கேட்டலும் அறிதலும் –

திரு. ப.திருமலை மூத்தப த்திரிகையாளர்

ணக்கம் ஐயா.

உட்காருங்க. நல்ல வெயில். இந்த நேரத்தில் சிறப்பு வகுப்புக் கொஞ்சம் உங்களுக்குச் சிரமமாக இருக்கலாம்.

ஆமாங்க ஐயா.. வெயில் தாங்கல்ல.. வெயிலினால் என்னென்ன பாதிப்பு வரும்..
கோடை காலம் தொடங்கும் போது வெப்பநிலை அதிகரிப்பதால் உடலில் நீர்ச்சத்து குறைவதும், உடல் சோர்வு அதிகரிப்பதும் பொதுவான பிரச்சனைகள். அதிக வெப்பம் காரணமாக நீரிழப்பு, தலைவலி, உடல் சூடு போன்ற உடல்நலச் சிக்கல்கள் ஏற்படும். முதியவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். இதனால் கோடை காலத்தில் உணவு முறையில் சிறிய மாற்றங்களை நீங்கள் செய்வது அவசியம். குறிப்பாக உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்ட உணவுகளைத் தினசரி உணவில் சேர்ப்பது உடல்நலத்தைப் பாதுகாக்க உதவும்.

என்ன சாப்பிடலாம்?

இந்த வெப்பகாலத்தில் தர்பூசணி, முலாம்பழம், ஆரஞ்சு, பப்பாளி போன்ற பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது. இப்பழங்களில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் நீரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க உதவுகின்றன. குறிப்பாகத் தர்பூசணி உடல் வெப்பத்தைக் குறைத்து உடலைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. மேலும் இப்பழங்களில் உள்ள வைட்டமின்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன. அதுபோலக் கோடை காலத்தில் உடலைக் குளிர்விக்க இயற்கை பானங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இளநீர், மோர், எலுமிச்சை நீர் போன்ற பானங்கள் உடலில் நீர்ச்சத்தைச் சமநிலைப்படுத்த உதவுகின்றன. இளநீரில் உள்ள தாதுக்கள் உடல் சோர்வைக் குறைத்து உடனடி சக்தியை வழங்குகின்றன. மோர் குடிப்பது உடல் சூட்டை குறைத்து ஜீரணத்தைச் சீராக வைத்திருக்க உதவுகிறது.

வெள்ளரி, தக்காளி, பசலைக்கீரை போன்ற காய்கறிகளில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் வெப்பத்தைக் குறைத்து ஜீரணத்தை மேம்படுத்துகின்றன. குறிப்பாக வெள்ளரிக்காயை சாலட் அல்லது சாறாக எடுத்துக் கொள்வது உடலை குளிர்விக்கும். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகமிக முக்கியம். இதன் மூலம் உடலை குளிர்வாக வைத்துக் கொண்டு கோடை வெப்பத்தால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். உலகில் அதிகமானோர் பயன்படுத்தும் பொருள் எதுன்னு தெரியுமா.?

மொபைல் அல்லது பிளாஸ்டிக் பொருள் இதில் ஏதாவது ஒன்றுதான் நாம் அதிகம் பயன்படுத்தும் பொருளாக இருக்கும் ஐயா?

தொழில்நுட்ப முன்னேற்றத்தில், புதிய பொருட்கள் நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிடுகின்றன. இப்போது, நமது கையில் மொபைல் இல்லையென்றால் உலகமே நின்றுவிடும் என எண்ணும் அளவுக்கு நாம் அதற்கு அடிமையாகிவிட்டோம். காலை எழுந்ததிலிருந்து இரவு படுக்கைக்குச் செல்லும் வரை நாம் அனைவரும் பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துகிறோம். என்றாலும் உலகெங்கிலும் உள்ள எட்டு பில்லியன் மக்களால் அதிகமாகப் பயன்படுத்தப்படும் பொருள் என்ன தெரியுமா? அது தண்ணீர். அது வெறும் பொருளல்ல, இந்தப் பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் உயிர்நாடியாகும். காற்றிற்குப் பிறகு, அது உயிர்கள் உயிர்வாழ்வதற்கு மிகவும் அவசியம். குடிப்பதற்கும், சமைப்பதற்கும், சுகாதாரத்திற்கும் மட்டுமல்லாமல் விவசாயத்திலும் தண்ணீரை நாம் பயன்படுத்துகிறோம். எனவே மனிதர்கள் அதிகம் பயன்படுத்தும் பொருள் தண்ணீர் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடல்நீர் ஏன் உப்பாக இருக்கிறது ஐயா?

மழை பெய்யும்போது, அது நிலத்திலுள்ள கற்கள் மற்றும் மண்ணில் இருக்கும் உப்புத்தன்மை கொண்ட கனிமங்களைக் கரைத்துக் கொண்டு நதிகளில் கலக்கிறது. இந்த நதிகள் இறுதியில் கடலில் சேர்கின்றன. நதிகள் கொண்டு வரும் உப்புகள் (சோடியம், குளோரைடு போன்றவை) கடலில் சேர்ந்து அங்கே தேங்கிக்கொண்டே இருக்கும். சூரியன் வெப்பத்தால் கடல் நீர் ஆவியாகும் போது, உப்பு மேலே செல்லாது. அதனால் மீதமுள்ள நீர் அதிகமாக உப்பாகிறது. கடலடியில் உள்ள பாறைகள் மற்றும் எரிமலைச் செயல்களும் சில உப்புகளை நீரில் சேர்க்கின்றன. சராசரியாக, கடல் நீரில் 3.5 சதவிகிதம் உப்புத்தன்மை உள்ளது. அதாவது ஒரு கிலோகிராம் கடல் நீரில் சுமார் 35 கிராம் உப்பு கரைந்துள்ளது.

மழைத் தண்ணீர் நதி வழியாக ஓடினாலும் நதிநீர் உப்பாக இல்லையே?

நதி நீர் தொடர்ந்து ஓடிக்கொண்டே கடலில் சேர்கிறது. நதி நீண்ட நேரம் தண்ணீரைத் தேக்கி வைப்பதில்லை, எனவே உப்பு அங்குத் தேங்குவதில்லை. நதிகளில் தொடர்ந்து புதிய மழைநீர் சேர்வதால், உப்புத்தன்மை குறைந்து கொண்டே இருக்கும்.
சரிங்க ஐயா. தண்ணீர் இயற்கையாகக் கிடைக்கிறது. ஆனால், நாம் உருவாக்கும் பொருட்களில்

எதனை அதிகம் பயன்படுத்துகிறோம்?

நம் கைகளில் இருக்கும் அலைபேசி, பிளாஸ்டிக் பொருள்கள், அதிகமாகப் பயன்படுத்துவதாக நினைக்கிறாயா? ஆனால் உண்மை அதுவல்ல. மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்களில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் கான்கிரீட் என்கிறார்கள் நிபுணர்கள். இது மிகவும் பொதுவானதாகத் தோன்றினாலும், நம்மைச் சுற்றியுள்ள வீடுகள், அலுவலகங்கள் உட்பட வானளாவியக் கட்டடங்கள், பெரிய பாலங்கள், சாலைகள், மெட்ரோ ரயில் திட்டங்கள் மற்றும் அணைகள் போன்றவை அனைத்தும் கான்கிரீட்டால் உருவாக்கப்படுபவை.

நகர வளர்ச்சியில் இது தவிர்க்கமுடியாத முக்கியப் பொருளாகும். புள்ளிவிவரங்களின்படி, உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் மூன்று பில்லியன் டன் கான்கிரீட் பயன்படுத்தப்படுகிறது. இரும்பு, மரம் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றின் உபயோகத்தை விட, கான்கிரீட் பயன்பாடு பல மடங்கு அதிகம். நகரமயமாதலின் வேகம் காரணமாக, இந்தப் பொருளின் பயன்பாடு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.