பிரபஞ்சம் காப்போம் – 14


திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்

..நா. பொதுச் சபை 2025 – ஆம் ஆண்டினை சர்வதேச பனிப்பாறைகள் பாதுகாப்பு ஆண்டாக அறிவித்துள்ளது, இனி ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 – ஆம் தேதியை உலகப் பனிப்பாறைகளுக்கான தினமாக அனுசரிக்கவும் பரிந்துரைத்துள்ளது. மேலும் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 – ஆம் தேதி கொண்டாடப்படும் உலக நீர் தினத்தின் இந்தாண்டு மையக்கருவாக (Theme) “பனிப்பாறை பாதுகாப்பு” என அறிவிக்கப்பட்டிருந்தது. பனிப்பாறையைப் பாதுகாப்பது குறித்துத் திடீரென ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? அதிலும் நம்மில் பலருக்கு, “பனிப்பாறைகளுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்” என்ற எண்ணம் உண்டு.

பூமியில் உறைந்த நன்னீர் இருப்பதற்கான மிகப்பெரிய நீர்த்தேக்கங்களாகச் செயல்படுபவை பனிப்பாறைகள். எப்படி என்கிறீர்களா? பூமியின் நீர் இருப்பு வியக்க வைக்கும். நம் பூமியில் தோராயமாக 326 மில்லியன் டிரில்லியன் கேலன்கள் (326 என எழுதி அதன் பின்னால் 21 பூஜ்ஜியங்கள் இட்டுக் கொள்ளவும்) உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் கடலில் உள்ள உப்புநீர் 97.23 சதவிகிதம். பனிப்பாறைகள் 2.1 சதவிகிதத்தைக் கொண்டிருக்கின்றன. நிலத்தடி நீர் 0.65 சதவிகிதம். மேலும் நன்னீர் மற்றும் உப்பு ஏரிகள் 0.014 சதவிகிதத்தைக் தக்க வைத்திருக்கின்றன. மண்ணின் ஈரப்பதம் 0.005 சதவிகிதம். மேலும் நீரோடைகள், ஈரநிலங்கள் மற்றும் சதுப்பு நிலங்கள் 0.001 சதவிகிதம்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் பூமியின் நீரில் தோராயமாக 97.5 சதவிகிதம் உப்புத்தன்மை கொண்டது, 2.5 சதவிகிதம் மட்டுமே நன்னீர் வடிவில் உள்ளது. இந்த நன்னீரில் பெரும்பகுதி பனிப்பாறைகளில் உள்ளது.

பனிப்பாறைகள் என்றால் என்ன?

மிகப் பெரிய, உறுதியான, கெட்டியான பனிக் கட்டியைத்தான் பனிப்பாறை
(Glacier) என்று அழைக்கிறார்கள். ‘கிளேஸியர்’ என்பது பிரெஞ்சு வார்த்தை. இது லத்தீன் மூல வார்த்தையான ‘கிளேஸிஸ்’ என்பதிலிருந்து உருவானது. ‘கிளேஸிஸ்’ என்றால் ‘ஐஸ்’ என்று பொருள். பனிப்பாறைகள் பூமியின் மேற்பரப்பில் 10 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. பனிப்பாறை என்பது சில தினங்களிலோ, பல மாதங்களிலோ, ஒரு வருடத்திலோ உருவாகிவிடுவதில்லை. ஓர் இடத்தில் பனி விழுந்து, சேர்ந்து பல நூற்றாண்டுகளாக அழுத்தப்பட்டு, கெட்டியாகிப் பனிக்கட்டியாக மாறி, நாளடைவில் பிரமாண்டப் பனிப் பாறையாக மாறும். இன்று உலகில் காணப்படும் பெரும்பாலான பனிப்பாறைகள், கடைசிப் பனி யுகத்தின் மிச்சங்களே. இவற்றின் வயது குறைந்தபட்சம் 11 ஆயிரம் ஆண்டுகள்.

உலகளவில் 2.75 லட்சத்துக்கு மேற்பட்ட பனிப்பாறைகள் உள்ளன, இவை சுமார் 50 நாடுகளில் பரவிக் கிடக்கின்றன. ஆர்ட்டிக், அண்டார்டிக்கா துருவங்கள் மற்றும் அலாஸ்கா, சிலி, கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஆண்டிஸ், இமயமலை, ராக்கி மலை, காகசஸ், ஆல்ப்ஸ் ஆகிய மலைகளிலும் பனிப்பாறைகள் உள்ளன. இந்தியாவின் சியாச்சின் பனிப்பாறை. துருவமற்ற பனிப்பாறைகளில் இரண்டாவது பெரியது.

நகரும் பனியாறு

பனிப்பாறைகளைப் பார்க்கும்போது ஆடாமல் அசையாமல் இருப்பது போலத் தெரியும். ஆனால், அவை மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும். எனவே, அவற்றை ‘பனியாறுகள்’ என்றும் சொல்வார்கள். இப்போதைக்கு உலகின் மிகப் பெரிய பனிப்பாறைக்குக் A23a என்று பெயர். இது 1986 – ஆம் ஆண்டு அண்டார்டிக்காவிலிருந்து பிரிந்தது. இந்தப் பனிப்பாறை லண்டன் நகரைவிட இரண்டு மடங்கு பெரியது. கிட்டத்தட்ட 3,800 சதுர கி.மீ. பரப்பு (மதுரை மாவட்டத்தின் பரப்பளவு 3,710 – சதுர கி.மீ). இது கிட்டத்தட்ட ஒரு டிரில்லியன் மெட்ரிக் டன் எடையும் சுமார் 1,300 – அடி தடிமனும் கொண்டது.

நகரத்தொடங்கிய சில காலத்திலேயே பாறையின் அடிப்பாகம் கடலுக்கு அடியில் சிக்கிக்கொண்டது. அதனால் 30 ஆண்டுகள் நகராமல் நின்றிருந்தது. 2020ஆம் ஆண்டு மீண்டும் நகரத்தொடங்கியது. சில மாதங்களுக்கு முன் தெற்கு ஓர்க்னி தீவுகள் அருகில் ஒரே இடத்தில் சுழல ஆரம்பித்தது. இந்த அரிய நிகழ்வுக்கு Taylor Column என்று பெயர். தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஜார்ஜியாவின் துணை அண்டார்டிக் தீவை இது அடையும் எனக் கணித்துள்ளனர். அங்கு வெப்பம் அதிகமான தண்ணீருடன் தொடர்பு கொள்வதால் இது பல சிறிய பாறைகளாக உடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதெல்லாம் மாறுதலுக்கு உட்பட்டதுதான்.

இந்தப் பனிப்பாறை பயணிக்கும் பாதையில், சுற்றுச்சூழலில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என அறிய ஆர்வமாக இருப்பதாகக் கடல்சார் நிபுணர் ஆண்ட்ரூ மெய்ஜெர்ஸ் கூறியுள்ளார். உயிரியல்-வேதியியலாளர் லாரா டெய்லர், “இந்த வகைப் பெரிய பனிப்பாறைகள் உடைந்து கடலில் கரையும் போது அவை கடலுக்குப் பலவகைச் சத்துக்களை அளிக்கும். இதனால் அது செல்லும் வழியில் உயிரினங்கள் செழிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கியத்துவம்.

பூமியிலுள்ள நீரில் 2.5 சதவிகிதம் மட்டுமே நன்னீர் ஆகும், மேலும் இந்தச் சிறிய பங்கில் மூன்றில் இரண்டு பங்கு பனிப்பாறை வடிவத்தில் உள்ளது. ஏரிகள் மற்றும் ஆறுகளில் பாயும் தண்ணீருடன் ஒப்பிடும்போது இந்த நீர் அணுக முடியாததாகத் தோன்றினாலும், பனிப்பாறை உருகுதல் உலகளவில் கிட்டத்தட்ட 2 பில்லியன் மக்களுக்கு ஒரு முக்கிய வளமாகும் பனிப்பாறைகள் மில்லியன் கணக்கான மக்களுக்கு, குறிப்பாக வறண்ட பகுதிகளில் குடிநீரின் முக்கிய ஆதாரமாக உள்ளன.

இது நீர்வாழ் உணவுச் சங்கிலிகளின் அடித்தளத்தை உருவாக்குகிறது கடலில் பல்லுயிர் மற்றும் மீன்வளத்தைப் பாதுகாக்கிறது. பூமியின் காலநிலையை ஒழுங்குபடுத்துவதில் பங்கு வகிக்கின்றன. பூமியை குளிர்விக்க உதவுகிறது சில நாடுகளில் நீர் மின்சாரத்தை உருவாக்க பனிப்பாறை உருகும் நீர் பயன்படுத்தப்படுகிறது. பனிப்பாறைகள் மலைப்பகுதிகளுக்குச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.

மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.