சிந்தித்தார்கள்! வென்றார்கள்! –21

‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்

ட்கார்ந்து இருப்பது என்பது ஒரு சாதாரண நிகழ்வு. ஆனால் தான் பயணம் செய்த பேருந்தின் இருக்கையில் பிடிவாதமாக உட்கார்ந்து இருந்ததன் மூலம் உலகின் பார்வையைத் திருப்பினார் ஒரு சாதாரண பெண்மணி. இந்தச் செயலைச் செய்ததன் வாயிலாக, விளைவாக ஒட்டுமொத்த அமெரிக்காவின் கறுப்பர் இன மக்களுக்குப் பேருந்தில் உட்கார்ந்து பயணிக்கும் உரிமை பெற்றுக் கொடுத்தார் அந்த அம்மையார்.

இவரைப் பற்றி எழுதுகின்ற போது சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர். மாடசாமி ஐயா அவர்கள் தன் கட்டுரையில் ஒருவர் கூறிய வார்த்தைகளை இவ்வாறு பகிர்ந்து கொள்கிறார்.

‘‘சிலர் வசீகரமான தோற்றம், வீறுகொண்டு எழுவது, சாகசங்கள் செய்து சட்டென்று குறிக்கோளை அடைவது என்று கதாநாயகர்களாக வலம் வருகின்றார்கள். ஆனால் மிகச் சாதாரண ஒரு செயலைச் செய்ததன் மூலம் வரலாற்றில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கிவிட்டு, அமைதியாகச் சென்றுவிடுகின்றார், இந்த அதிசயப் பெண்மணி’’ என்று புகழ்கின்றார்.

ஆம், இந்த அபூர்வ, அதிசயப் பெண்மணியின் பெயர் ரோசா பார்க்ஸ். ஆப்பிரிக்க-அமெரிக்க மக்களுக்கு, அன்று கறுப்பர்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்கு பேருந்தில் அமர்ந்து பயணம் செய்ய உரிமை பெற்றுத் தந்தவர்.

இவர் 24.10.2005 அன்று தனது 92ஆம் வயதில் இறந்த போது, அமெரிக்காவின் ஜனாதிபதிகளுக்குத் தரப்படும் இறுதி மரியாதையைச் செலுத்திக் கௌரவம் செய்ய வைத்தார் அன்றைய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ். ‘‘எழுச்சி மிக்க இருபதாம் நூற்றாண்டுப் பெண்’’ என்றும் புகழ்ந்தார் ஜார்ஜ் புஷ்.
‘‘அவர் அன்று உட்கார்ந்து இருந்ததால் நாம் இன்று நிமிர்ந்து நிற்கிறோம்’’ என்று எழுதிப் புகழ்ந்தார் மனித உரிமை ஆர்வலர் ஜெஸ்ஸி ஜாக்சன். இந்தப் புகழ்மிக்க பெண்மணி பற்றியும், அவரது போராட்டக் களத்தின் சுவடுகள் பற்றியும் அறிவது உத்வேகமான ஒன்று தானே!

ரோசா பார்க்ஸ்

1913 – ஆம் ஆண்டு பிப்ரவரி 4 – ஆம் தேதி அலபாமாவின் டஸ்கீயில் ரோசா லூயிஸ் பிறந்தார். தந்தை தச்சராகவும், கட்டடக் கலைஞராகவும் இருந்ததால் பல ஊர்களுக்குப் பயணித்தார். தாய் லியானோ ஒரு ஆசிரியர். கணவரோடு ஊர் ஊராகச் சென்றால் பிள்ளைகளின் கல்வி வாழ்க்கை பாதிக்கப்படும் என்று அலபாமாவின் பைன் லெவல் என்று கிராமத்தில் தன் தாய், தந்தை வீட்டில் இருந்து குழந்தைகளை வளர்த்தார்.

ஸ்பிரிங் ஹில் என்ற இடத்தில் ஆசிரியப் பணி செய்த ரோசாவின் அம்மா பள்ளி நாட்களில் அங்கே தங்கிவிடுவார். ரோசாவும், அவர் தம்பியும் தினமும் பதினாறு மைல் தூரம் நடந்து சென்று பள்ளியில் படித்தார்கள்.

அக்காலத்தில் கறுப்பின மக்கள் பயிலும் பள்ளிகள் எல்லாம் ஓட்டுக் கொட்டகைகள். பல இடங்களில் அவை மோசமாகப் பராமரிக்கப்பட்டதால், பாதுகாப்புக் கருதி பிள்ளைகள் மரத்தடியில் அமர்ந்துதான் படித்தார்கள்.

நேரெதிராக வெள்ளைக்காரப் பிள்ளைகளின் பள்ளிகள் உயர்ந்த கட்டடங்கள், விலையுயர்ந்த ஜன்னல்கள், உயர்ந்த ரக இருக்கைகள் கொண்டதாக இருந்தது.