
சாதனையாளர்கள் பக்கம்
மதுரை.ஆர்.கணேசன்
கல்வி கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று சொல்லுவார்கள் அதேப்போல் கலைகள் கற்றோர்க்கும் செல்லும் இடமெல்லாம் நலம் பயக்கும் என்பது மிகையல்ல..!
தமிழகத்தின் பாரம்பரிய தற்காப்புக் கலைகளில் “..சிலம்பம் முன்னிருந்து பாதுகாக்கிறது; சிலம்பம் கற்றுக் கொண்டால் எப்போதும் தைரியத்தில் எந்தப் பின்னடைவும் இருக்காது..!!!
இராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள சத்திரக்குடி கிராமத்தை சேர்ந்த செ.ரித்திகா சிலம்பத்தில் பல்வேறு சாதனைகள் படைத்து வருகிறார்.
சிலம்பம் மட்டுமல்ல, மல்லர் கம்பம் போன்ற பல விளையாட்டுகளில் தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
2023-ஏப்ரல் தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் முதல் பரிசு தங்கப் பதக்கம்.,
2024 – ஜனவரி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் முதல் பரிசு தங்கப் பதக்கம்.,
2025-மே கோவை சக்தி பள்ளியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் முதல் பரிசு.,
அதே ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய இளைஞர் பாரம்பரிய சிலம்பம் சங்கம் சார்பில் புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய சிலம்பம் போட்டியில் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான சிலம்பம் போட்டியில் 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட அளவில் வெற்றி பெற்று மயிலாடுதுறையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கு பெற்றார்.
இராமநாதபுரத்தில் “..குழந்தைகளின் கல்வியினை வலியுறுத்தி ஒரு மணி நேரம் நிற்காமல் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார் இதனை கலாம் புக் ஆஃப் வோல்டு ரெக்கார்ட்..” அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.
இவரது சிலம்பக் கலையின் சாதனையினைப் பாராட்டி “..2025 ஆம் ஆண்டு காளையார் கோவிலில் சீமையின் சாதனையாளர் விருதும்..” வழங்கப்பட்டிருக்கிறது.
ஒருவர் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள மிகவும் இன்றியமையாதது சிலம்பம் எனக்கூறும் ரித்திகா சர்வதேச அளவில் ஒரு தங்கப்பதக்கமும் பெற்றிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது..!
இனி நம்மோடு செ.ரித்திகா ..,
“..நான் மீனாட்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஒன்பதாம் வகுப்பு சென்றிருக்கிறேன்.
நான் ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது படிப்பில் முதலிடம் பெற்றேன் மேலும் ஏதாவது ஒரு விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற ஆவல் எனக்குள் இருந்தது, எனது விருப்பத்தை தெரிந்து கொண்ட பெற்றோர் என்னை சிலம்பம் பயிற்சிப் பள்ளியில் சேர்த்து விட முடிவெடுத்தனர்.
இராமநாதபுரத்திலிருந்து சிலம்ப மாஸ்டர் மேத்யு இம்மானுவேல் எங்க ஊரு சத்திரக்குடிக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் பயிற்சி வகுப்பு எடுக்க வருவார்கள்.
சிலம்ப மாஸ்டர் என் பெற்றோரைத் தொடர்பு கொண்டு எனக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து சொன்னார்கள், பிறகு எனக்கு முறையாக பயிற்சி அளித்தார்.
கம்பைப் பிடித்து சுழற்றும் வாகை பார்த்து நானும் மாஸ்டரைப் போல சுழற்றி இந்த சிலம்பக் கலையில் தேர்ச்சி பெற்று பலகளங்களில் வாகை சூட ஆவல் கொண்டிருந்தேன்.
அன்று முதல் பயிற்சி தொடங்கியது வாரத்தில் இரண்டு நாட்கள் பயிற்சி பெற்றேன் சிலம்பக் கலையின் மீதான ஆர்வம் என்னை மேலும் ஊக்குவித்தது.
நான் (ஐந்தாம் வகுப்பு) ஒன்பது வயதிலிருந்து கற்று வருகிறேன் முறையாக கற்றுக் கொண்ட பிறகு வட்டம், மாவட்டம், மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு அனைத்திலும் முதலிடம் பெற்றிருக்கிறேன்.
சிலம்பக் கலையுடன் சேர்த்து வாள், வேல்கம்பு, அடிமுறை, கம்புச் சண்டை, இரட்டைக் கம்பு சிலம்பம், மல்லர் கம்பம், மல்லர் கயிறு போன்ற கலைகளையும் கற்றுக் கொண்டேன்.
இந்த விளையாட்டுகளின் மூலமாக நான் உடலளவிலும், மனதளவிலும் மிகவும் தைரியமாக உள்ளேன், இக்கலை புதுப்புது உற்சாகத்தை நாளும் நாளும் எனக்கு ஏற்படுத்தி என்னை எங்க ஊரில் தனி அடையாளத்துடன் மாற்றியுள்ளது.