சிந்தித்தார்கள்! வென்றார்கள்! –23

‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்

ரு இளைஞன், அவரது பெயர் சாந்தனு நாயுடு. புனேயில் உள்ள சாவித்திரி புலே பல்கலையில் பொறியியல் பட்டம் பெற்றவர். விலங்குகள் மீது அதிக அக்கறை கொண்டவர். இரவு நேரங்களில் வாகனங்கள் சாலையில் வேகமாகச் செல்லும் போது, அவற்றின் விளக்கொளியில் திசைமாறி அடிபடும் நாய்களைக் கவனிக்கிறார். அவைகளின் கழுத்தில் ஒளிரக்கூடிய பட்டயங்களைக் கட்டிவிட்டால், அவைகள் குறுக்கிடுவதைக் கண்டு, வாகன ஓட்டிகள் அவற்றின் உயிரைப் பறிக்காமல் விடலாம் என்ற சிந்தனையைச் செய்திகளில் பகிர்ந்து கொள்கின்றனர்.

தெரு நாய்களின் மீது அக்கறையோடு சொல்லப்பட்ட இந்த ஆலோசனை பல்வேறு சமூக வலைத்தளங்களில் பரவலானது. இதனைக் கேட்ட தொழிலதிபர் ரத்தன் டாடா அந்த இளைஞன் சாந்தனு நாயுடுவை அழைத்துப் பாராட்டுகின்றார். இளைஞனின் உயர்கல்வியை கர்னல் பல்கலையில் முடிக்க உதவி செய்கின்றார். தனது டாடா நிறுவனத்திலேயே வேலை கொடுத்து ஊக்கமூட்டுகின்றார்.

இந்தச் சந்திப்பு மூலம் ரத்தன் டாடாவுக்கும், சாந்தனு நாயுடுவுக்கும் இடையில் உள்ளார்ந்த நட்பும் உருவாகின்றது. விலங்குகளுக்கு சிகிச்சை வழங்கும் ஒரு மருத்துவமனை மும்பையில் தனியாக உருவாகுவதற்குக் காரணமாகின்றது. சில சமயங்களில் தன் முதிய வயதின் தனிமையைத் தான் அன்போடு வளர்க்கும் செல்லப் பிராணிகளுடன் செலவிட்டதாகவே ரத்தன் டாடாவும் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். இப்படி வாயில்லாத உயிரினங்கள் மேலும் அதிக அக்கறை கொண்ட ரத்தன் டாடா மனித குலத்துக்கும், குறிப்பாக இந்திய தேசத்துக்கும் செய்த நற்காரியங்கள் அளப்பரியன.

ரத்தன் டாடா

பார்ஸி இனத்தைச் சேர்ந்த ஜாம்ெஜட்ஜியின் குடும்பத்தவர்களுக்கு தொழில் அனுபவம் இல்லை; ஆனால் நிறைய புத்தகங்களைப் படித்த அவருக்கு ஏதாவது புதிதாகத் தொடங்க வேண்டும்; ஆங்கிலேயர்கள் கோலோச்சும் இந்தியாவில் இந்தியர்கள் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் ஓடிக்கொண்டேயிருந்தது.

இந்த எண்ணம் விரிவடைந்த போது 1868-ஆம் ஆண்டு, இருபத்து ஓராயிரம் ரூபாய் முதலீட்டில் ஒரு வர்த்தக நிறுவனத்தை ஆரம்பித்தார் ஜாம்ஜெட்ஜி டாடா. அந்தக் காலத்தில் இந்தத் தொகை பத்துக்கோடி ரூபாய்க்குச் சமம். இந்தியாவில் பொருட்களை வாங்கி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதே அந்தத் தொழில்.

தொழில் இலாபகரமாகத் தொடர்ந்த போது ஒரு பழைய எண்ணெய் ஆலையை வாங்கினார் ஜாம்ஜெட்ஜி டாடா. அதனை நெசவாலையாக மாற்றினார். புதிய ரக ஆடைகளை அக்காலத்தில் உற்பத்தி செய்தது அந்தத் தொழிற்சாலை. அங்கிருந்து கிடைத்த இலாபத்தின் மூலம் ஒன்றன்பின் ஒன்றாகப் பல நிறுவனங்களைத் தொடங்கினார்.

ஜாம்ஜெட்ஜி டாடாவுக்கும் குழந்தைகள் இல்லை என்பதால் தன் மனைவியின் தங்கை மகளுடைய மகனைத் தன் தத்துப்பிள்ளையாக பின்னாளில் எடுத்துக் கொண்டார். அவரது பெயர் நாவல் டாடா. இந்த நாவல் டாடாவுக்கும், சூனு அம்மையாருக்கும் மகனாக 1937 – ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 – ஆம் தேதி பிறந்தவர் தான் ரத்தன் டாடா. ஜிம்மி என்ற தம்பி இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு பிறந்தார். ரத்தன் டாடாவுக்கு ஏழு வயது நடந்த போது தந்தை நாவல் டாடாவுக்கும் தாய்க்கும் தினம் தினம் சண்டை தொடர்ந்தது. ஒரு காலகட்டத்தில் விவாகரத்து செய்து கொண்டு தாய் சென்றுவிட்டார்.

இளம் வயதில் தாயைப் பிரிந்த வேதனை ரத்தன் டாடாவுக்கு அதிகம் இருந்தது. ஆனால் அவரது பாட்டி நவாஜ்பாய் தாயைப் போலக் கவனித்துக் கொண்டார். ஒழுக்கத்திலும், கல்வியிலும் உயர்ந்து விளங்கிடத் தனது பாட்டி நவாஜ்பாய் தான் முக்கியக் காரணம் என்று ரத்தன் டாடா பலமுறை தெரிவித்துள்ளார்.

மும்பையிலுள்ள கேம்பியன், கதீட்ரல் மற்றும் ஜான் கானன் பள்ளிகளில் பள்ளிப் படிப்பை முடித்தார் ரத்தன் டாடா. சிறுவயது முதலே கட்டடக் கலை படிக்க ஆர்வம் கொண்டிருந்தார் ரத்தன் டாடா. ஆனால் அவர் இயந்திரவியல் துறையில் படிக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்தார் தந்தை நாவல் டாடா. ஆரம்ப நாட்கள் முதலே தந்தைக்கும், மகனுக்கும் சில முரண்பாடுகள் இருந்தன. ரத்தன் டாடா கிட்டார் வாசிக்கப் பழக விரும்பிய போது, பியானோ வாசிக்கப் பழகு என்று மாற்றிவிட்டார் தந்தை நாவல் டாடா. இப்படித் தன் விருப்பங்களைத் தந்தை மதிக்கவில்லையே என்ற வருத்தமும் ரத்தனுக்கு இருந்தது.

வேறு வழியின்றி தந்தை விருப்பப்படி அமெரிக்காவில் உள்ள கர்னெல் பல்கலையில் இயந்திரப் பொறியியலில் சேர்ந்தார். அவரால் இரண்டு ஆண்டுக்கு மேல் அந்தத் துறையில் படிக்க விருப்பமேயில்லை என்று தன் பாட்டிக்கு எடுத்துரைத்தார். அதன் பிறகு பாட்டியின் சிபாரிசு கிடைத்ததால் கட்டடக் கலை பயிலச் சென்றார். பொறியியல் படிப்பு முடித்ததும் ஹார்வர்டு பல்கலையில் வணிக மேலாண்மைப் படிப்பை முடித்தார்.

மும்பையில் தினமும் ரோல்ஸ் ராய் காரில் சென்று பள்ளியில் படித்த பணக்கார வீட்டுப் பிள்ளையாக இருந்தார் ரத்தன் டாடா. உண்மையில் அவருக்கு இந்த ஆடம்பரம் பிடிக்கவில்லை. அமெரிக்காவில் அக்காலத்தில் கல்வி பயிலச் சென்றாலும் அதிகப் பணம் எடுத்துச் செல்ல முடியாது. எனவே பகுதிநேர வேலை பார்த்துத் தான் தாங்கள் விரும்பியதைப் பெற்றுக் கொள்ளலாம். எனவே, ரத்தன் டாடா மாலை நேரத்தில் ஓட்டல்களில் பகுதிநேர வேலை செய்து சம்பாதித்தார். தன் சொந்தப் பணத்தில் தான் விரும்பிய புத்தகங்கள், உடைகள், உணவுகளைப் பெற்றுக் கொண்டதை ஒரு ஆனந்த அனுபவமாகக் குறிப்பிடுகிறார் ரத்தன் டாடா.

ஹார்வர்டு பல்கலையில் மேலாண்மைப் படிப்புப் படித்த அவருக்கு ஐ.பி.எம். நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. இந்தச் ெசய்தியை அறிந்த நாவல் டாடா, தன் மகனை இந்தியாவின் டாடா குழுமத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார். இந்த நிலையில் அவரது பாட்டியின் உடல்நலம் குன்றியதால் இந்தியாவுக்கு வந்தார் ரத்தன் டாடா. அப்போது டாடா நிறுவனத்தின் தலைவராக இருந்த ஜே.ஆர்.டி. டாடா, ரத்தன் டாடாவை அழைத்து வேலைக்கு விண்ணப்பிக்குமாறு சென்னார்.

டாடா நிறுவனத்தில் ரத்தன்

டாடா குடும்பத்தில் யார் வேலைக்குச் சேர்ந்தாலும் உடனே பெரிய பதவியைத் தரமாட்டார்கள். சிறிய, எளிய வேலையில் இருந்து தான் அவர்கள் வேலையைத் தொடங்குவது மரபு. எனவே ரத்தனுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பயிற்சி நிலை ஊழியராகப் பணியைக் கொடுத்தார் ஜே.ஆர்.டி. டாடா. அடிமட்டத் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்து தொழிலாளிகளோடு தொழிலாளியாக உழைத்தார். அந்த வேலை கடுமையானது. அப்போதுதான் தொழிலாளர்களின் உண்மையான நிலையையும், டாடா நிறுவன ஊழியர்களின் மனநிலையையும் புரிந்துகொள்ளும் வாய்ப்பினைப் பெற்றார். அதே சமயம் ஜே.ஆர்.டி. டாடா இவரைச் சத்தமில்லாமல் கண்காணித்து வந்தார்.

சில ஆண்டுகளுக்குப் பின்பு மிகவும் நொடித்துப்போன நிலையில் இருந்த நெல்கோ (NELCO : The National Radio and Electronics Company Limited) என்ற நிறுவனத்துக்கு இயக்குனராக நியமித்தார். இங்கிலாந்து நாட்டின் எக்கோ (EKCO) நிறுவனத்துடன் இணைந்த தொழில்நுட்பம் கொண்டு வானொலிகளைத் (Radio) தயாரித்து விற்றார்கள். ஆனால் 1960-களில் சிறிய அளவிலான டிரான்ஸிஸ்டர்கள் வந்த போது ரேடியோக்கள் விற்பனை பின்தங்கியது. டாடா நிறுவனம் டிரான்ஸிஸ்டர்கள் நிலைக்காது என்று எண்ணியது. ஆனால் அசுர வேகத்தில் தொழில்நுட்பம் மாறுவதை ரத்தன் டாடா புரிந்துகொண்டார். எனவே நட்டத்தில் சென்ற நெல்கோவுக்கு உயிர் கொடுத்தார். அதாவது ரேடியோ உற்பத்தியை நிறுத்திவிட்டு செயற்கைக்கோள் ஒலிபரப்பு செய்யும் தொழில்நுட்பத்தைக் கையில் எடுத்தார். நெல்கோ ஓரளவு இலாபம் பெற்று நிமிர்ந்து நின்றது.