கலாமைக் கொண்டாடுவோம்
இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

விஞ்ஞானி & கல்வியாளர் இரா.மா.வாசகம் –
இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல்

டாக்டர் ஆர்.எம்.வாசகம் என்றழைக்கப்படும் இராமசாமி மாணிக்கவாசகம் மூத்த விண்வெளி விஞ்ஞானி. கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் இளம்பொறியியல் பட்டம் பெற்ற இவர், சென்னை ஐ.ஐ.டியில் முது நிலைப் பட்டம் பெற்றவர்.

திருவனந்தபுரத்திலுள்ள இந்திராபவன் விடுதியில் தான் ஏறக்குறைய 15 – ஆண்டுகள் அப்துல் கலாம் தங்கியிருந்தார். அவருக்கு பக்கத்து அறையில் வசித்தவர் ஆர்.எம்.வாசகம்.
இந்தியாவின் முதல் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஆப்பிள் (Ariane Passenger PayLoad Experiment – APPLE). இதன் திட்ட இயக்குனர் ஆர்.எம்.வாசகம். இதற்காக பத்ம விருது பெற்றவர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் (1996-99) பணியாற்றியவர். இவரைப் பற்றிய பத்திரிக்கைச் செய்திகளை நான் கல்லூரி மாணவனாகப் படித்திருக்கிறேன். பின்னாளில் ராணுவ விஞ்ஞானியான பிறகு அவருடன் பழகும் வாய்ப்பைப் பெற்றேன்.

அவருடைய அசாத்திய நினைவாற்றல் என்னை வியக்க வைத்தது. வார இறுதி நாட்களில் நிகழும் அவருடனான நீண்ட தொலைபேசி உரையாடல்கள் எனது சிந்தனையை செழுமைப்படுத்தி வாழ்வை மேம்படுத்தின.

ஒரு மாலையில் இணைய வழியில் அப்துல் கலாம் அவர்களின் நினைவுகளை அசைபோட்டோம். அந்த உரையாடலில் இருந்து…

அப்துல் கலாம் அவர்களுடனான முதல் சந்திப்பு எப்படி நிகழ்ந்தது?

1965-ல் சென்னை ஐ.ஐ.டி யில் எம்.டெக் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்த போது, திருவனந்தபுரத்தை அடுத்த தும்பாவிலுள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்ற நேர்முகத்தேர்வு வாய்ப்பு கிடைத்தது. படிப்புக்கு பின் அட்லாண்டிக் கடலைத் தாண்டிச் சென்று அயல் நாட்டில் பணியாற்றும் முனைப்பில் இருந்தேன்.

1969 – ல் இந்திய செயற்கைக்கோள், இந்திய ஏவூர்தியில் இந்திய ஏவுதளத்திலிருந்து ஏவப்பட வேண்டும். அதற்கு நீங்கள் உழைக்க வேண்டும் என்ற கனவை விக்ரம் சாராபாய், நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்களிடம் விதைத்தார். நான் என் அட்லாண்டிக் தாண்டிச் செல்லும் யோசனையை கைவிட்டு, இந்திய விண்வெளி ஆய்வில் இணைந்தேன். இந்த ஆய்வகத்தில் அப்துல் கலாம் பணியிலிருந்தார்.

திருவனந்தபுரத்தில் தங்குவதற்கான இடம் தேடினேன். கேரளா தலைமைச் செயலகத்துக்கு அருகிலிருந்த ‘இந்திரா பவன்’ விடுதியில் தங்கினேன். வேறொரு இடத்தில் தங்கியிருந்த கலாம் பின்னர் இந்த விடுதிக்கு இடம் பெயர்ந்தார்.

நாங்கள் இருவரும், திருவனந்தபுரம் ஓட்டல், பாளையம் பகுதியில் இருந்த இந்தியன் காபி ஹவுஸ், திருவனந்தபுரம் ரயில் நிலைய உணவகம் என சில குறிப்பிட்ட உணவகங்களில் சாப்பிடுவோம். நான் தமிழ் நாளிதழ்கள் வாங்குவேன். அவற்றை அவர் வாசிப்பார். அவரது அறையிலிருக்கும் தமிழ் இதழ்களை நான் வாசிப்பேன். இப்படித் தொடர்ந்தது எங்கள் ‘இந்திரா பவன்’

வாழ்க்கை.

தும்பாவிலுள்ள மேரி மகதலேனா தேவாலயத்தில் தான் ஆரம்பகட்ட விண்வெளி ஆராய்ச்சிப் பணிகள் நிகழ்ந்தன. அங்கே அப்துல் கலாமுடன் பணியாற்றிய அனுபவம் பற்றி?

தேவாலயத்தில் பல புறாக்கள் தங்கியிருந்தன. எங்கள் வரைபடங்களை அவைகளிடமிருந்து பாதுகாக்க, பணி முடிந்தவுடன் செய்தித்தாள்களைக் கொண்டு முடிவிட்டு வீடு திரும்புவோம். பல நேரங்களில் காற்றுத்துப்பாக்கி (Air Gun) பயன்படுத்தி புறாக்களைத் துரத்துவோம்.

நாங்கள் மொத்தம் 17 பேர் தான் அப்போது விண்வெளி ஆராய்ச்சியில் இருந்தோம். ராக்கெட் ஏவும் போது அதன் துடுப்புத்தகடு (Fin) உடைந்து எங்கள் ஆய்வகத்திலும், அருகிலிருந்த அரசு பொறியியல் கல்லூரி வளாகத்திலும் ராக்கெட் விழுந்த நிகழ்வுகள் உண்டு.

காற்றின் போக்கை அறிய, ராக்கெட் மூலம் தாமிரத் துண்டுகளை (Copper wires) 15 கி.மீ உயரத்திலிருந்து தூவி, அதை ரடார் மூலம் கண்காணிப்போம். தாமிரத்துண்டுகளை விழுங்கியதால் மீன்கள் இறந்துவிடுகின்றன என மீனவர்கள் நஷ்ட ஈடு கேட்டதும், ராக்கெட் பாகங்கள் கடலில் விழுவதால் மீன் வலை கிழிந்து விட்டது என இழப்பீடு கேட்டதும் உண்டு. சாராபாய் இதற்கெல்லாம் உதவி செய்வார்.

ராக்கெட்களை ஏவும் போது அவற்றின் துடுப்புத் தகடுகளை குறிப்பிட்ட கோணத்தில் பொருத்த வேண்டும். கலாம் இதில் சிறப்பு பெற்றிருந்தார்.

ராக்கெட் சோதனையில், திட எரிபொருளை நாங்கள் கையாண்டோம். பாதுகாப்புடன் செயல் பட வேண்டியது மிக அவசியம். விண்வெளிப் பணியில் இருந்தவர்களுக்கு அந்தக் காலகட்டத்தில் ஆயுள் காப்பீடு கிடைக்காது.

ஆண்டுக்கு ஏறக்குறைய 2500 ராக்கெட் சோதனைகளை செய்வோம். முக்கால்வாசிச் சோதனைகள் தோல்வியில் தான் முடியும். இப்படிப் படிப்பினைகளைப் பெற்று நிகழ்ந்து வந்தது எங்கள் துவக்க கால விண்வெளி ஆராய்ச்சி.