பிரபஞ்சம் காப்போம் – 14

திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்

ட்டைக் கடித்து.. மாட்டைக்கடித்து… என ஒரு சொலவடை உண்டு. அதுபோல மனித இரத்தத்திலும், கல்லீரல் மற்றும் நுரையீரல் செல்களிலும், நஞ்சுக்கொடி மற்றும் விந்தணுக்கள் போன்றவற்றிலும் நானோ பிளாஸ்டிக் ஊடுருவியிருப்பது ஏற்கெனவே கண்டறியப்பட்டது. மேலும் ஏற்கெனவே, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் மண் உயிரினங்கள் உள்ளிட்ட பல்வேறு விவசாய நடைமுறைகளில் பிளாஸ்டிக்கின் தாக்கத்தைக் காணமுடிகிறது. இப்போது தாவரங்களின் இலைகளிலும் பிளாஸ்டிக் துகள்களின் ஆதிக்கம் தொடங்கியிருக்கிறது. இது உணவுச் சங்கிலியில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் உணவு உற்பத்தியைப் பாதிக்கும் என்றும் பதறுகிறார்கள் அறிவியலாளர்கள்.

உலகம் முழுவதும், காற்றிலும், கடல் நீரிலும், பனியிலும், மண்ணிலும் மைக்ரோ பிளாஸ்டிக்கும், நானோபிளாஸ்டிக்கும் வியாபித்திருக்கின்றன. இன்றைக்குத் தாவரங்களின் இலைகள், காற்றில் இருந்து நேரடியாக மைக்ரோ பிளாஸ்டிக் மற்றும் நானோபிளாஸ்டிக்ஸை உறிஞ்சிக் கொள்வது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் நங்காய் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி, மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் அறிவியலுக்கான சீன அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சி மையம், பெய்ஜிங் வேளாண்மை மற்றும் வனவியல் அறிவியல் அகாடமி ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இந்த ஆய்வினை நடத்தினர். இன்றையநிலையில், இந்த ஊடுருவலில் மைக்ரோபிளாஸ்டிக்ஸை விட நானோபிளாஸ்டிக் அதிகமாகக் காணப்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. மைக்ரோ பிளாஸ்டிக், நானோ பிளாஸ்டிக் என்றால் என்ன? முதலில் இன்றைய பிளாஸ்டிக்கின் விஸ்வரூபத்தைக் காண்போம்.

பிளாஸ்டிக்

பிளாஸ்டிக், நமது அன்றாட வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத ஒரு பகுதியாகிவிட்டது. ஆண்டுதோறும் உத்தேசமாக 4 டிரில்லியன் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு நிமிடமும் 1 மில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்கள் நுகரப்படுகின்றன. இந்தப் பிளாஸ்டிக் பைகள் அல்லது பாட்டில்கள் சராசரியாக 12 நிமிடங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவை சிதைவதற்குப் பல ஆண்டுகள் தேவைப்படும். புவி வெப்பமடைதலுக்குப் அடுத்த இரண்டாவது மிகப் பெரிய சுற்றுச்சூழல் பிரச்சனையாக இன்றைய பிளாஸ்டிக் மாசுபாடு உருவெடுத்திருக்கிறது.

பிளாஸ்டிக் பொருட்களின் சிதறல்களே, மைக்ரோ பிளாஸ்டிக், நானோ பிளாஸ்டிக் உருவாக வழிவகுக்கின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கண்டெய்னர்கள், கோப்பைகள், உணவுகள் எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் டிபன் பாக்ஸ், கவர்கள் போன்றவை மூலம் இவை உருவாகுகின்றன.

மைக்ரோ பிளாஸ்டிக், நானோ பிளாஸ்டிக் வித்தியாசம் என்ன? மைக்ரோபிளாஸ்டிக்ஸ் பொதுவாக 5 மில்லிமீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்டவை. நானோபிளாஸ்டிக்ஸ் என்பது 1 முதல் 1000 நானோமீட்டர்கள் வரையிலான விட்டம் கொண்ட பிளாஸ்டிக் துகள்கள் என வரையறுக்கப்படுகிறது, இது 0.001 முதல் 0.000001 மில்லிமீட்டருக்குச் சமம். அப்படியென்றால் இந்தத் துகளின் அளவை மனக்கண்ணில் கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். 2024 – ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பாட்டில் நீரில் உள்ள நானோபிளாஸ்டிக்களைப் பார்க்கவும், எண்ணவும் கூடிய ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தனர். இந்த ஆய்வில் முந்தைய ஆய்வுகளைப் போலல்லாமல், பகுப்பாய்வு செய்யப்பட்ட ஒவ்வொரு லிட்டர் பாட்டில் நீரிலும் 100,000க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இலையில் பிளாஸ்டிக்

மனித இரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக் இருக்கின்றது என்ற ஆய்வு மூன்று வருடங்களுக்கு முன், வெளியானது. மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இரத்தத்தில் கலக்காமல், மலம் வழியாக வெளியேறிவிடும் என நம்பப்பட்ட நிலையில், தென் கொரியாவைச் சேர்ந்த ஆய்வாளர் நடத்திய ஆய்வில், மனித இரத்தத்தில் நுண்ணியப் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாகத் தகவல் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இப்படி மனித வாழ்வில் மைக்ரோ பிளாஸ்டிக் ஊடுருவல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், நாம் உண்ணும் தாவர வகைகளில் மைக்ரோ, நானோ பிளாஸ்டிக் இருப்பதாகவும், இதனை மனிதர்களும், விலங்கினங்களும் உண்ணுவதாகவும் “நேச்சர்” இதழ் வெளியிட்ட ஆய்வறிக்கை சொல்கிறது.

எப்படி உறிஞ்சுகிறது..?

Leaf absorption contributes to accumulation of microplastics in plants என்ற தலைப்பில் வெளியான ஆய்வில், பிளாஸ்டிக் துகள்கள் இலைகளுக்குள் பல பாதைகள் வழியாக நுழைவதை உறுதி செய்கிறது. அவற்றில் ஸ்டோமாட்டா (stomata) மற்றும் க்யூட்டிகல் (cuticle) போன்ற தாவரச் செல்களின் மேற்பரப்பு கட்டமைப்புகளும் அடங்கும்.

வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு மிகவும் நீர்த்தது. எனவே, இந்த வாயுவை உறிஞ்சி, ஒளிச்சேர்க்கையை மேற்கொள்ளத் தாவரங்களுக்குக் குறிப்பிட்ட உறுப்புகள் தேவை. கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுவதற்குக் காரணமான உறுப்புகள் ஸ்டோமாட்டா ஆகும். ஸ்டோமாட்டா என்பது செல்களால் உருவாகும் சிறிய துளைகள். அதே சமயம் க்யூட்டிகல் என்பது மெழுகால் பூசப்பட்ட ஒரு பாதுகாப்புச் சவ்வு ஆகும். இவை மைக்ரோ பிளாஸ்டிக்ஸை உறிஞ்சுவதற்கு உகந்ததாக அமைகிறது. “இலைக்குள் நுழைந்தவுடன், மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் தாவர செல்களுக்கு இடையிலான இடைவெளிகளில் நகர்ந்து, இலைகளின் மேற்பரப்பில் உள்ள ட்ரைக்கோம்கள் (trichomes) எனப்படும் சிறிய முடி போன்ற அமைப்புகளுக்குள்ளும் குவிந்துவிடும்” என்று ஆய்வு கூறுகிறது.

மேலும், இந்த ஆய்வில், பிளாஸ்டிக்ஸ் நுண்துகள்கள் தாவரத்தின் நீர் மற்றும் ஊட்டச்சத்து போக்குவரத்து அமைப்புகள் வழியாகப் பயணித்து மற்ற திசுக்களை அடைய முடியும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் குவியும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் பயிர்களின் இலைகளுக்கு எளிதில் செல்லும்.

பாதிப்பு

ஏற்கெனவே இந்தப் பிளாஸ்டிக் துகள்களைக் கடல்வாழ் உயிரினங்கள் உட்கொள்ளப்படும்போது, இவை மூச்சுத்திணறல், நீரில் மூழ்கி இறப்பது போன்ற சிக்கல்களை எதிர்கொள்கின்றன. மைக்ரோபிளாஸ்டிக்குகள் உணவு சங்கிலி, குடிநீர், காற்று எனப் பல வழிகளிலும் மனித உடலில் நுழைகிறது. நானோ பிளாஸ்டிக்குகள் நுரையீரலுக்குள் சென்று, சுவாசப் பாதை மற்றும் மூளையைப் பாதிக்கும் அபாயம் உள்ளது.

தாவர இலைகளில் படியும் பிளாஸ்டிக் துகள்கள் எந்த அளவிற்கு முக்கியமான உள் உறுப்புகளை அடைகின்றன என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதாவது, தாவர உண்ணிகள் (தாவரங்களை உண்ணும் விலங்குகள்) நுண் பிளாஸ்டிக் துகள்கள் நிறைந்த தாவரங்களை உட்கொள்கின்றன, மேலும் இந்தப் பயிர்கள் அல்லது தாவரங்களை உட்கொள்ளும் மனிதர்களும் துகள்களை உட்கொள்கிறார்கள் என்கிறது புதிய ஆய்வு. சீனாவின் தியான்ஜினில் லெட்யூஸ் (ஒரு வகையான கீரை) வைத்து நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையில், ஒரு கிராம் உலர்ந்த கீரையின் எடையில் 7 முதல் 10 நானோகிராம் பிளாஸ்டிக் குவிந்திருப்பது கண்டறியப்பட்டது. இனி, நீங்கள் உண்ணும் கீரைகளிலும் பிளாஸ்டிக் துகள்கள் இருக்கலாம். அதிலும் பரந்த திறந்த வெளியில் வளர்க்கப்படும் கீரை மற்றும் காய்கறிகளில், நுண்ணியப் பிளாஸ்டிக்குகளின் அளவு 10 முதல் 100 மடங்கு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் தாவரங்களில் நுழையும் மைக்ரோ, நானோ பிளாஸ்டிக் துகள்கள் தாவரங்களின் ஒளிச்சேர்க்கையைத் தடுக்கின்றன. மைக்ரோபிளாஸ்டிக்கானது நில தாவரங்கள் மற்றும் கடல் மற்றும் நன்னீர் பாசிகளில் ஒளிச்சேர்க்கையை
7 – சதவிகிதம் முதல் 12 – சதவிகிதம் வரை குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது இறுதியில் அரிசி, கோதுமை மற்றும் மக்காச்சோளம் போன்ற முக்கியப் பயிர்களின் விளைச்சலை 4 – சதவிகிதம் முதல் 14 – சதவிகிதம் வரை குறைக்கக்கூடும். இது வரும் தசாப்தங்களில் பயிர் மற்றும் கடல் உணவு உற்பத்தியில் பெரும் இழப்புகளை ஏற்படுத்தும். மேலும், எதிர்காலத்தில் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படுத்தும் எனப் பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

மேலும் மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக்குகளில் பூச்சிக்கொல்லிகள், பாலிப்ரோமினேட்டட் டைஃபீனைல் ஈதர்கள், எண்டோகிரைன் போன்ற இரசாயனங்கள், பாலிசைக்ளிக் ஹைட்ரோகார்பன்கள், பித்தலேட்டுகள் மற்றும் பிஸ்பீனால்-கி உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உள்ளன,

பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால், நம் அன்றாட வாழ்வில் நானோபிளாஸ்டிக்ஸைத் தவிர்ப்பது கடினம். சாத்தியமான சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் பொது விழிப்புணர்வை அதிகரித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கருத்தில் கொள்வது முக்கியம். இல்லையென்றால் எதிர்காலத்தில் இரத்தப் பரிசோதனையின் போது பிளாஸ்டிக் துகள்கள் அளவும் கணக்கிடவேண்டியது வரும். l