
கலாமைக் கொண்டாடுவோம்
இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு
டி.ஆர்.டி.ஓ நிறுவனப் பொது இயக்குனராகப் பதவி வகித்த முதல் தமிழ்ப் பெண்விஞ்ஞானி சித்ரா ராஜகோபாலன் –
இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல்
முனைவர் சித்ரா ராஜகோபாலன் வில்லிபுத்தூரைச் சேர்ந்தவர். சென்னை ஐ.ஐ.டி யில் வேதிப்பொறியியல் பட்டம் பெற்ற இவர், முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களைத் தில்லி ஐ.ஐ.டியில் பெற்றவர். ஏறக்குறைய 32 – ஆண்டுகள் டி.ஆர்.டி.ஓ வில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தற்போது உயர் கல்வித்துறையில் மாணவ-மாணவிகளுக்குச் சேவையாற்றி வருகிறார். நூற்றுக்கும் அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இந்தியத் தேசியப் பொறியாளர் அமைப்பு (INAE) , சுதந்திர இந்தியாவின் சிறந்த பெண் பொறியாளர்கள் பட்டியலில் இவரின் பெயரைப் பதிவு செய்துள்ளது. 2026 – ஆம் ஆண்டுக்கான ‘ராபர்ட் சலோஷ் ஹைட்ரஜன் பாதுகாப்பு தனிச்சிறப்பு’ என்ற சர்வதேச விருதைப் பெற்றவர்.
கலாம் அவர்களுடன் இளம் விஞ்ஞானியாகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்ற இவரிடம் ஒரு மாலையில் இணைய வழியில் உரையாடினேன். அதிலிருந்து…
டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தில் விஞ்ஞானியாகச் சேர வேண்டும் என்ற உந்துதல் எப்படி ஏற்பட்டது?
என்னுடைய அப்பா வேதியியல் துறையில் ஆராய்ச்சியில் இருந்தார். எனது குடும்பத்தில் பலர் அறிவியல் துறை சார்ந்தவர்கள். இளம் வயதிலேயே அறிவியல் மீது ஆர்வம் இருந்தது. விஞ்ஞானிகளைப் பற்றிப் படிக்கும் போது அவர்கள் போல ஆக வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. நான் பி.ஹெச்டி படிக்கும் போது அப்போதைய டி.ஆர்.டி.ஓ தலைவர் வி.எஸ் அருணாசலத்தை சந்தித்து ஆலோசனை கேட்கும் வாய்ப்பை என் தந்தை ஏற்படுத்தினார். வி.எஸ்.அருணாசலம், நான் வெப்பக்கடத்தல (Heat Transfer) தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதை அறிந்து, ‘‘டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தில் வாய்ப்புகள் இருக்கின்றன, விஞ்ஞானியாக முயற்சி செய்யுங்கள்’’ என்று என்னை உற்சாகப்படுத்தினார். அதன் விளைவாக விஞ்ஞானியாகப் பணியில் சேர்ந்தேன்.
அப்துல் கலாம் அவர்களுடனான முதல் சந்திப்பு எப்படி நிகழ்ந்தது?
‘தீ,வெடிபொருள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் (Center for Fire, Explosive and Environment Safety – CFEES) என்ற டி.ஆர்.டி.ஓ ஆய்வகம் புதுதில்லியிலுள்ளது. நான் அங்கு இளநிலை விஞ்ஞானியாகப் பணியாற்றி வந்தேன். அப்துல் கலாம் டி.ஆர்.டி.ஓ நிறுவனத் தலைவராகப் பதவியேற்ற பிறகு ஆய்வகத்தைப் பார்வையிட வந்தார். அப்போது எனது பணி பற்றி விசாரித்தார். இடர் – ஆபத்துப் பகுப்பாய்வில் (Risk & Hazard Analysis) ஈடுபட்டிருப்பதைக் கூறினேன். எப்படி விபத்துகளைத் தவிர்ப்பது, விபத்துகள் ஏற்பட்டால் எப்படி அதன் பாதிப்பைக் குறைப்பது என விவரித்தேன். இதைக் கேட்ட கலாம், டி.ஆர்.டி.ஓ பல சிக்கலான ஆயுத அமைப்புகளை உருவாக்கி வருகிறது. அவைகளின் இடர் – ஆபத்தைப் பகுப்பாய்வு செய்ய முடியுமா? என்று கேட்டார். நான் இதை எதிர்பார்க்கவில்லை. நான் இளம் விஞ்ஞானி, அவர் நிறுவனத்தின் தலைவர், எனவே பதில் கூறத் தயங்கினேன். உடனே கலாம், ‘‘இதைப் பற்றி மேலும் சிந்தியுங்கள்’’ என்று என்னை ஊக்கப்படுத்தினார். அது தான் அவருடனான என் முதல் சந்திப்பு.
தொடர்ந்து அப்துல் கலாம் அவர்களுடன் பணியாற்றிய போது ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி…
ஒரு புதிய தொழிற்கூடத்தின் இடர்-ஆபத்துப் பகுப்பாய்வை முடித்து, பல பரிந்துரைகளை அளித்திருந்தேன். மூத்த விஞ்ஞானிகள் பலர் ‘‘இவ்வளவு பரிந்துரைகள் தேவையா? கால விரையமாகும், இப்படிப்பட்ட ஆபத்துகள் எல்லாம் ஏற்படாது’’ என்று கருத்து தெரிவித்தனர்.
நானும், பரிந்துரைகளைக் குறைத்து அறிக்கை கொடுத்திருந்தேன். எதிர்பாராத வகையில் அந்தத் தொழிற்கூடத்தில் விபத்து ஏற்பட்டது. பின்னாளில், விபத்து விவகாரத்தை அப்துல் கலாம் ஆய்வு செய்தார். அந்தக் கூட்டத்திலிருந்த என்னைப் பார்த்து ‘‘ஏன் இந்த விபத்தின் ஆபத்தை உங்கள் பகுப்பாய்வில் வெளிக்கொணரவில்லை?’’ என்று கேட்டார். நான் நடந்ததைக் கூறி எனது சில பரிந்துரைகளை நீக்கியதைக் குறிப்பிட்டேன். ‘‘நீங்கள் எதைச் செய்தாலும் தன்னம்பிக்கையோடு செய்ய வேண்டும். சமரசம் செய்து கொள்ளக்கூடாது. பாதுகாப்பு (Safety) மிக மிக முக்கியம்’’ என்றார். எனது வாழ்வின் முக்கியப் பாடமாக இவைகளைக் கடைபிடிக்க ஆரம்பித்தேன்.