வரலாறு பேசுவோம்-01
திரு.முகில்

ரலாற்றைவிடச் சுவாரசியமானது எதுவொன்றும் கிடையாது. சரித்திரத்தின் பக்கங்கள் வழியாக, ‘கடந்த காலப்பயணம்’ செய்வதே இந்தத் தொடரின் நோக்கம்.

மீனா பஸார். முகலாயப் பேரரசர் அக்பர், தன் ஆட்சிக் காலத்தில் உருவாக்கிய ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நிறைந்த சந்தைத் திருவிழா. அதை அவரது பேரன் ஷாஜஹானும் கொண்டாடினார். அதுவும் ஒரு வாரத்துக்கு, இளம் பெண்கள் மட்டுமே கடைபரப்பி பொருள்களை விற்கும் சந்தை. ஆண்களில் பேரரசருக்கும் இளவரசர்களுக்கும் அவர்களோடு நெருங்கிய சில முக்கியஸ்தர்களுக்கும் மட்டுமே அனுமதி. தனது அந்தப்புரத்துக்கான பெண்களைத் தேர்ந்தெடுக்கும் திருவிழாவாகத்தான் அதைக் கருதினார் ஷாஜஹான்.
ஷாஜஹான் இளவரசராக இருந்தபோது நடந்த ஒரு மீனா பஸாரில்தான் அவளைக் கண்டார். அர்ஜுமந்த் பானு பேகம்.

‘என்ன இளவரசரே, அப்படிப் பார்க்கிறீர்கள்? வேண்டுமா இந்த வைரக்கல்? உங்களுக்காக விலையைக் குறைத்துச் சொல்கிறேன். ஒரு லட்சம் தந்தால் போதும்’ – கலகலவெனச் சிரித்தாள்.
அவள் தன் இதழ்கள் விரித்துக் கேட்டபின் வாங்காமல் இருக்க முடியுமா? ஆனால், அந்தச் சமயத்தில் இளவரசரிடம் அவ்வளவு பணம் இல்லை. சட்டெனத் தன் கழுத்திலிருந்த முத்து மாலையையும், வைரப் பதக்கம் பதித்த சங்கிலியையும் கழற்றி அவளிடம் கொடுத்தார். அவள் திகைத்து நின்றாள். சுற்றி நின்ற பெண்கள் உண்டாக்கிய ஆரவார ஒலியில் அந்தச் சந்தையே குலுங்கியது.

ஷாஜஹான் – மும்தாஜின் காதல் குறித்து வழிவழியாகச் சொல்லப்படும் கதை இது. முறையான ஆதாரங்கள் எதுவும் கிடையாது. அர்ஜுமந்த் பானு பேகம்தான் மும்தாஜ். நூர்ஜஹானின் அண்ணனான அஸப் கானின் மகள். நூர்ஜஹானின் ஏற்பாட்டின்படி, இளவரசர் ஷாஜஹானுக்கும் அவளது மருமகள் அர்ஜுமந்துக்கும் திருமண நிச்சயதார்த்தம் 1607 – ஆம் ஆண்டில் நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஐந்து வருடங்கள் கழித்து இரண்டாவது மனைவியாக வாக்கப்பட்டாலும் மும்தாஜ், ஷாஜஹானது மனத்தில் என்றும் முதலிடத்தில்தான் இருந்தாள்.

தான் பேரரசராகப் பதவியேற்றதும், தன் பிரியத்துக்குரிய பேரரசி மும்தாஜுக்கு ஏகப்பட்ட சலுகைகளை வாரி வழங்கினார் ஷாஜஹான். அவளுக்கு வருட மானியத் தொகை பத்து லட்சம் ரூபாய் என்று அறிவித்தார். மும்தாஜைத் தனது மனைவியாகக் கருதாமல் நெருங்கிய தோழிபோல நடத்தினார். அந்தப்புரத்திலும் மற்ற இடங்களிலும் மும்தாஜுக்கே முதல் மரியாதை வழங்கப்பட்டது. பல குற்றவாளிகள் மும்தாஜின் கருணைப்பார்வையினால் கடும் தண்டனைகளிலிருந்தும் மரண தண்டனைகளிலிருந்தும் தப்பியிருக்கின்றனர். ஏழைப்பெண்கள், அநாதைப் பெண்கள் பலரது திருமணத்தை மும்தாஜ் நடத்தி வைத்திருக்கிறாள். சொல்லப்போனால் மும்தாஜ் வார்த்தைக்கு மறுபேச்சு பேசாமல் தலையாட்டுவதே ஷாஜஹானின் வழக்கமாக இருந்தது.

பதிமூன்று பிரசவங்களைத் தாங்கிய மும்தாஜின் உடம்பு தளர்ந்துதான் போயிருந்தது. வயிற்றில் அடுத்த குழந்தை. ஷாஜஹான் அப்போது போரிட்டுக் கொண்டிருந்த புர்ஹான்பூரின் மாளிகையில்தான் மும்தாஜும் இருந்தாள். பிரசவத்துக்கான நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. மும்தாஜ் வலி வந்து துடித்தபோது அரண்மனை மருத்துவச்சிகள் பதறித்தான் போனார்கள். பிரசவம் சிக்கலானதாக அமைந்தது. பதினான்காவதாகப் பிறந்தது பெண் குழந்தை. கௌஹரரா பேகம்.

மும்தாஜ், தன் மூத்த மகள் பதினேழு வயது ஜஹானராவை அழைத்தாள். ‘உடனே உன் தந்தையை இங்கே அழைத்து வா!’

ஜஹானரா, போர் முகாமில் ஷாஜஹானைச் சந்தித்து அழைத்து வந்தாள். அருகில் ஷாஜஹான் இருக்கும்போது மும்தாஜின் உயிர் பிரிந்தது. அது 1631, ஜுன் 17. அவளுக்கு அப்போது வயது வெறும் முப்பத்தெட்டு.

மும்தாஜின் இழப்பு ஷாஜஹானை முற்றிலும் செயலிழக்கச் செய்திருந்தது. யாராலும் அவரைத் தேற்ற முடியவில்லை. துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக வெள்ளை ஆடை அணிந்துகொண்டார். அவரைச் சார்ந்தவர்கள் எல்லோருமே வெள்ளை ஆடை அணிந்து கொண்டார்கள். ஒரு வாரத்துக்கு பேரரசர், மக்கள் முன்னிலையிலோ, மற்றவர்கள் முன்னிலையிலோ தோன்றவில்லை. யாரிடமும் பேசவும் இல்லை. அடுத்த இரு வருடங்களுக்கு துக்கம் அனுஷ்டிக்கப் போவதாக அறிவித்தார்.

அந்த டிசம்பரில் ஆக்ராவுக்குத் திரும்பினார். நடைபெறவிருந்த எல்லா சுப நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டிருந்தன. ஷாஜஹானின் மகன்களுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் காலவரையின்றித் தள்ளிப் போடப்பட்டன. இசை, நடனம் உள்ளிட்ட எல்லாக் கலை நிகழ்ச்சிகளையும் தவிர்த்தார் ஷாஜஹான். நகைகள் அணியவில்லை. வாசனைத் திரவியங்களைக்கூட உபயோகிக்கவில்லை.

அடுத்த இரண்டு வருடங்கள் நிறைவுற்றபோது, ஷாஜஹான் தன் பொலிவை இழந்திருந்தார். அவரது தலை கிட்டத்தட்ட முழுவதும் நரைத்துவிட்டது. அதற்குப் பின்பும்கூட ஷாஜஹானின் துக்கம் குறையவில்லை. மும்தாஜ் இறந்த தினம் புதன்கிழமை. ஆக ஒவ்வொரு புதன்கிழமையும் துக்கம் அனுஷ்டித்தார். ஒவ்வொரு வருடமும் அவள் இறந்த மாதத்தில் வெள்ளை உடை மட்டுமே அணிந்தார்.

ஷாஜஹான் இந்தத் துக்கத்திலிருந்து தேறி வருவதற்கு ஒரே காரணமாக இருந்தவள் மும்தாஜின் மூத்த மகள் ஜஹானராதான். மும்தாஜைப் போலவே உருவம் கொண்டிருந்த அவளைப் பார்த்துதான் தன்னைத் தேற்றிக் கொண்டார் ஷாஜஹான். மும்தாஜை இழந்த ஷாஜஹானுக்கு சுற்றி நிற்கும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள், முளைத்து நிற்கும் எதிரிகள், மக்களுக்காக உடனடியாக நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள், வலுப்படுத்தப்பட வேண்டிய நிர்வாக அமைப்பு போன்ற எதுவுமே முக்கியமானதாகத் தோன்றவில்லை. அந்த ஒரு நினைவுச் சின்னத்தைக் கட்டி முடிக்கும் பணி மட்டுமே அவரது மனத்தை, நேரத்தை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.
‘இனி நீங்கள் யாரையும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. இதுவரை இல்லாத அளவில் மிக அழகான கல்லறை ஒன்றை எனக்காக நீங்கள் கட்ட வேண்டும்.’ – மும்தாஜ் தனது மரணப்படுக்கையில் ஷாஜஹானிடம் கூறிய வார்த்தைகள். அதற்காகவே ஷாஜஹான் தாஜ்மஹாலைக் கட்டினார் என்பது காலம் காலமாகச் சொல்லப்பட்டு வரும் வாய்வழிச் செய்தி. ஆனால், முறையான ஆதாரங்கள் கிடையாது.

ஜோதிடர்களின் ஆலோசனைப்படி யமுனை நதிக்கரையோரமாக, ஆக்ரா நகருக்குத் தெற்கே ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தார் ஷாஜஹான். அது அம்பர் ராஜா மன்சிங்கின் இடம். அவரது பேரன் ராஜா ஜெய்சிங்கின் வசம் இருந்தது. ஜெய்சிங், எந்தவிதப் பிரதி உபகாரமுமின்றி நிலத்தைக் கொடுக்கத் தயாராக இருந்தார். ஆனால், ஷாஜஹான், வருங்காலத்தில் ஏதாவது சர்ச்சைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக, அந்த நிலத்துக்குப் பதிலாக வேறு நிலங்களை ஜெய்சிங்குக்கு அளித்தார்.

தாஜ்மஹால் கட்டுவதற்கான முதல்கட்டப் பணிகள் 1632 ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்டன. முன்பாகவே மும்தாஜின் உடல் பர்ஹான்பூரில் ஸெய்னாபாத் தோட்டத்தில் தாற்காலிகமாக அடக்கம் செய்யப்பட்டிருந்தது. ஆக்ராவில் தாஜ்மஹாலுக்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பமான நிலையில் மும்தாஜின் உடலை ஆக்ராவுக்குக் கொண்டுவர ஷாஜஹான் உத்தரவிட்டார்.

இளவரசர் ஷா சுஜாவின் தலைமையில் முகலாய வீரர்கள் சூழ, மும்தாஜின் உடல் அடங்கிய பெட்டி ஆக்ராவுக்குக் கொண்டு வரப்பட்டது. வழியெங்கும் குர்-ஆன் வாசிக்கப்பட அந்த ஊர்வலம் ஒவ்வோர் ஊராகக் கடந்தது. ஏழை, எளியவர்களுக்கு உணவு, காசுகள், பானங்கள் வழங்கப்பட்டன. ஆக்ராவை வந்தடைந்த மும்தாஜின் உடல் அங்கே இரண்டாவது முறையாக சகல மரியாதைகளுடன் மீண்டும் தாற்காலிகமாக அடக்கம் செய்யப்பட்டது. தாஜ்மஹாலுக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்துக்குச் சற்று தள்ளி அமைந்திருந்த அந்தச் சமாதிக்கென தாற்காலிகக் கட்டடம் ஒன்று எழுப்பப்பட்டது. அதன் பெயர் Gunbad-i-mukthasari.
பேரரசு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான சிற்பிகள் ஆக்ராவுக்கு அழைத்து வரப்பட்டார்கள். பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். அவர்கள்போக ஆயிரக்கணக்கான கட்டடத் தொழிலாளர்களும், கூலித் தொழிலாளர்களும் வருடக்கணக்கில் ஆக்ராவில் தங்கிப் பணிபுரிந்தார்கள். சுமார் 20,000 பேர் என்றொரு குறிப்பு உண்டு.

முதல் கட்டமாக, யமுனை நதிக்கரையில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட பகுதி தோண்டப்பட்டது. பின் ஆற்று மட்டத்திலிருந்து ஐம்பது மீட்டர் உயரத்துக்கு மண் நிரப்பப்பட்டு, இறுக்கப்பட்டு, சமப்படுத்தப்பட்டது. மும்தாஜின் சமாதி அமையவிருந்த இடத்தில் ஆழமான கிணறு போன்ற அமைப்புகள் தோண்டப்பட்டன. அதில் கற்களும், சிறு பாறைகளும் இட்டு நிரப்பப்பட்டு பலமான அஸ்திவாரம் போடப்பட்டது.