
வரலாறு பேசுவோம்-01
திரு.முகில்
வரலாற்றைவிட சுவாரசியமானது எதுவொன்றும் கிடையாது. சரித்திரத்தின் பக்கங்கள் வழியாக கடந்த ‘காலப்பயணம்’ செய்வதே இந்தப் புதிய தொடரின் நோக்கம்.
அது ஒரு சந்தைப் பகுதி. மக்களும் வியாபாரிகளும் அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தார்கள். பேரம் பேசும் சத்தமும், பொருள்களைக் கூவி விற்கும் குரல்களும் காற்றை நிறைத்திருந்தன. ஒருவன் மட்டும் கூட்டத்துக்குள் பதுங்கிப் பதுங்கி மறைந்து சென்று கொண்டிருந்தான். அவனது முகத்தில் அச்சம் படர்ந்திருந்தது. எப்படியாவது அந்த இடத்தில் இருந்து ஓடிவிட வேண்டுமென்ற பதட்டம் நிறைந்திருந்தது. பின்பக்கமாக இருந்து வந்த கை ஒன்று, அவனது உடையைக் கொத்தாக இழுத்து, பலமாகப் பிடித்தது.
பிடித்தவன், கடன் கொடுத்தவன். பிடிபட்டவன், கடன் வாங்கியவன். கடனாளியை இழுத்து வெளியில் போட்டான் கடன் கொடுத்தவன். அவனைச் சுற்றித் தரையில் ஒரு வட்டம் வரைந்தான். கடனாளி, அதற்குள் தலையைக் குனிந்தபடி கிடந்தான். ஊரே கூடி நின்று வேடிக்கை பார்த்தது. அவமான உணர்வு. அவன் கண்கள் கசிந்தன. விதிக்குக் கட்டுப்பட்டு அவன் அங்கே இருந்து நகரக்கூடாது. ஒன்று, அப்போதே வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். அல்லது யாராவது வந்து போதிய பிணைத்தொகை அளித்து, கடனாளியை மீட்டுப் போக வேண்டும். அதுவரை நாள் கணக்கானாலும் சரி, வட்டத்தை விட்டு அவன் வெளியே வரக்கூடாது. ஏமாற்றிவிட்டுத் தப்பி ஓடும் கடனாளி சிக்கினால், சட்டத்தின்படி மரண தண்டனைகூட விதிக்கப்படலாம்.
இதுதான் பதின்மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் மண்ணில் கொடுத்த கடனைத் திருப்பி வசூலிப்பதற்கான வழக்கமாக இருந்தது என்று பதிவு செய்து வைத்துள்ளார் மார்க்கோ போலோ. இத்தாலியில் படகுகளின் நகரமான வெனிஸில் பிறந்தவர் (கி.பி.1254). சீனாவை ஆண்ட, மங்கோலியப் பேரரசர் குபிலாய் கானைச் சந்திக்க 1271-ஆம் ஆண்டில் மார்க்கோ போலோ, தனது தந்தையுடன் வெனிஸிலிருந்து கிளம்பினார். சுமார் 26 – ஆண்டுகள் கழித்தே, நிறையப் பயண அனுபவங்களைச் சேகரித்துக் கொண்டு வெனிஸுக்குத் திரும்பினார். அவர் பெரும்பாலான காலத்தை சீனாவில் கழித்தாலும், தெற்காசியாவின் பல பகுதிகளில் வலம் வந்தார். கி.பி. 1293 – சமயத்தில் தமிழ் மண்ணுக்கு வந்தார்.
அந்தக் காலத்தில் அரேபியர்கள் அன்றைய தமிழ் மண்ணுக்குச் சூட்டியிருந்த பெயர் – மாபர் (Maabar). சிலோன் வழியாக தமிழ்நாட்டுக்கு வந்த மார்க்கோ போலோவும், இதை மாபர் என்றே குறிப்பிடுகிறார். ‘அது ஒரு தீவு அல்ல. இந்தியா என்ற பெரிய கண்டத்தின் ஒரு பகுதி. உலகிலேயே புனிதமான, வளமான பிரதேசம் இதுதான்’ என்று வியக்கும் மார்க்கோ போலோ, இந்தப் பகுதி நான்கு மன்னர்களால் பிரித்து ஆளப்படுகிறது. அவர்களில் முக்கிய மன்னர் Sender Bandt என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த வார்த்தையைத் தமிழ்ப்படுத்தி யோசித்தால் ‘சுந்தர பாண்டி’ என்று புரிந்துகொள்ளலாம். கி.பி. 1268 முதல் 1311 வரை தமிழகத்தை ஆண்ட பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன். அவருக்குத் துணையாக கருவூரினைத் தலைநகராகக் கொண்டு கொங்கு நாட்டை ஆட்சி செய்தவர் இரண்டாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி. 1276 முதல் 1293 வரை). மார்க்கோ போலோ, இந்தச் சுந்தர பாண்டியனைக் குறிப்பிட்டிருக்கலாம்.
பாண்டியர்களின் ராஜ்ஜியத்தில்தான் கடனாளி வட்டத்துக்குள் சிக்கிக் கொண்ட காட்சியைக் கண்டு விவரித்திருக்கிறார் மார்க்கோ போலோ. இன்னொரு சமயம், ஓர் ஊரில் சிற்றரசர் ஒருவர் குதிரையோடு வட்டத்துக்குள் கடனாளியாகச் சிக்கியிருப்பதை மார்க்கோ போலோ நேரில் கண்டார். அவர், அயல்நாட்டுப் பெரு வியாபாரி ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தார். மக்கள் சுற்றி நின்று பரிதாபத்துடன் பார்த்தாலும் அந்தச் சிற்றரசர் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு, நேர்மையாக வட்டத்துக்குள்ளேயே குதிரைமேல் அமர்ந்திருந்தார். கொஞ்ச நேரத்தில் பிறர் அவருக்காக உரிய உத்தரவாதங்கள் அளித்த பிறகே, அங்கிருந்து குதிரையுடன் கிளம்பினார்.
முத்துக்குளித்தல்
தென்தமிழகத்தின் கடல் பகுதிகளில் நடந்த முத்துக் குளிக்கும் தொழில் குறித்து மார்க்கோ போலோ விவரமாக எழுதி வைத்துள்ளார். அதிகபட்சம் 72 அடி, குறைந்தபட்சம் 12 அடி ஆழமுள்ள கடல் பகுதிகளில் முத்துகளை எடுக்கிறார்கள். வியாபாரிகள், மூழ்கி முத்தெடுப்பதில் தேர்ந்த ஆள்களைப் பணிக்கு அமர்த்தி, தங்களுக்கான படகுகளில் கடலுக்குச் செல்கிறார்கள். உள்ளே குதிக்கும் ஆள்கள், தம்மால் முடிந்த வரை மூச்சடக்கி, கையில் கொண்டு செல்லும் வலைபோன்ற பை நிறைய சிப்பிகளை எடுத்துக் கொண்டு வருகிறார்கள். கடலில் நாள்கணக்கில் தங்கி முத்துக் குளிக்கிறார்கள்.
ஒளிரும், பெரிய உருண்டையான முத்துகள் இங்கே கிடைக்கின்றன. ஆனால், கடலில் திரியும் ஒருவித பெரிய மீன்கள் ஆபத்தானவை. மனிதர்களைத் தாக்குபவை. இந்த மீன்களைச் சமாளிப்பதற்காகவே வியாபாரிகள், தம்மோடு (பிராமண) மாந்திரீகர்களை அழைத்து வருகிறார்கள். படகுகளில் இருந்தபடியே மந்திரங்களை உச்சரிக்கும் மாந்திரீகர்கள், ஏதோ மாயவித்தை செய்து அந்த மீன்களை செயலிழக்கச் செய்து விடுகிறார்கள். முத்துக்குளித்து முடித்தவுடன், மாந்திரீகர்கள் மீன்களைப் பழைய நிலைக்கு மாற்றி விடுகிறார்கள்.
முத்துக்குளித்தல் என்பது மன்னரின் கட்டுப்பாட்டில் நடந்த தொழில். எந்தெந்தப் பகுதிகளில் எப்போது தொழில் நடத்த வேண்டும் என்று அவர்தான் அனுமதி கொடுக்க வேண்டும்.
வியாபாரிகள் ஒவ்வொருவரும் தமக்குக் கிடைக்கும் முத்தில் பத்தில் ஒரு பங்கை, மன்னருக்குச் செலுத்த வேண்டும். இருபதில் ஒரு பங்கு மாந்திரீகர்களுக்கு. மற்றவை எல்லாம் வியாபாரிகளுக்கே. முத்துக்குளிக்கும் தொழிலாளர்களுக்கு வெறும் கூலி மட்டும்தான். ஆம், அன்றிலிருந்தே கார்ப்பரேட் களவாணித்தனம் கோலோச்சி இருந்திருக்கிறது.
ஏராளமான முத்துகளைத் தம் உடலில் அணிந்திருந்த பாண்டிய மன்னரின் தோற்றம் குறித்து மார்க்கோ போலோ நுணுக்கமாக வருணித்திருக்கிறார். ‘இங்குள்ள மக்கள், உடலில் மறைக்க வேண்டிய பகுதிகளை மட்டுமே மறைத்திருக்கின்றனர். மன்னரும் அப்படியே. கூடுதல் ஆடையெல்லாம் அணியவில்லை. ஆனால் மன்னரது ஆடை அதிக விலைமதிப்புடையது.
உடலெங்கும் ஏகப்பட்ட அணிகலன்களை அணிந்திருக்கிறார். கழுத்தில் சரம் சரமாக நகைகள், கைகளில் காப்புகள், கால்களில் தண்டைகள், கைவிரல்களில் பலவித வளையங்கள். எல்லாமே அரியவகை மரகத, மாணிக்க, நீலக் கற்களாலும் முத்துகளாலும் ஆனவை. தான் ஆளும் நாடு இத்தனை வளம் மிக்கது, இங்கே இவையெல்லாம் கிடைக்கின்றன என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தும்விதமாக மன்னர் தன்னைப் பெருமையோடு காட்சிப் பொருளாக்குகிறார்.’
தண்டனைகள்
பிறிதொரு சமயத்தில் அழகாக வடிவமைக்கப்பட்ட தேர் ஒன்றை மக்கள் ஆரவாரமாக இழுத்து வருவதை மார்க்கோ போலோ கண்டார். அந்தத் தேர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதில் நடுநாயகமாக ஒருவன் கம்பீரமாக அமர்ந்திருந்தான். பார்த்தால் அரசன் போலவோ, முக்கிய அமைச்சர் போலவோ, வசதிமிகுந்த செல்வந்தன் போலவோ தெரியவில்லை.
சாதாரணமான ஆள்தான். அவன் கையில் கத்திகளை ஏந்தியிருந்தான். அப்போது கூடியிருந்த மக்கள் உற்சாகமாக கோஷங்களையும் எழுப்பினர். அது என்ன கோஷம் என்று மார்க்கோ போலோ கேட்டறிந்தார். அவர்கள் சொன்ன விளக்கத்தைக் கேட்டு அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது.
‘தேரில் இருப்பவனை பலிகொடுப்பதற்காகக் கொண்டு செல்கிறார்கள். அவன், தன்னைத் தானே பலி கொடுக்கத் துணிந்த மாவீரன்!’
அந்தத் தேரை வீதி வீதியாக இழுத்துச் சென்றார்கள். அதைப் பின்தொடர்ந்து சென்ற மார்க்கோ போலோ, என்ன விஷயம் என்ற விவரங்களையும் கேட்டறிந்தார். அவன் ஒரு குற்றவாளி. அவனுக்கு மரண தண்டனை விதித்திருக்கிறார்கள். இங்கே மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், இஷ்ட தெய்வத்துக்குத் தம்மைப் பலி கொடுக்குமாறு விண்ணப்பம் வைக்கலாம். அதற்கான அனுமதி கிடைத்தால், குற்றவாளியின் சொந்த பந்தங்கள் அவனை இதுபோலத் தேரில் வைத்து நகரம் முழுவதும் ஊர்வலம் கொண்டு செல்வார்கள். தெய்வத்துக்காக, தன்னைத் தானே பலி கொடுக்க முன்வந்த அவனை வாழ்த்தி கோஷமிடுவார்கள். அவன் கையில் பன்னிரண்டு கூரிய கத்திகள் வழங்கப்பட்டிருக்கும். தேர், பலி பீடத்துக்குச் சென்றதும் குற்றவாளியே முதலில் இரு கத்திகளால் தன் தொடைகள் இரண்டில் குத்திக் கொள்வான்.
வலிமிகுதியில் தெய்வத்தின் பெயரைச் சொல்லி அலறுவான். பின் உடலில் பிற பாகங்களில் மற்ற கத்திகளை இறக்க ஆரம்பிப்பான். பேரலறலோடு பன்னிரண்டாவது கத்தியை இதயத்தில் இறக்கி, இறந்து போவான்.