வெற்றியோடுவிளையாடு!       – 28

டாக்டர். ஆதலையூர் சூரியகுமார்

சிறிய வயதிலேயே மிகப்பெரும் சாதனைகள் நடத்தப்படும் காலம் இது. செஸ் போட்டிகளில் பிரக்ஞானந்தா,குகேஷ்,  கேரம் போட்டியில் காசிமா போன்றவர்களெல்லாம் தற்போதைய உதாரணம். அவர்களின் வெற்றிக்கு என்ன காரணம் என்று கேட்டால்,  நாங்கள் ஐந்தாம் வகுப்பிலேயே பயிற்சியைத் தொடங்கி விட்டோம்,  ஆறு வயதிலேயே மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாடத்  தொடங்கி விட்டோம் என்கிறார்கள்.

உண்மைதான்,  ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது நம் பழமொழி. சீக்கிரமே லட்சியப் பாதையில் பயணிக்கத் தொடங்கும் மாணவர்கள் சிறிய வயதிலேயே சாதித்து விடுகிறார்கள்.

ஆறாம் வகுப்புப் படிக்க ஆரம்பிக்கும் போதே ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினால் பட்டப்படிப்பு முடித்தவுடன்  வெற்றிகரமாக தேர்வு எழுதுவதற்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்கிறார் தமிழ்நாடு கல்வியாளர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவரும்,  பிரில்லியண்ட் ஜூனியர் மற்றும் சீனியர் ஐ.ஏ. எஸ் அகாடமி இயக்குநர் டாக்டர் தங்க கணேசன் அவர்கள்.

மாணவர்களுக்கு மிகவும் உபயோகமாகவும் சுவாரஸியமாகவும் இருந்ததால் ஆளுமைச் சிற்பி மாணவ வாசகர்களுக்காக கூடுதல் விவரங்கள் கேட்டோம்.

‘இன்று பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் உங்கள் லட்சியம் என்னவென்று கேட்டால் பெரும்பாலானவர்கள் கலெக்டராக வேண்டும் என்று சொல்கிறார்கள், ஆனால், அதற்காக என்ன முயற்சி எடுக்கிறார்கள் என்று கேட்டால் எதுவும் இல்லை. அதற்கு இன்னும் காலம் இருக்கிறது, மெதுவாகப் பார்க்கலாம் என்று நினைக்கிறார்கள்.  ஆனால், உண்மை அப்படி அல்ல. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்.  தேர்வுகள் எனப்படும் யுபிஎஸ்சி தேர்வுகளில் பெரும்பாலும் வட இந்திய மாணவர்களே வெற்றி பெறுவதாக ஒரு கருத்து நிலவுகிறது. அதற்குக் காரணம் அவர்கள் ஆறாம் வகுப்பில் இருந்தே அதற்கான பயிற்சியைத் தொடங்கி விடுகிறார்கள். 

யுபிஎஸ்சி பாடத்திட்டத்தை ஆறாம் வகுப்பில் இருந்து திரும்பத் திரும்ப படிக்கும் பொழுது பட்டப்படிப்பு முடித்தவுடன் தேர்வு எழுதுவதற்கு மிகவும் உபயோகமாக இருக்கும். அப்படிப் பயிற்சி பெறுபவர்கள் பெரும்பாலும் முதல் அல்லது இரண்டாவது முயற்சிலேயே அவர்களால் வெற்றி பெற்று விட முடியும். 

இங்கே பெரும்பாலும் பட்டப்படிப்பு முடிந்தவுடன்தான் ஐ.ஏ.எஸ் பற்றி யோசிக்கத் தொடங்குகிறார்கள். அந்தத் தேர்வுகளைப் பற்றி புரிந்து கொள்வதற்கு ஓராண்டு காலம் ஆகிவிடுகிறது.  அதற்குப் பிறகு பயிற்சி என்கிற போது காலதாமதம் ஆகி வயது வரம்பு கடந்து விடுகிறது.

இப்படிக் குறைகளை மட்டுமே முன் வைக்காமல் அதற்கான ஒரு அழகிய அறிவார்ந்த பயிற்சி தரத் தொடங்கி இருக்கிறது தமிழ்நாடு கல்வியாளர்கள்  கூட்டமைப்பு.

பாடத்திட்டங்களை மிகச் சரியாக வடிவமைத்து அதை இன்றைக்கு இருக்கக்கூடிய இணைய வழிச் சேவை மூலம் மிகச் சிறப்பாக வழங்குகிறோம்.

மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.