கற்றல் எளிது -18


திரு.நன்மாறன் திருநாவுக்கரசு

ந்த அத்தியாயத்தை வாசிக்கும் முன் ஒரு வேண்டுகோள். இதற்கு முன் உள்ள அத்தியாயங்களை முடிந்தால் வாசித்துவிட்டு இதை வாசித்தீர்கள் என்றால் உங்களுக்கு நல்ல பலன் கிைடக்கும். பரீட்சை எழுதுவது அவசியமான ஒன்றுதான். ஆனால் நமது திறனை வளர்க்காமல் பரீட்சைக்கு மட்டும் படிப்பதனால் பயன் கிடையாது.

சரி விஷயத்திற்கு வருவோம். தேர்வு. நாம் எல்லோரும் அஞ்சும் ஒரு விஷயம். இப்போதுதான் பள்ளி திறந்திருக்கிறது. அதற்குள் தேர்வா என்று யோசிக்க வேண்டாம். இந்தப் பகுதி உங்கள் இறுதித் தேர்வுக்கு இப்போதே உங்களைத் தயார்படுத்தப்போகிறது.

தேர்வு மட்டும் ஒரு மாணவனின் திறமையை நிர்ணயிக்கப்போவதில்லை. தேர்வு எழுதுவதற்காக மட்டும் நாம் கற்பதில்லை. இந்த உலகத்தைத் புரிந்துகொள்ள வேண்டும் என்றே நாம் கற்கிறோம். ஆனாலும் நாம் ஒரு விஷயத்தைச் சிறப்பாக கற்றிருக்கிறோமா என்பதை அளவிடுவதற்கு தேர்வு முக்கியமானதாக இருக்கிறது.

ஆனால் அத்தனை வருடங்கள் கற்ற விஷயங்களை 3 மணி நேரத்தில் நடைபெறும் தேர்வின் மூலம் அளவிட முடியுமா? முடியாதுதான். ஆனால் பள்ளியில் இருந்து கல்லூரிக்குச் செல்ல, கல்லூரியில் இருந்து வேலைக்குச் செல்ல நாம் தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டியதாக இருக்கிறது. தேர்வு என்றாலே நம்மில் பலருக்குப் பயம் வந்துவிடும். பரீட்சை ஹாலுக்குப் போனாலே பாதி விஷயங்கள் மறந்துவிடும். இப்படி இருக்கும்போது ஒரு மாணவனால் தேர்வை ஜாலியாக எழுத முடியுமா? டென்சன் இல்லாமல் எந்தப் பாடமாக இருந்தாலும் நல்ல மதிப்பெண்கள் எடுக்க முடியுமா? முடியும்.

தேர்வின் அவசியம்

தேர்வும் நம் கற்றலில் ஒரு பகுதி தான் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது நாம் ஒரு மணி நேரம் உட்கார்ந்து படிப்பதற்குப் பதில் அரைமணி நேரம் தேர்வு எழுதுவதில் அதிகம் கற்றுக்கொள்ளலாம் எனக் கூறுகிறது. தேர்வின் போது நான் நாம் நினைவாற்றலைப் புத்தகம் இல்லாமல் பயன்படுத்துகிறோம். சாதாரணமாகப் படிக்கும்போது நாம் அவ்வாறு செய்வதில்லை. நினைவுப்படுத்துதலின் முக்கியத்துவத்தைப் பற்றி நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம் அல்லவா? நம் நீண்ட கால நினைவாற்றலில் உள்ள மூளை இணைப்புகளை வெளியே இழுத்து அதனை நினைவுப்படுத்துகிறோம். இதனால் நாம் கற்கும் திறன் வலுவடைகிறது. அதனால் நமக்கு நினைவாற்றலைப் பயன்படுத்தும் வகையில் அமையும் தேர்வும் அவசியம் தான்.

சரி தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்றால் நாம் தேர்வுக்கு முன் என்ன செய்ய வேண்டும், தேர்வின் போது என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

முதலில் தேர்வுக்கு முன் நாம் என்ன செய்ய வேண்டும்? வெறும் புத்தகத்தை மட்டும் படித்துவிட்டுச் சென்று தேர்வு ஹாலுக்கு சென்றால் போதுமா? கூடாது. கல்வி ஆய்வாளர் பெட்லர் என்பவர், மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒரு பட்டியலை வழங்குகிறார். அதை ஒரு கேள்வி வடிவில் வழங்குகிறார். இதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மாணவர்கள் உண்மையான பதிலை அளிக்க முயற்சி செய்ய வேண்டும்.

‘தேர்வுக்கு முன் இன்னொரு தேர்வா?’’ என்று பயப்பட வேண்டாம். இந்தக் கேள்விகளுக்கு ஆம், இல்லை என்று இரண்டே பதில்தான். இப்போது கீழே உள்ள கேள்விகளுக்கு ஆம், இல்லை என்று உண்மையான பதிலைக் கூறுங்கள்.

1. தேர்வுக்கு முந்தைய இரவு நீங்கள் நன்றாகத் தூங்கினீர்களா?

(இல்லை என்பது உங்களது பதிலாக இருந்தால் அடுத்து வரும் கேள்விகளுக்கு நீங்கள் விடையளித்தும் பயனில்லை. தேர்வுக்கு முன் தூங்குவது மிகவும் அவசியம்)

2. நீங்கள் வகுப்பில் எடுத்த குறிப்புகளை அவ்வபோது பார்ப்பீர்களா?

அப்படிப் பார்க்கும்போது அதில் உள்ள முக்கியக் கருத்துக்களை உங்கள் மூளையில் இருந்து நினைவுபடுத்த முயற்சி செய்வீர்களா?

3. நீங்கள் தேர்வுக்காகத் தயாராகும் போது கடைசி நேரத்தில் உட்கார்ந்து ஒரே மூச்சாகப் படிக்காமல், தினமும் கொஞ்சம் கொஞ்சமாகப் பாடங்களைப் படிப்பீர்களா?

4. நீங்கள் தினமும் அரைமணி நேரம் படித்தாலும் முழு கவனத்துடன் பாடத்தைப் படிப்பீர்களா? கவனத்திற்கு இடையூறு செய்யும் விஷயங்களைத் தவிர்ப்பீர்களா?

5. நீங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து படிக்காமல் வெவ்வேறு இடத்தில் அமர்ந்து படிப்பீர்களா?

6. நீங்கள் உங்கள் பாடத்தை ஆழ்ந்து, புரிந்து படிப்பீர்களா? (தேர்வுக்கு என்று மட்டும் படிக்காமல் அந்தப் பாடத்தை உள் வாங்கி படிப்பீர்களா?) நீங்கள் படிக்கும் போது அதிகப்படியான அடிக்கோடு இடுவதைத் தவிர்ப்பீர்களா? எந்தப் பகுதி முக்கியமோ அதை மட்டும் சிறிய குறிப்புகளாக எடுத்துக்கொள்வீர்களா? குறிப்பு எடுத்தபின் அதைப் பார்க்காமல் அந்தப் பகுதியை நினைவுப்படுத்திப் பார்ப்பீர்களா?

7. நீங்கள் படிக்கும்போது அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு நீங்களே சொந்த மொழியில், சொந்த எடுத்துக்காட்டுடன் விடை அளிக்க முயற்சி செய்வீர்களா? அவ்வாறு செய்வதன் மூலம் அந்தப் பாடம் மூளை இணைப்பாக உருமாறி நம் நினைவில் என்றும் மறக்காமல் இருக்கும் அல்லவா? எப்போது நமக்கு விடை வேண்டுமனாலும் நம் மூளையில் எளிதாகத் தோன்றிவிடும்.

8. நீங்கள் படிக்கும்போது அடுத்தவர்களுக்கு சொல்லித்தருவீர்களா? அப்படிச் செய்தால் நீங்கள் படிப்பது உங்கள் மனதில் ஆழமாகப் பதியும் அல்லவா?

9. பாடத்தில் வரும் கேள்விகளுக்குப் புத்தகத்தை பார்க்காமல் நீங்களே விடை தேட முயற்சி செய்வீர்களா?

10. உங்களுக்குப் புரியாத பாடத்தை யாரிடமாவது கேட்டு தெளிவுப்படுத்திவிட்டுத் தானே பின் அடுத்த பகுதிக்கு நகர்வீர்கள்?
11. எளிதான பாடத்தையே படிக்காமல் கடினமான பகுதிகளை கவனத்துடன் நேரம் எடுத்துப் படிப்பீர்களா?

12. படிக்கும்போது இடையில் விலகி அந்தப் பாடம் சம்பந்தப்பட்ட வேறு பகுதியை படித்துவிட்டு மீண்டும் திரும்பி வந்து அதே பகுதியைத் தொடர்வீர்களா? அதாவது இடை விலகல் டெக்னிக்கை பயன்படுத்துவீர்களா?

13. அந்தப் பாடத்தின் மையக் கருத்துக்களை காட்சிப் படுத்தி புரிந்துக்கொள்வீர்களா? உவமைகளைக் கொண்டு எளிமையாக விளக்கிப் புரிந்துக்கொள்வீர்களா?

14. படிப்புக்கு இடையில் சிறிது இடைவெளி எடுப்பீர்களா? அப்படி எடுக்கும்போது நடனம், உடற்பயிற்சி உள்ளிட்ட உடல் சம்பந்தப்பட்ட வேலைகளில் ஈடுபடுவீர்களா? அதாவது தளர்வு நிலைச் செயல்பாடுகளில் ஈடுபடுவீர்களா?

மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நீங்கள் அதிகப்படியாக ‘ஆம்’ என்று பதிலளித்திருந்தால் நீங்கள் நன்றாகத் தேர்வுக்கு தயாராகியுள்ளீர்கள் என அர்த்தம். அதே சமயம் ‘இல்லை’ என்பது உங்களது பதிலாக இருந்தால், அடுத்தமுறை நீங்கள் தேர்வுக்குப் படிக்கும் முறையை மாற்ற வேண்டும் என்று அர்த்தம்.

சரி தேர்வுக்குத் தயாராவது எப்படி என்று பார்த்துவிட்டோம். இப்போது தேர்வு அறையில் உட்கார்ந்து எப்படித் தேர்வு எழுத வேண்டும்? எப்படி ஒரு கேள்விக்கு விடையளிக்க வேண்டும்? எந்தக் கேள்வியை முதலில் எழுத வேண்டும்? எதை இறுதியில் எழுத வேண்டும் என்று பார்ப்போம்.