பிரபஞ்சம் காப்போம் – 09
திரு. ப.திருமலைமூத்த பத்திரிகையாளர்
பூமியின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில், மனிதன் உட்பட ஒவ்வொரு உயிரினமும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. விலங்குகளும் பறவைகளும் மனிதர்களுக்கு மட்டுமல்ல சுற்றுச்சூழல், மற்றும் பிற உயிரினங்களுக்கும் அவசியம். விலங்குகளும், பறவைகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கும் சூழலே மனிதர்களின் வாழ்வியல் சூழலைச் சிறப்பாக்குகிறது. அழகானதாக்குகிறது. சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிக்க இவை உதவுகின்றன. ஆனால் இன்றைக்கு வனவிலங்குகளும், பறவைகளும் அழிவைச் சந்தித்து வருகின்றன.
இந்தியா ஒரு பல்லுயிர் பன்முகத்தன்மை கொண்ட நாடு, உலகில் அறியப்பட்ட வனவிலங்கு இனங்களில் கிட்டத்தட்ட 6.5 சதவிகிதம் இங்கு உள்ளன. உலகின் பாலூட்டிகளில் தோராயமாக 7.6 சதவிகிதம் மற்றும் உலகின் பறவைகளில் 12.6 சதவிகிதம் இந்தியாவில் காணப்படுகின்றன.
உயிரிழப்பு
மனிதர்களின் பேராசை, பெருகி வரும் மக்கள் தொகை, அறிவியல் வளர்ச்சி மற்றும் இயற்கைப் பேரழிவுகளாலும் உலகம் முழுவதும் விலங்கினங்கள் குறைந்து வருகின்றன. இந்தியாவில் அழிந்து வரும் விலங்குகள் பட்டியலில் வங்கப்புலி, ஆசிய சிங்கம், பனிச்சிறுத்தை, ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், சிங்கவால் குரங்கு, ஒளிரும் மரத்தவளை, காஷ்மீரி ரெட்ஸ்டாக், நீலகிரி மலை ஆடு, காட்டெருமை ஆகியனவும் உள்ளன.
தமிழக வனத்துறையின் அதிகாரப்பூர்வமான புள்ளி விவரங்களின்படி, தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை 3,063 – ஆகவும்; புலிகள் எண்ணிக்கை 306 – ஆகவும் உயர்ந்துள்ளது. யானைகள், மற்றும் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்தாலும், அவற்றின் இறப்புகளின் எண்ணிக்கை கவலை அளிப்பதாக உள்ளது. அதாவது, தமிழகத்தில், 2024 – ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையிலான எட்டு மாதங்களில், 47 – யானைகள், ஐந்து புலிகள் இறந்துள்ளன இதில் நீலகிரி மாவட்டம் முதுமலையில் 16 யானைகள்; கோவை மாவட்டத்தில் 14 – யானைகள், ஈரோடு சத்தியமங்கலத்தில் ஒன்பது யானைகள் இறந்துள்ளன. இதில், நான்கு யானைகள் மட்டுமே மனிதர்களால் கொல்லப்பட்டன என வனத்துறை அறிக்கை கூறுகிறது.
அதேபோல எட்டு மாதங்களில், ஐந்து புலிகள் இறந்துள்ளன. ஒன்று நெல்லையிலும், நான்கு புலிகள் நீலகிரியிலும் இறந்துள்ளன. அதில், நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில், இரு புலிகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டது, விசாரணையில் தெரியவந்துள்ளது.
“புலிகள் காப்பகங்களை ஒட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள், தங்கள் கால்நடைகளைப் புலி வேட்டையாடாமல் இருக்கப் புலி வேட்டையாடி பதுக்கி வைத்துள்ள விலங்குகளின் உடலில், விஷத்தை சேர்த்து விடுகின்றனர். இதுவே, புலிகள் இறப்புக்கு காரணமாகி விடுகிறது” என்றும் சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.
மனித மரணங்கள்
2019-2022 வரையிலான மூன்று ஆண்டுகளில் 1,579 மனிதர்கள் யானைகளால் கொல்லப்பட்டுள்ளனர், இந்த இறப்புகளில் அதிக எண்ணிக்கையில் ஒடிசா 322 ஆகவும், அதைத் தொடர்ந்து ஜார்கண்ட் 291 ஆகவும் (2021-22 இல் மட்டும் 133 உட்பட), மேற்கு வங்கத்தில் 240 – ஆகவும், அஸ்ஸாமில் 229 – ஆகவும், சத்தீஸ்கரில் 183 – ஆகவும், தமிழ்நாட்டில் 152 – ஆகவும் உள்ளது.
ஏன் வருகின்றன?
வனவிலங்குகள் ஊருக்குள் வருகின்றன என்ற புலம்பலை அடிக்கடிக் கேட்கிறோம். விவசாயம் மற்றும் நகரமயமாக்கல் போன்ற காரணங்களால் வனவிலங்குகளின் வாழ்விடங்களை ஆக்கிரமித்துவிட்டோம். அதனால் உணவு, நீர் போன்றவற்றைத் தேடி வனவிலங்குகள் மனிதர்கள் வசிக்கும் பகுதிக்குள் வருகின்றன. அதுபோல வறட்சி, வெள்ளம் காலங்களிலும் விலங்குகள் புதிய பகுதிக்குள் நுழைவது வழக்கம். மேலும், கரும்பு, பழங்கள் போன்ற பயிர்களால் ஈர்க்கப்பட்டு யானைகள், காட்டுப்பன்றிகள் மற்றும் குரங்குகள் போன்ற விலங்குகள் மனிதர் வாழும் பகுதிக்குள் வருகின்றன.
இதற்கு என்ன செய்யலாம்?
பாதிக்கப்படக்கூடிய பகுதிகளைச் சுற்றி சூரிய சக்தியால் இயங்கும் மின்சார வேலிகள் போன்ற இயற்பியல் தடுப்புகளை அமைக்கலாம். யானைகளைத் தடுப்பதற்காகப் பண்ணைகளைச் சுற்றி தேனீக் கூடு வேலிகள் அமைப்பது, சத்தம் எழுப்பும் சாதனங்களைப் பயன்படுத்துவது, காவற்கோபுரங்கள் போன்ற தடுப்புகளைப் பயன்படுத்திக் கண்காணிப்பது போன்றவை விலங்குகளின் அத்துமீறலில் இருந்து பாதுகாக்கும்.
விலங்குகள் அவசியம்
உணவுச் சங்கிலியில், அனைத்து உயிரினங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. உணவுச் சங்கிலியில் இருந்து ஏதேனும் ஒரு உயிரினம் அகற்றப்பட்டால், அது உணவுச் சங்கிலியை சீர்குலைத்துவிடும். வனப்பகுதிகளில் யானைகள், புலிகள் பிரதான உயிரியல் ஆதாரமாக விளங்குகின்றன. இவற்றின் நடமாட்டம் மற்றும் இனப்பெருக்கம் அடிப்படையில், வனப்பகுதிகளில் சூழலியல் தன்மை கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, வனங்களின் வளர்ச்சிக்கும், பூச்சி, பறவைகளின் உணவுக்காகவும், முக்கியமாக வழித்தடத்துக்காகவும் யானைகள் அவசியம். யானை அழிந்தால் பல உயிர்கள் காணாமல் போகும். இது சுற்றுச்சூழல் அமைப்பில் ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கும்.
மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.