
என் பார்வையில் பிரிட்டன் – 02
பேரா. வெ.இன்சுவை
இந்தக் காலத்தில் வெளிநாட்டுக்குப் போவதெல்லாம் சர்வசாதாரணமாக இருக்கும்போது என் அலட்டல் ரொம்பவே அதிகம் என உங்களுக்குத் தோன்றலாம். ஏன் இவ்வாறு பதட்டப்படுகிறேன் என்று சொன்னால்தானே உங்களுக்குப் புரியும்.
அது 2020 – ஆம் ஆண்டு நானும், என் கணவரும் முதல்முறையாக பிரிட்டனுக்குச் ெசான்றோம். 15 நாள்கள் மட்டுமே தங்குவதாகத் திட்டம். மகன் மட்டும் அங்கே தனியாக இருந்தார். இரண்டு வாரங்கள் மட்டும் அவருடன் இருந்துவிட்டு வரலாம் என்று கிளம்பினோம். நாங்கள் சென்ற அந்த வாரத்திலேயே உலகம் முழுக்க கொரோனா தொற்றுப் பரவ ஆரம்பித்துவிட்டது. ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. விமான சேவை நிறுத்தப்பட்டது. உலகம் தன் இயக்கத்தை நிறுத்தியது. நாங்கள் 15 நாட்களுக்கான மாத்திரைகளை மட்டுமே எடுத்துப் போய் இருந்தோம். எதிர்பாராமல் அங்கு தங்க நேரிடவே மாத்திரை கிடைக்காமல் அல்லாடினோம். முக்கியமாக டயாபடீஸ், உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றிற்கு மாத்திரைகள் தேவைப்பட்டன. நம் ஊர் போல வாங்க முடியாதே.
என் உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியரின் மகன் இலண்டனில் மருத்துவராகப் பணி செய்வதை அறிவேன். அவருடைய அண்ணன் திரு. சந்திரசேகர் என் வகுப்புத் தோழன். எனவே அவர் மூலம் டாக்டர் சுரேஷிடம் என் பிரச்சினையைச் சொல்லி உதவி கேட்டோம். அவர் உதவியால் மாத்திரைகள் கிடைத்தன. இது கூடப் பரவாயில்லை.
அன்று ஏப்ரல் 19 – ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, மதியம். சமையல் முடித்து தட்டு வைத்தாயிற்று. மகனையும், கணவரையும் சாப்பிட அழைத்தேன். மகன் மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்தார். அறையின் குறுக்கே வயர் இருந்ததைக் கவனிக்காத நான், அதில் தடுக்கி விழுந்துவிட்டேன். இத்தனைக்கும் கார்ப்பெட் போடப்பட்டிருந்தது. விழுந்தவுடன் தூக்கிவிட்டார்கள். ஆனால் என்னால் ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. பயந்துபோய் வலி நிவாரண மாத்திரைகள் தந்தார்கள். சரியாகவில்லை. வலி அதிகமாகியது.
நான் சொன்னேன், ‘‘எனக்கு இடுப்பு எலும்பு முறிந்துபோய்விட்டது’’ என்று. மகனோ, ‘‘அதற்கெல்லாம் வாய்ப்பில்லை அம்மா, சுளுக்கி இருக்கும்’’ என்றார். நான் உறுதியாக ‘‘இடுப்பு எலும்பு முறிவுதான்’’ என்று கூறினேன்.
எப்படி அத்தனை உறுதியாகக் கூறினேன் என்றால், ஏற்கெனவே எனக்கு இடது இடுப்பு முறிந்து, இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குமுன் (2010) ஒரு சிறிய கல் தடுக்கிக் கீழே விழுந்ததில் முறிந்துபோனது. சாதாரண சுளுக்கு என்று நினைத்து, வீட்டின் அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சென்றோம். 20 நாட்கள் அந்த மருத்துவர் சிகிச்சை அளித்தார். ஒரு முன்னேற்றமும் இல்லை. அதன் பின்னர் நகரின் பெரிய மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கே எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்தார்கள். ஸ்கேனைப் பார்த்த டாக்டர் என் தலையில் இடியை இறக்கினார். ‘‘இடுப்பு எலும்பு முறிந்துவிட்டது. இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்’’ என்றார்.
அறுவை சிகிச்சை நடந்தது. மிகவும் வலி மிகுந்த நாட்கள் அவை. 42 நாட்கள் காலை அசைக்காமல், படுக்கையில் நேராகப் படுத்திருக்க வேண்டும். மிகப்பெரிய நரகம் அது. அந்த வேதனையை அனுபவித்து இருந்ததால், இப்போதும் வலது பக்கம் எலும்பு முறிந்துவிட்டது என்று எனக்குத் தெரிந்தது. அங்கும் முழு ஊரடங்கு இருந்ததால், எல்லா மருத்துவமனைகளும் மூடப்பட்டு இருந்தன. கணவரும் மகனும் தவித்துப் போனார்கள். மகன் அரும்பாடுபட்டு, எமர்ெஜன்ஸி என்று புரிய வைத்து, ஓர் அவசர ஊர்தியை வரவழைத்தார். அவசர ஊர்தி உடன் இரண்டு பேர் வந்தார்கள். காலை அசைக்க முடியவில்லை என்பதைப் பார்த்துவிட்டு உடனே மருத்துவமனைக்கு அழைத்துப் போனார்கள்.
சவுத் ஆம்டனில் உள்ள ராயல் சவுத் ஹேன்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துப் போனார்கள். அங்கு ஸ்கேன், எக்ஸ்ரே எல்லாம் எடுத்தார்கள். நான் நினைத்ததையே சொன்னார்கள். பேரிடி. உடனே அட்மிஷன் போட்டார்கள். யாருக்கும் உடன் வர அனுமதி இல்லை. கையில் எதையும் நான் எடுத்துப்போகவில்லை. கைப்பேசியும், கைக்குட்டையும் மட்டுமே என்னுடன் இருந்தவை. சட்டெனக் கிளம்பியதால் காலையில் காபிகூட குடிக்கவில்லை. உடனே பல்வேறு பரிசோதனைகள், இரத்த மாதிரிகள் என சிகிச்சையைத் தொடங்கிவிட்டார்கள். மாலை மணி ஐந்து ஆயிற்று. காலையில் இருந்து நான் தண்ணீர்கூட அருந்தவில்லை. பதற்றம், பயம், பசி, தனிமை… எல்லாம் சேர்ந்து கொண்டதால், நான் சோர்ந்து போனேன். டயபடீஸ் இருப்பதால் பசித்தது. நானே செவிலியரை அழைத்து, ‘பசிக்கிறது’ என்று கூறினேன். 10 நிமிடங்கள் ஆனது. தட்டில் உணவு வந்தது (நான் சுத்த சைவம் என்பதையும் சொல்லிவிட்டேன்).