கலாமைக் கொண்டாடுவோம் 13
– இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

பத்மஸ்ரீ விஞ்ஞானி ய.சு.ராஜன் -இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல்

டாக்டர் ஒய்.எஸ்.ராஜன், விக்ரம் சாராபாயால் தெரிவு செய்யப்பட்டு, அஹமதாபாத், இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் ஆராய்ச்சியாளராக பணியைத் துவங்கி, பின்னாளில் இஸ்ரோ நிறுவனத்தின் அறிவியல் செயலாளராகப் பங்களித்தவர்.

இந்திய அமைச்சரவையின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் செயலராகப் பணியாற்றியவர். பஞ்சாப் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும், பஞ்சாப் முதல்வரின் அறிவியல் ஆலோசகராகவும் சேவையாற்றியவர். இந்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின், டைஃபாக் (TIFAC) நிறுவனத்தின் செயல் இயக்குனராகப் பங்களித்தவர்.
திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட டாக்டர்.ராஜன், மும்பையில் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பைப் பயின்றார். அப்துல் கலாமுடன் ஏறக்குறைய 50 ஆண்டுகள் தொடர் நட்பில் இருந்தவர். கலாமுடன் இணைந்து ‘இந்தியா 2020’, ‘இந்தியா 2020க்கு அப்பால்’ உள்ளிட்ட நூல்களை எழுதியவர். 2012 – ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்மp விருதைப் பெற்றவர்.

பல ஆண்டுகளாக டாக்டர்.ராஜன் அவர்களுடன் பழகும் வாய்ப்பை நான் பெற்றவன். அவருடைய நறுக்குத் தெறித்த கருத்துகள், துல்லியமான நினைவுகள் என்னை ஆச்சரியப் படுத்தியிருக்கின்றன. தொலைபேசி உரையாடல்களில் அவருடைய கவிதை வரிகளைக் கூறி எழுத நேர்ந்த அதன் சுவாரசிய வரலாற்றை விவரிப்பார். இவரும், கலாமின் அண்ணன் மகள் டாக்டர்.நசீமா மரைக்காயரும் இணைந்து எழுதிய ‘அப்துல் கலாம்: நினைவுகளுக்கு மரணமில்லை’ என்ற 724 பக்க நூலை வாசித்துச் சிலிர்த்துப் போனேன். நீங்களும் வாசியுங்கள்.
ஒரு மாலையில் அப்துல் கலாம் அவர்களைப் பற்றி இணைய வழியில் உரையாடினோம். அதில் இருந்து…

கலாம் அவர்களுடனான 50 ஆண்டுகால நட்பு எப்படி துவங்கியது?

நான் இஸ்ரோவின் தாய் அமைப்பான இன்கோஸ்பர் நிறுவனத்தின் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் அஹமதாபாத்தில் பணியிலிருந்தேன். அப்துல் கலாம் அதே நிறுவனத்தில் திருவனந்தபுரத்தில் பணியாற்றி வந்தார். அவர் அஹமதாபாத் வரும் போது சந்தித்திருக்கிறேன். அப்படித் தான் துவங்கியது எங்கள் நட்பு. தானுண்டு தன் வேலையுண்டு என்றில்லாமல் பிற பிரிவுகளில் நடக்கும் ஆராய்ச்சிகளையும் என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார் கலாம். நானும் அவரும் அவருடைய அஹமதாபாத் பயணங்களில் சந்தித்துப் பேசிக்கொள்வோம்.
எனக்கும் அவருக்குமான நட்பைக் கவிதையாக, மார்ச் 1990 – ல் நெஞ்சக மலர்கள் தொகுப்பில் இப்படி எழுதினேன்.

நண்பன் மட்டுமோ? விண்வெளித் தொழிலில் பண்புடன் பணி செய்யும் பந்தமும் தானோ?

தீந்தமிழ்க் காதலால் சிறந்ததோர் உறவோ?

சாந்தியும் திண்மையும் அவனுடன் பிணைந்து திவ்ய மனிதனாய் திகழ்வதனாலோ?

மீன் கொடி தந்ததோர் பண்டைய உறவோ?

நீங்கள் ஒரு கவிஞரும் கூட. கலாம் வாழ்வின் பல படிகளில் நீங்கள் உங்கள் கவிதை வரிகளால் அவரை படம் பிடித்தீர்கள். அதைப் பற்றி…

ஆம். நூறு கவிதைகளுக்கு மேல் எழுதியிருக்கிறேன். எஸ்.எல்.வி – 3 வெற்றிக்குப் பிறகு கலாமைப் பற்றி ஒரு கவிதை எழுதினேன். இது தான் கலாமைப் பற்றி எழுதப்பட்ட முதல் கவிதை. இதோ..

முகத்திலே முறுவல் கொண்டு
முயற்சியை மதமாய் மாற்றி
அகத்திலே உறுதி நாட்டி
அறிவினை துணையாய்ப் பெற்றால்
சகத்தினை சாடும் சக்தி
பெருக்கலாம் என்று காட்டி
புகழுடன் பாரதத்தை
விண்வெளி ஏற்றி விட்டான்.
கலாமின் அப்பாவைப் பற்றியும் கவிதை எழுதியுள்ளேன்.

இராமேஸ்வரத்தின் மசூதித் தெருவில்
சராசரி மனிதனின் சூழலில் வாழ்ந்தும்
அல்லாஹ் அருளினால் தூயதும்
உயர்ந்ததோர் இல்லறம் செய்து
நல்வாழ்வெனும் ஞானம்
உள்ள ஊற்றிலே பொங்கிடும் மேலோன்
ஜைனுலாபுதீன் கலாமின் தந்தை
பிள்ளையோ வள்ளுவன் சொல்படி வாழ்பவன்
தந்தையின் தவப்பலம் வியந்திடச் செய்தவன்

தன்னைப்பற்றி எழுதப்பட்ட கவிதையை எளிதில் கடந்து விட்ட கலாம், தன் தந்தையைப் பற்றிய கவிதையைப் படித்து நெகிழ்ந்து என்னைப் பாராட்டினார்.