சாதனையாளர்பக்கம்
மதுரை.ஆர்.கணேசன்
சிலம்பம் கற்றுக் கொள்வது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வைத் தருவதோடு, எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. அதே போல, கராத்தே பயிற்சி எடுத்துக் கொண்டால் உடலை பிட்டாக வைத்துக் கொள்ளவும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
இக்கலைகள் இரண்டுமே, கற்றுக் கொள்ளும் ஒவ்வொருக்கும் இரண்டு கண்கள் போன்றவை என்றால் மிகையல்ல..! எந்தச் சூழ்நிலையிலிலும் யாருடைய உதவியையும் எதிர்பாராமல் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள முடியும்..!
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், க.மோரூர் கிராமப் பகுதியை சேர்ந்த விவசாயி மோகன்ராஜ், சத்யபிரியா தம்பதியின் மகள் எம்.பிரதியுக்ஷா சிலம்பம், கராத்தே மற்றும் அத்லெட்டிக் விளையாட்டுக்களில் சர்வ தேச அளவில் நூற்றுக்கணக்கான மெடல்கள் பெற்று மகத்தான சாதனை படைத்திருக்கிறார்..!
இவரது சொந்த ஊரில் லேண்ட் காலணி அரசு தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்ததற்காக “..மதிப்புறு முனைவர் பட்டம்..” பெற்றுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது..!
நியூ இந்தியா மெட்ரிக்குலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூலில் தற்போது எம்.பிரதியுக்ஷா ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
பிரதியுக்ஷாவின் பெற்றோர் மோகன்ராஜ், சத்யபிரியா இனி நம்மிடையே…,
“..நான் கணிதத்தில் முதுகலைப் பட்டம் படித்துவிட்டு அரசு வேலைக்குத் தேர்வு எழுதி இருக்கிறேன். எனது கணவர் லாரி ஓட்டுனர். நாங்கள், மாமனார், மாமியார் என அனைவரும் ஒரே கூட்டுக் குடும்பமாக வாழ்கிறோம்.
எனக்கு ஒரு மகள், ஒரு மகன் என இரண்டு குழந்தைகள். மூத்தவள் பிரதியுக்ஷா, சிறுவயதிலிருந்தே எதையும் சட்டெனக் கற்றுக் கொள்ளும் திறன் அதிகமாக இருப்பதைக் கவனித்திருக்கிறேன்.
அவளது தாத்தா தற்காப்புக் கலைகளான கராத்தே, சிலம்பம் முறையாக கற்றுக் கொடுக்க எங்கள் கிராமத்திலிருந்து பல கிலோ மீட்டர் தூரம் பேத்தியைக் கூட்டிச் செல்வார்.
தொடக்கத்திலிருந்தே பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடுவதைக் கவனித்த பயிற்சியாளர்கள் இவள் மீது தனிக் கவனம் செலுத்திப் பயிற்சி அளித்தார்கள்.
எனது மாமனார்,. பிரதியுக்ஷாவின் தாத்தா தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வதும், போட்டிகளுக்காக வட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வது போன்ற எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறார்.
அவரது அயராத முயற்சியாலும், ஊக்கத்தினாலும் தான் பிரதியுக்ஷாவால் விளையாட்டில் பல சாதனைகள் செய்ய முடிகிறது.
அவள் சிறுவயது முதல் கல்வியில் முதல் மாணவியாகச் சிறந்து விளங்குகிறாள். அவளுடைய இலக்கு ஐ.ஏ.எஸ் படிப்பதுடன், விளையாட்டில் ஆர்வமுள்ள ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பாள்.
மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.