ஊடகம் பழகு 18

திரு.மனோஜ் சித்தார்த்தன்
‘‘காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான். இந்தப் பாரிடை துயில்வோர் கண்ணில் பாய்ந்திடும் எழுச்சி நீதான்” என ஊடகங்களின் முக்கியத்துவம், மற்றும் சிறப்புகள் குறித்துப் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் விளக்கி இருக்கின்றார். இந்த அளவிற்கு ஊடகங்கள் என்பது மிக அவசியமானது. இக்காலம் மட்டுமல்ல இந்த உலகம் தோன்றியதிலிருந்து ஆரம்பித்து,பரிமாண வளர்ச்சி அடைந்தவரையில் தகவல் பரிமாற்றம் என்பது மிக முக்கியமானதாக இருந்துள்ளது.
அதன்படி மனிதனின் பரிணாம வளர்ச்சி என்பது குரங்கு போன்ற மூதாதையரிடமிருந்து மனிதன் படிப்படியாக வளர்ந்து வந்து ஒரு நீண்ட செயல்முறையாகும். மனிதனின் பரிணாம வளர்ச்சியில் மிக முக்கிய காரணியாக பார்க்கப்படுவது மற்றவர்களைப் பற்றியும் அவர்களது செயல்களை பற்றியும் அறிந்து கொள்வதில் ஆர்வம் உடையவனாய் இருந்திருக்கிறான். முதலில் செய்கையின் மூலமாகவும், மொழி வளர்ந்த பின்னர் பேச்சின் துணையோடும் தகவல்களை அறிந்தும் பரப்பியும் வந்திருக்கின்றான். அந்த அளவிற்கு தகவல் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டிருக்கின்றது.
இக்காலம் மட்டுமல்ல மன்னர் ஆட்சி காலத்தில் கூட தகவலுக்கென தனி மவுசு இருந்திருக்கின்றது.அக்காலத்தில் அரசர்கள் மக்கள் தகவல் பெறுவதற்கான உரிமையினை அங்கீகரித்திருக்கிறார்கள். அதற்காகவே தான் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த அளவிற்கு தகவல் என்பது மனிதனின் வாழ்வில் மிக முக்கிய ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது. அந்த தகவல்களை சரியான நேரத்தில் சரியான முறையில் மக்களுக்குத் தெரியப்படுத்துவதில் ஊடகங்களின் பணி மிக முக்கியமானது.
அரசியியல் அடுத்து என்ன என்ன, சினிமா அடுத்த கட்டத்துக்கு எவ்வாறு நகருகிறது, இந்த நடிகருக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது துவங்கி பெட்ரோல், டீசல் விலை, தங்க விலை, வானிலை நிலவரங்கள், கன்னியாகுமரி முதல் கலிபோர்னியா வரை உலகத்தில் நடக்கும் தினசரி நிகழ்வுகள் போன்றவை குறித்து எளிய மக்களும் விவாதிக்கிறார்கள் என்றால் இதற்கு முழுமுதற் காரணம் ஊடகங்களே.தொழில்நுட்ப வளர்ச்சியால் சமூகத்தில் பல பிரச்சினைகள் நடந்து வருகிறது. அதையெல்லாம் எதிர்கொண்டு, பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகங்களுக்கு இணை வேறு ஏதும் இல்லை.