
வரலாறு பேசுவோம்-04
திரு.முகில்
இடம், Gasthof zum Pommer என்ற ஆஸ்திரிய நாட்டின் சிற்றூர். ஆண்டு 1889. மாதம் ஏப்ரல். நாள் 20. நேரம் மாலை 6.30. கிளாரா என்ற அந்தப் பெண்ணுக்குக் குழந்தை பிறந்திருந்தது. ஆண் குழந்தை.
‘பிறந்த பிள்ளை எடை ரொம்பக் குறைவா, நோஞ்சானா இருக்குது. ஒண்ணு ரெண்டு மாசம் உயிரோட இருந்தாலே பெரிய விஷயம்.’ – பிரசவம் பார்த்த மருத்துவச்சி சொன்ன வார்த்தைகள் இவை. அந்தக் குழந்தை அடால்ஃப் ஹிட்லர். பிறந்தபோது சோம்பிக் கிடந்த அந்தக் குழந்தை, அன்னையின் அக்கறையினால் தேறி மீண்டது.
ஹிட்லரின் தந்தை அலாய்ஸ், கிளாராவைவிட வயதில் முதிர்ந்தவர். அவருக்குத் தம் மனைவி, குழந்தைகள் மீதெல்லாம் அதிக அன்பெல்லாம் இல்லை. எல்லோரும் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று கண்டிப்புடன் நடந்து கொண்டார். ஆனால், அவரோ குடிகாரராக, ஒழுக்கமில்லாதவராக, மனைவியை, குழந்தைகளைக் கொடுமைப்படுத்தும் குடும்பத் தலைவனாக நடந்து கொண்டார். அதனால் ஹிட்லரின் மனத்தில் அவரது தந்தை ஒரு வில்லனாகவே பதிந்தார்.
கி.பி.1897-ஆம் ஆண்டில் ஹிட்லரது குடும்பம், அருகிலிருந்த லாம்பேக் நகரத்துக்குக் இடம்பெயர்ந்தது. புதிய இடம். புதிய பள்ளி. கூடவே பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த கத்தோலிக்க சபையும் அங்கிருந்தது. இறைபக்தி மிக்க கிளாரா, தன் குழந்தைகளை அடிக்கடி அங்கே அழைத்துச் சென்றாள். அந்தச் சபையிலிருந்த பழங்கால ஓவியங்கள் ஹிட்லருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தன. ‘நானும் இதுபோல வரையும் ஓவியனாகப் போகிறேன்’ – ஹிட்லர் தாயிடம் ஆர்வமாகச் சொன்னான்.
கி.பி.1900. லின்ஸ் நகரின் ரியல் ஸ்கூல் என்ற நடுநிலைப்பள்ளியில் ஹிட்லர் சேர்க்கப்பட்டான். அடுத்து பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான நான்காண்டு அடிப்படைப் பொறியியல் மற்றும் தொழிற்கல்வியைக் கற்றுக் கொடுக்கும் இடம் அது. தன் ஊரிலிருந்து பள்ளிக்கு ரயிலில் செல்வது அவனுக்குப் பிடித்திருந்தது. ஆனால், படிப்பு பிடிக்கவில்லை. சமூக அறிவியலோடு சுமுக உறவில்லை. கணிதம் இனிக்கவில்லை. ஓவியம் – அதில் மட்டும் அபார ஆர்வம் இருந்தது. ஆனால், மற்ற பாடங்களில் மக்காக இருந்த ஹிட்லரின் ஓவியத் திறமையை ஆசிரியர்கள் அங்கீகரிக்கவில்லை. அங்கே அவனுக்கு நல்ல நண்பர்களும் அமையவில்லை. முதலாண்டில் ஹிட்லர் தேர்ச்சியடையவில்லை. தந்தை கொதித்துப் போனார். வசவு வார்த்தைகள். அடி. வலி.
‘நான் ஓவியனாகப் போகிறேன்’ என்றான் ஹிட்லர்.
‘உனக்கென்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா?’ என்று கோபம் காட்டினார் தந்தை.
‘எனக்கு ஓவியத்தைத் தவிர வேறொன்றும் பிடிக்கவில்லை.’
‘ஒழுங்காகப் படிக்கின்ற வேலையை மட்டும் பார். ஓவியனாக வேண்டும் என்ற உன் ஆசையெல்லாம் நான் உயிரோடு இருக்கும்வரை நடக்காது.’
‘அப்படியென்றால், நான் படித்துத் தேர்ச்சி பெற வேண்டுமென்ற உங்கள் ஆசையும் நிறைவேறாது.’
தனது ஆசையைக் கொஞ்சம்கூட மதிக்காத தந்தையைப் பழிவாங்கும் நோக்கில், படிப்பை அலட்சியப்படுத்தினான் ஹிட்லர்.
1903, ஜனவரி. குளிர்காலம். 65 வயது அலாய்ஸின் காலம் முடிந்து போனது. இறப்பின் மூலம் ஈட்டுத்தொகை, கிளாராவுக்கு அரை பென்ஷன், குழந்தைகளுக்கு அரசின் உதவித்தொகை என எல்லாம் கிடைத்தன. வீட்டின் ஒரே ஆண் மகனான ஹிட்லருக்குக் கூடுதலாகச் சுதந்தரமும் கிடைத்தது போலிருந்தது.
ரியல் ஸ்கூலின் பள்ளி இறுதி ஆண்டில் ஹிட்லர் ஒருவழியாக எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். பிரெஞ்சு மொழி தவிர. மீண்டும் இந்தப் பள்ளிப் பக்கமே வரக்கூடாது என்ற நிபந்தனையுடன் பிரெஞ்சிலும் தேர்ச்சி மதிப்பெண்களை அளித்து, ஹிட்லரை வெளியேற்றினார்கள். பின்னர், லின்ஸ் நகரிலிருந்து சுமார் 25 கிமீ தொலைவிலமைந்த ஸ்டெய்ர் நகரிலிருந்த ரியல் ஸ்கூலில் ஹிட்லர் சேர்க்கப்பட்டார். அங்கே இரண்டாவது செமஸ்டரில் அவர் எடுத்த மதிப்பெண்கள் பாதாளத்தில் இருந்தன. இனி பள்ளிப் படிப்பு நமக்கு ஒத்துவராது என்ற
‘மகிழ்ச்சியான’ முடிவுக்கு ஹிட்லர் வந்திருந்தார். கையில் ஏதோ ஒரு சான்றிதழ் கிடைத்தது.
உயர் தொழிற்கல்வியில் சேருவதற்காக முயற்சி செய்தார். அதற்கு அவரது குறைந்த மதிப்பெண்கள் இடம் கொடுக்கவில்லை. தோல்வி. எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டது போன்ற விரக்தி நிலை. லின்ஸ் நகரில் புதிதாகக் குடிபெயர்ந்த வீடு ஆறுதல் தந்தது. அங்கே காற்றோட்டமுள்ள நல்ல அறையும், நிறைய தனிமையும் ஹிட்லருக்கு அமைந்தன.
வண்ணங்களுடன் பேசினார். ஓவியங்களில் வாழ்ந்தார். கருப்பு நிற நோட்டு ஒன்றில் கவிதைகள் எழுதினார். நிறைய வாசித்தார். விருப்பப்படி ஓய்வெடுத்தார். ஏதாவது ஒரு பகுதியில் அமர்ந்தபடி நகரத்தை ஓவியங்களாக நகலெடுத்தார்.
இதுதான் நான் விரும்பிய வாழ்க்கை. நான் மிகப்பெரிய ஓவியன் ஆகப்போகிறேன். இல்லையில்லை, ஆகிக்கொண்டிருக்கிறேன். உலகின் ஓவிய மேதைகள் பட்டியலில் என் பெயரும் இணையப் போகிறது. ஹிட்லர் தனக்குள் இறுமாப்புடன் சொல்லிக் கொண்டார்.
கி.பி.1905. வசந்த காலம். ஓர் இசை நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த ஹிட்லரை, அங்கே டிரெம்பெட் வாசித்துக் கொண்டிருந்த ஓர் இளைஞன் கவர்ந்தான். அவனது பெயர் ஆகஸ்ட் குபிஷேக். தேர்ந்த இசைக்கலைஞனாகப் புகழ்பெற வேண்டுமென்பதே ஆகஸ்டின் ஆசை. இசையும் ஓவியமும் நட்புடன் கைகுலுக்கின. நாளடைவில் தன் ஆசை, லட்சியம், கனவு, ஏமாற்றம், சோகம் என எல்லா உணர்வுகளையும் ஆகஸ்டிடம் மட்டும் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு ஹிட்லர் நெருக்கமாகிப் போனார்.
கி.பி.1906, ஏப்ரல் 20. ஹிட்லருக்குப் பதினேழாவது பிறந்த நாள். கிளாரா, தன் மகனுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்தாள். ஹிட்லருக்குச் சந்தோஷம்.
‘அம்மா, நான் ஒருமுறை வியன்னா போய்வரவா?’
‘எதற்கு?’
‘ஓவியக்கல்வி படிக்க வேண்டுமே. அதற்காக முயற்சிகள் எடுக்க வேண்டாமா?’
ஓவியம் வயிற்றுக்குச் சோறு போடுமா என்றெல்லாம் தெரியாது. இருந்தாலும் மகன் ஆசைப்படுகிறான். கிளாராவால் மறுக்க முடியவில்லை. வழியனுப்பினார். வியன்னா, ஆஸ்திரியாவின் தலைநகரம். ஹிட்லர் தன் வாழ்நாளில் அத்தனைப் பெரிய நகரத்தைக் காண்பது அதுவே முதல்முறை. அதன் அழகில், கலை வடிவில் மயங்கினார். அங்கிருந்து ஆகஸ்டுக்குக் கடிதம் எழுதினார். கடிதம் ஆகஸ்டை வந்தடைந்த ஒரு சில நாள்களிலேயே ஹிட்லரும் லின்ஸுக்குத் திரும்பி வந்தார். காரணம்? காசு காலி. வேறென்ன செய்ய! ஹிட்லரை, கிளாரா துளிகூடக் கடிந்து கொள்ளவில்லை. தன் மகன் எப்படியாவது பிழைத்துக் கொள்வான் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.
1907, அக்டோபர். வியன்னா நுண்கலைக்கழகம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் ஓவியப் படிப்பில் சேர முடியும் என்று சொன்னார்கள். ஹிட்லர் மீண்டும் வியன்னா சென்றார். தேர்வில் பெரும்பாலும் மத சம்பந்தப்பட்ட காட்சிகளையே ஓவியமாக வரையச் சொல்லிக் கேட்டிருந்தார்கள். வேண்டா வெறுப்பாக வரைந்தார். இருந்தாலும் தகுதி பெற்றுவிடுவோம் என்று நம்பினார். நம்பிக்கை வீண்போனது.