கற்றல் எளிது – 19

திரு.நன்மாறன் திருநாவுக்கரசு
நாம் எல்லோருக்கும் நன்றாகப் படிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால் ஆசை மட்டும் போதுமா? இல்லை. படிப்பதற்கு உத்வேகம் வேண்டும் இல்லையா? உத்வேகம் இல்லாமல் ஆசை மட்டும் இருந்து என்ன செய்வது? உத்வேகம் இருந்தால்தான் நமக்கு முயற்சிக்கத் தோன்றும். உத்வேகம் இருந்தால்தான் நம்மால் நீடித்து ஒரு செயலைச் செய்ய முடியும்.
உத்வேகம் இருந்தால்தான் நம்மால் எந்த ஒரு காரியத்திலும் வெற்றி பெற முடியும். ஆனால் இந்த உத்வேகத்தை எப்படிப் பெறுவது? அதைத்தான் இந்த அத்தியாயத்தில் பார்க்கப்போகிறோம்.
உத்வேகம் என்பது நமக்கு உள்ளேயே இருப்பது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று உத்வேகம் இருக்கும். சிலருக்குப் படிப்பதில் உத்வேகம் இருக்கும்.
சிலருக்கு விளையாட்டில் உத்வேகம் இருக்கும். சிலருக்கு இசையில் இருக்கும். சிலருக்கு நடனத்தில் உத்வேகம் இருக்கும். இப்படி உத்வேகம் என்பது நமக்காக வருகிறது எனும்போது உத்வேகத்தை வெளியில் இருந்து பெற முடியுமா? ‘முடியும்’ என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதற்கு நாம் மூளையில் சுரக்கும் ஒருவகை ரசாயனம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பெயர் டோபோமைன்.
டோபமைன் என்பது மூளையில் சுரக்கும் ரசாயனம். நாம் உயிர் வாழத் தகுதியான விஷயங்களைச் செய்யும்போது இந்த ரசாயனம் சுரக்கும்படி நம் உடல் அமைந்திருக்கிறது. உதாரணமாக நாம் சாப்பிடும்போது இந்த ரசாயனம் சுரக்கும். காரணம் உணவு என்பது நாம் உயிர் வாழ அவசியம். அதேபோல விளையாடும்போது நம் உடலில் இந்த ரசாயனம் சுரக்கும். காரணம் விளையாட்டு நம் உடலை வலுப்படுத்தி நம்மை உயிர் வாழ வைக்கிறது.
அதேசமயம் நல்ல விஷயங்களுக்கு மட்டுமல்ல, சில கெட்ட விஷயங்களிலும் இந்த ரசாயனம் சுரக்குகிறது. உதாரணமாக நாம் அதிகம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும்போது, சமூக வலைதளங்களில் தொடர்ந்து ரீல்ஸ் பார்க்கும்போது இந்த ரசாயனம் சுரக்கிறது. காரணம், இவை நாம் உயிர்வாழ அவை உதவுகிறது என நம் மூளை நம்புகிறது.
சரி, அது இருக்கட்டும். இந்த டோபோமைனுக்கும் நாம் படிப்பதில் உத்வேகம் பெறுவதற்கும் என்ன சம்மந்தம்?
இருக்கிறது.