கற்றல் எளிது -16


திரு.நன்மாறன் திருநாவுக்கரசு

ற்றல் திறனை வளர்க்க அடுத்து நாம் செய்ய வேண்டியது, கண்காணிப்பு. யாரை என்று யோசிக்கிறீர்களா? உங்களைத் தான். ஆம் உங்களை நீங்களே கண்காணிக்கப்போகிறீர்கள். நீங்கள் எப்படிப் படிக்கிறீர்கள், படிக்கும்போது என்னவெல்லாம் செய்கிறீர்கள்? நீங்கள் எந்த இடத்தில் படிக்கிறீர்கள்? நீங்கள் படிக்கும்போது எந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்குத் தொந்தரவாக இருக்கிறது? இப்படிப் பலவற்றைக் கண்காணித்து உங்கள் கற்கும் திறனை மேம்படுத்தப் போகிறோம். உங்களை நீங்களே பரிசோதனை செய்யப்போகிறீர்கள். என்ன தயாரா?

முதலில் செய்ய வேண்டியது

பொதுவாக நாம் பகல் வேளையில் எல்லாவற்றையும் செய்வோம். இரவானவுடன் சிறிது நேரம் போன் பார்த்துவிட்டு தூங்கிவிடுவோம். இதுதான் வாடிக்கை. ஆனால் இரவு தூங்கும்முன் கட்டாயம் ஒன்றைச் செய்ய வேண்டும் என்கின்றனர் கற்றல் நிபுணர்கள். தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

அதில், அந்த நாளில் நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்று சிறிதாக ஒரு குறிப்பை எழுதுங்கள். நீங்கள் அன்றைக்குப் படித்த பாடம் என்ன? அந்தப் பாடம் உங்களுக்கு புரிந்ததா? அந்தப் பாடத்தில் எந்தப் பகுதி புரிந்தது, எந்தப் பகுதி புரியவில்லை? புரியாததற்கு காரணம் என்ன? பாடம் கடினமாக இருந்ததா? அல்லது வேறு எதுவும் இடையூறுகளா? அந்தப் பாடத்தைச் சிறப்பாகப் பயில என்ன செய்ய வேண்டும்? யாரிடமாவது விளக்கம் கேட்க வேண்டுமா?

நீங்கள் படித்தது மறுநாள் காலையில் நினைவில் இருக்குமா? நீங்கள் இரவு சரியான நேரத்திற்கு தூங்குபவரா? அல்லது தாமதமாகத் தூங்குபவரா? தாமதமாகத் தூங்குபவர் என்றால் உங்களால் படித்த பாடத்தை மறுநாள் நினைவு வைத்துக்கொள்ள முடிகிறதா? இவ்வாறு உங்களைக் குறித்தும், நீங்கள் கற்கும் பாடம், கற்கும் விதம் குறித்தும் குறிப்பெடுங்கள். நீங்கள் எழுதும் பதில் உண்மையாக இருக்க வேண்டும். உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வதற்காக இதைச் செய்யவில்லை.

இதை ஏன் செய்கிறோம்? நாம் இதுபோல குறிப்பெடுக்கும்போது நம் கற்றல் முறை குறித்து ஒரு தெளிவு கிடைக்கும். நீங்கள் சீக்கிரமாகப் படுக்கச் செல்வதால் உங்களுக்கு ஞாபக சக்தி கூடுகிறதா? நீங்கள் உடற்பயிற்சி செய்த நாளில் உங்களால் சிறப்பாகப் படிக்க முடிகிறதா?

இப்படி உங்களுக்கு எது சிறப்பாக வருகிறது என்று உங்களை நீங்களே பரிசோதித்து அறிகிறீர்கள். அதை அறிந்தவுடன் அதற்கு ஏற்றாற் போல நாம் படிக்கும் முறையை மாற்ற வேண்டும்.
நாம் படுக்கைக்கு செல்லும் முன் மறுநாள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பட்டியல் போட்டுவிட்டு தூங்கச் சென்றால் நமக்கு நன்றாகத் தூக்கம் வரும் என ஆய்வுகள் கூறுகின்றன.

காரணம், நாம் சிந்திக்கும்போது தற்காலிக நினைவாற்றல்தான் வேலை செய்யும் என்று பார்த்தோம் இல்லையா? நாம் என்ன செய்ய வேண்டும் என்ற தகவல்கள் எல்லாம் தற்காலிய நினைவாற்றலில்தான் இருக்கும். அந்தத் தகவல்களை நாம் ஒரு நோட்டில் எழுதி வைத்துவிட்டால், இப்போது நம் தற்காலிக நினைவாற்றல் காலியாகிவிடுகிறது. இதனால் நம் மூளைக்கு ஓய்வு கிடைக்கிறது. அதனால் தூக்கமும் நன்றாக வருகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

அதேபோல உங்கள் கற்றல் திறனை மேம்படுத்த வேறு சிலவற்றையும் முயற்சி செய்யலாம்.

1) வெவ்வேறு இடங்களில் அமர்ந்து படியுங்கள்

நாம் என்ன கற்கிறோம் என்பதைப் போல, எங்கே அமர்ந்து கற்கிறோம் என்பதும் முக்கியம். நாம் கற்கும் இடம், சூழல் ஆகியவை நாம் கற்கும் விதத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. நீங்கள் வழக்கமாக எங்கே அமர்ந்து படிப்பீர்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்? நீங்கள் படுக்கை அறையில் படிப்பீர்களா? ஹாலில் படிப்பீர்களா? தனி அறையில் அமர்ந்து படிப்பீர்களா? நூலகத்தில் படிப்பீர்களா? இயற்கையுடன் இயைந்து மர நிழலில் படிப்பீர்களா? நன்றாக யோசித்துப் பாருங்கள். இப்போது நீங்கள் படிக்கும் இடத்தை மாற்றுங்கள். நீங்கள் மரத்தடியில் படிப்பவர் என்றால் வீட்டிற்குள் உட்கார்ந்து படியுங்கள். ஹாலில் படிப்பவர் என்றால் மாடிக்குச் சென்று படியுங்கள். மாடியில் படிப்பவர் என்றால் நூலகத்திற்கு சென்று படியுங்கள். வகுப்பறையில் படித்துப் பாருங்கள். இப்படி மாற்றி மாற்றி படிப்பது நம்மால் சிறப்பாக படிக்க உதவும். ஏன் தெரியுமா?

இதற்கு காரணம் நமது தற்காலிக நினைவாற்றல் தான். ஏற்கனவே நாம் பார்த்தோம் இல்லையா? நாம் குறிப்பிட்ட நேரத்தில் என்ன வேலை செய்கிறோமோ அதுகுறித்த தகவல்களை நமது தற்காலிக நினைவாற்றல் நினைவில் வைத்திருக்கும். நாம் படிக்கும்போது இந்தத் தற்காலிகநினைவாற்றல் நாம் படிக்கும் பாடத்தை, அதில் வரும் தகவல்கலை மட்டும் நினைவில் வைத்திருக்காது. அத்துடன் சேர்ந்து நாம் இருக்கும் சூழல் குறித்த தகவல்களையும் நினைவில் ஏற்றிக்கொள்ளும். நீங்கள் எப்போதும் மாடியில் உட்கார்ந்து கணிதப் பாடம் படிப்பீர்கள் என்றால், மாடியில் உள்ள சூழலையும் உங்கள் தற்காலிக நினைவாற்றல் உள்வாங்கிக்கொள்ளும்.

மாடியின் தோற்றம், மாடியில் நீங்கள் அமரும் இடம், அங்கே பூச்செடிகள் இருந்தால் அதன் மணம், மாடியில் பறவைகள் கத்தும் சத்தம், இதுபோன்று நீங்கள் அந்தச் சூழலில் என்னவெல்லாம் உணர்கிறீர்களோ அனைத்தையும் உள்வாங்கிக்கொள்ளும். இவையெல்லாம் மூளை இணைப்புகளாக உங்கள் நீண்ட கால நினைவாற்றலில் பதியும்போது, கணிதப் பாடத்துடன் சேர்த்து இந்தச் சூழல் சார்ந்த உணர்வுகளும் மூளை இணைப்பில் இருக்கும். நீங்கள் கணிதப் பாடம் குறித்த மூளை இணைப்பைப் பயன்படுத்தும்போது, உங்கள் வீட்டு மாடிகுறித்த சூழலும் உங்கள் நினைவுகளுடன் சேர்ந்தே இருக்கும்.

இதனால் ஒரு சிக்கல் இருக்கிறது. இப்போது நீங்கள் கணிதத் தேர்வு எழுதப் போகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். கணித தேர்வு மாடியில் நடக்காது அல்லவா? வகுப்பறையில் உட்கார்ந்து தான் தேர்வு எழுத வேண்டும். நீங்கள் வகுப்பறையில் உட்கார்ந்து கணிதப் பாடத்தை நினைவுப்படுத்தினால் உடனே வராது. காரணம் நீங்கள் எப்போதும் அமரும் சூழல் அங்கு இல்லை. உங்கள் மாடியின் தோற்றம், வாசம், சத்தம் எதுவும் அங்கு இல்லை. இதனால் அந்த கணிதம் சார்ந்த மூளை இணைப்பை உங்கள் தற்காலிக நினைவாற்றல் உடனே கொண்டு வராது. தடுமாறும். அதனால் தேர்வில் நீங்கள் படித்தது நினைவுக்கு வராமல் இருந்துவிட வாய்ப்புண்டு.

இப்போது தேர்வை முடித்துவிட்டு வேகமாக வீட்டிற்கு ஓடுகிறீர்கள். மாடியில் போய் அமர்ந்து வினாத்தாளை எடுத்துப் பார்க்கிறீர்கள். தானாகவே உங்களுக்கு எல்லாக் கேள்விகளுக்கும் விடை தோன்றத் தொடங்கும். காரணம் இது தான் நீங்கள் வழக்கமாகக் கணக்குப் பாடம் படிக்கும் இடம். இந்த இடம் உங்கள் கணக்குப் பாடம் சார்ந்த தகவல்களுடன் மூளையில் கலந்திருப்பதால் அந்தச் சூழலை நீங்கள் உணரத் தொடங்கியவுடனேயே அதுகுறித்த தகவல்கள் உங்கள் மூளைக்குத் தானாக வந்துவிடும். இது தான் விஷயம்.

நீங்களே முயற்சி செய்து பாருங்கள். வழக்கமாக ஒரு இடத்தில் அமர்ந்து ஒருகுறிப்பிட்ட பாடத்தை மட்டும் படியுங்கள். பிறகு அந்த இடத்திற்கு நீங்கள் சென்றாலே உங்களுக்கு அந்தப் பாடம் குறித்த தகவல்கள்கள் மூளையில் தானாக நினைவுக்கு வரும்.

இதனால் நாம் ஒரே இடத்தில் அமர்ந்து பாடங்களைப் படிப்பதைத் தவிர்க்க வேண்டும். வெவ்வேறு இடங்களில் அமர்ந்து பாடங்களைப் படிக்க வேண்டும். வெவ்வேறு சூழலை நீங்கள் படிக்கும் பாடத்துடன் உங்கள் மூளையில் சேகரிக்கும்போது, உங்கள் தற்காலிக நினைவாற்றல் வெவ்வேறு இடத்தின் சூழலை உங்கள் நீண்டகால நினைவாற்றலில் தகவல்களுடன் சேகரித்து வைத்திருக்கும். அதனால் நீங்கள் எங்கு உட்கார்ந்து பாடத்தை நினைவுக்கூற நினைத்தாலும் அந்தப் பாடம் எளிதாக உங்களுக்கு நினைவுக்கு வந்துவிடும்.

நீங்கள் எந்தப் பாடம் படித்தாலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் அமர்ந்து படியுங்கள். திங்கள் கிழமை வீட்டு வாசலில், செவ்வாய் அன்று மரத்தடியில், புதன் கிழமை வகுப்பறையில் என்று படியுங்கள். நீங்கள் வழக்கமாகப் படிக்கும் அறையில் கூட வெவ்வேறு இடத்தில் அமர்ந்து படியுங்கள். ஒரு இடத்தின் சூழலை எந்த அளவுக்கு மாற்றிக்கொண்டே இருக்கிறீர்களோ, அந்த ஒவ்வொரு மாற்றமும் உங்கள் கற்றலைச் சிறப்பானதாக்கும். உங்கள் தற்காலிக நினைவாற்றலை அனைத்து இடத்திற்கும் பழக்கப்படுத்துங்கள். பிறகு நீங்கள் படிப்பது மறக்கவே மறக்காது.

2) ஒலியும், ஒளியும், உணர்வும்

நாம் ஒவ்வொருவரும் கற்கும் தகவல்களை வெவ்வேறு வகையில் உள்வாங்குவோம். அதாவது கற்றலை ஒளி, ஒலி மற்றும் தொடு உணர் கற்றல் என மூன்றாகப் பிரிக்கலாம். சிலருக்குப் பாடத்தை ஒலி வடிவில் கேட்கும்போது சிறப்பாக உள்வாங்க முடியும், சிலருக்குப் படம் வரைந்தோ அல்லது வீடியோவில் விளக்கினால் தான் புரியும்.

சிலருக்குத் தொட்டு உணர்ந்தால் மட்டுமே புரிந்துக்கொள்ள முடியும். ஆனால் நாம் ஏதாவது ஒரு முறையிலே தொடர்ந்து கற்பது நமது கற்றல் திறனில் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வுகள் கூறுகின்றன.
மனிதர்களாகிய நாம் கேட்கும், பார்க்கும், தொட்டு உணரும் திறன் என மூன்றையும் பெற்றிருக்கிறோம். அதனால் நாம் ஒரே வகையில் கற்பது பிற திறன்களில் குறைபாட்டை ஏற்படுத்தத் தொடங்கும்.

நீங்கள் காகிதப் புத்தகத்தைப் பார்த்துப் படிப்பதை தவிர்த்துவிட்டு ஒலி புத்தகத்திலேயே (Audio Books) படிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களால் பரீட்சையில் அமர்ந்து எழுதும்போது விரைவாகச் சிந்திக்க முடியாது. ஏனென்றால் எழுதுதல் என்பது புத்தகம் சார்ந்த கற்றல் முறையைச் சார்ந்தது. அதனால் நாம் அனைத்து திறனையும் பயன்படுத்திக் கற்க வேண்டும் என ஆய்வுகள் கூறுகின்றன.
நம் மூளை ஒலி, ஒளி மற்றும் தொடு உணர் திறன் மூன்றையும் பயன்படுத்தித் தான் இந்த உலகைப் புரிந்துகொள்கிறது. இதையே நாம் கற்கும் முறையிலும் பயன்படுத்தினால் நம் மூளை சிறப்பாகப் பதிவு செய்துக்கொள்ளும். இவற்றை ஆங்கிலத்தில் Multisensory Learning என்று கூறுகிறார்கள். இதுவே மிகவும் சிறப்பு வாய்ந்த கற்றல் முறையாகும்.

3) தூக்கம் அவசியம்

நாம் தூக்கத்தின் அவசியம் குறித்து ஏற்கனவே பார்த்தோம். தூக்கம் நம் மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று. நீங்கள் போதுமான அளவு தூங்குவீர்களா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். இரவு 3 – மணிக்கு படுத்துவிட்டு மறுநாள் நண்பகல் 12 – மணிக்கு எழுந்து, நான் 9 – மணி நேரம் தூங்கிவிட்டேன் என்றெல்லாம் சொல்லக்கூடாது. சரியான தூக்கம் என்பது இரவு விரைவாகப் படுத்துவிட்டு அதிகாலையில் எழுவது. நமது உயிரியல் கடிகாரம் அவ்வாறு தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் நாம் விழித்துக்கொண்டே இருப்பது நம் முளையில் சில நச்சுப் பொருட்களை உற்பத்தி செய்கிறது.

நாம் சரியாகத் தூங்காமல் விழித்திருக்கும்போது நம் மூளையில் நச்சுப் பொருட்கள் சுரக்கத் தொடங்குகிறது. நாம் எவ்வளவு நேரம் விழித்திருக்கிறோமோ அந்த அளவுக்கு அதிக அளவில் நச்சுப் பொருட்கள் சுரக்கும். ஆனால் நாம் தூங்கியவுடன் நம் மூளையில் உள்ள செல்கள் அனைத்தும் சுருங்கிவிடும். அப்போது மூளையில் உருவாகியிருந்த நச்சுப் பொருட்கள் எல்லாம் மூளையில் சுரக்கும் ஒருவகைத் திரவத்துடன் (cerebrospinal fluid) அடித்துக்கொண்டு வெளியேறிவிடும். நீங்கள் காலையில் எழும்போது உங்கள் மூளையில் உற்பத்தியான நச்சுப் பொருட்கள் அனைத்தும் வெளியேறி மூளை சுத்தமாகிவிடும்.

மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.