்கள், என்னென்ன கண்டுபிடிப்புகளைச் செய்தார்கள், எப்படி அறிவியலைத் தனித் துறையாக உருவாக்கி அறிவுச் சேகரிப்பில் ஈடுபட்டார்கள் என்பதைப் பற்றிய கதையாகத் தோன்றலாம். ஆனால் அறிவியல் என்பதன் வரையறை மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு காலத்தில் அறிவியலாக இருந்தது பின்னாளில் தத்துவமானது. வேறொரு காலத்தில் அறிவியலாக இருந்தது பின்னாளில் மூடநம்பிக்கையானது.

இப்படி அறிவியல் என்றைக்கும் நிலையாக இருந்தது இல்லை. இதனால் அறிவியலின் கதையும் காலத்துக்கு ஏற்றாற்போல் மாற்றம் கொள்கிறது. ஆனால் அறிவியலின் அடிப்படை ஒன்றுதான். நாம் உலகைப் பற்றியும், அதில் உள்ள விஷயங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளும் வழியே அறிவியல். அதனால் நமது தேடல் பற்றிய கதையே அறிவியலின் கதை.

நம்முடைய கதை ஒரு பெரிய வெடிப்பில் இருந்தே தோன்றுகிறது. திடீரென்று அந்தப் பெருவெடிப்பு (Big Bang) நிகழ்ந்தது. அதில் இருந்து அண்டம் தோன்றி விரிந்துகொண்டே செல்கிறது. அது விரியும் திசைகளில் எல்லாம் நட்சத்திரங்கள் தோன்றி மறைந்தன. இவை நட்சத்திர மண்டலங்களாகின (Galaxy). நட்சத்திரங்களின் மறைவு கோள்களைத் தோற்றுவித்தன. கோள்கள் தோன்றி சூரியக் குடும்பங்கள் அமைந்தன. இப்படிப் பால்வீதி நட்சத்திர மண்டலத்தில் உள்ள சூரியக் குடும்பம் ஒன்றில், திடீரென ஒருநாள் அந்த நீல நிறக் கோள் தோன்றியது. அதுதான் பூமி.

ஆரம்பத்தில் சூடாக இருந்த பூமி, பின்பு குளிர்ச்சி அடைந்தது. பூமி குளிர்ந்தவுடன் சில வேதி வினைகள் அரங்கேறின. அந்த வேதிவினைகளின் ஒருகிணைந்த விளைவாகத் தோன்றிய அதிசயம்தான் உயிர். உயிர் தொடங்கி ஒரு பல கோடி ஆண்டுகள் கழிந்தன. அப்போது சில உயிர்கள் இரண்டாகப் பிரிந்தன. அங்கிருந்து பல உயிர்கள் பரிணமித்தன. இந்த வரிசையில் சுமார் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஹோமே சேப்பியன்ஸ் என அறியப்படும் இனமே நமது மனித இனம்.

கேள்வியில் பி்றந்தது

மனித இனத்தின் சிறப்பம்சமாக அமைந்தது, கற்பனையும் கேள்விகளும். மனிதர்கள் எல்லாவற்றையும் கேள்வி எழுப்பினர். நம்மைச் சுற்றி என்ன இருக்கிறது? ஏன் இருக்கிறது? எப்படி இருக்கிறது? எதற்காக இருக்கிறது? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்தன. இந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடும் பயணமும் தொடங்கியது. அந்தப் பயணத்தின் வழியாகத்தான் அறிவியல் பிறந்தது.

மனித இனத்தின் சிறப்பம்சமே நமக்குள் உருவாகும் ஆச்சரியங்களும் கேள்விகளும்தான். மிகக் குறுகிய காலத்தில் நாம் நிறையக் கேள்விகளை எழுப்பிவிட்டோம். அந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடவும் தொடங்கிவிட்டோம்.

அமெரிக்க வானியல் ஆய்வாளரும், அறிவியல் எழுத்தாளருமான கார்ல் சாகனின் புகழ்பெற்ற கூற்று ஒன்று இருக்கிறது. ‘நாம் எல்லோரும் நட்சத்திரத்தின் தூசுக்களால் உருவானவர்கள். நட்சத்திரங்களை உருவாக்கிய அதே அணுக்கள்தான் நம் மனித மூளையையும் உருவாக்கி இருக்கிறது. அந்த வகையில் நமது மூளையின் வடிவாக பிரபஞ்சம் தன்னைத் தானே புரிந்துகொள்ள முயற்சிக்கிறது. அண்டத்தைப் புரிந்துகொள்ளும் மனிதர்களின் முயற்சியே அறிவியல்’ என்கிறார் சாகன்.

இதன்படிப் பார்க்கும்போது அறிவியலின் கதை என்பது மனித அறிதலின் கதை. மனித முயற்சியின் கதை. நம்மை சுற்றி இருக்கும் மர்மங்களுக்கு விடை காணும் பயணத்தின் கதை.
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தே நாம் அண்டத்தைப் பற்றியும், அதில் இருக்கும் விஷயங்கள் பற்றியும் பதில் ஆராய்ந்துகொண்டிருக்கிறோம். வரலாற்றின் ஆரம்பநாட்களில் சுற்றி இருந்த விஷயங்களைக் குகைகளில் ஒவியங்களாகத் தீட்டினோம். இன்றைக்கு மரபணுக்களை வெட்டி ஆராய்கிறோம். விண்வெளிக்கு விண்கலத்தை அனுப்புகிறோம். இரண்டு துகள்களை மோதவிட்டு அணுக்களின் உலகை அறிய முயற்சிக்கிறோம். ஆனாலும் நமக்கு விடைகள் கிடைத்தபாடில்லை. புதிர்கள் தீர்ந்தபாடில்லை.

ஒவ்வொரு பதிலும் பல கேள்விகளைத் தோற்றுவிக்கின்றன. பல கேள்விகள் அனைத்தும், மேலும் பதில்கள் தேட உந்துகின்றன. கேள்விகள் இருக்கும்வரை பயணமும் தொடரும். அறிவியலின் கதையும் நீளும்.

அறிவியல் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது ரோபோட்டுகளும் விண்வெளிக் கப்பல்களும், பரிசோதனைகள்கூடங்களும், அங்கே வெள்ளை அங்கி அணிந்தபடி நடமாடும் விஞ்ஞானிகளும்தான் இல்லையா? ஆனால் அறிவியல் என்பது அதைவிட பழமையானது.