கற்றல் எளிது -17

திரு.நன்மாறன் திருநாவுக்கரசு
நீங்கள் பள்ளியில் படிக்கும்போது வகுப்பில் ஆசிரியர் கேள்வி கேட்டால் என்ன செய்வீர்கள்? சில மாணவர்கள் உடனே கையைத் தூக்கிப் பதிலைக் கூறுவார்கள். நம்மில் பலருக்கு ஆசிரியர் கேட்ட கேள்வி என்ன என்று புரிவதற்கே சில நிமிடங்கள் எடுக்கும். ஒரு கேள்வியைக் கேட்டவுடனே சட்டென்று பதில் தோன்றும் மூளையை ‘ரேஸ் கார் மூளை’ என்று அழைப்பார்கள். அவ்வளவு விரைவாக அந்த மூளை விடையைக் கண்டுபிடித்துவிடும். ஆனால் பலருக்கு அந்தக் கேள்வியைப் புரிந்துக்கொள்ளவே நேரம் பிடிக்கும். அதாவது ஒரு தகவலை உடனே புரிந்துக்கொள்ள முடியாமல் இருக்கும் மூளையை மெதுவாகச் சிந்திக்கும் திறன் கொண்ட மூளை என நாம் அழைக்கலாம். ஆங்கிலத்தில் அதனை Hiker Brain என கூறுவார்கள். ஹைக்கர் என்றால் மலை ஏறுவது. வேகமாக மலை ஏற முடியாது அல்லவா?
இந்த மெதுவாகச் சிந்திக்கும் திறன் கொண்ட மூளையால் நன்றாக படிக்க முடியுமா? அவர்களுக்கு படிப்பு வராதா? என்று உங்களுக்குத் தோன்றலாம். ஏனென்றால் நம்மில் பெரும்பாலானோர் இந்த வகை மூளையை கொண்டவர்கள்தான். ஆனால் இந்த மூளையால் படிக்க முடியாது என்று நினைப்பது தவறு. உங்களாலும் சிறப்பாகச் சிந்திக்க முடியும். இன்னும் சொல்லப் போனால் ரேஸ் கார் மூளை கொண்டவர்கள் கூட சிறப்பாகக் கற்க முடியும். எப்படி? அதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம். மேலும் இந்தப் பகுதியில் கற்றலில் உள்ள வேறு சில ஆச்சரியங்களையும் சேர்த்து பார்க்கலாம்.
முதலில் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். இதுவரை நாம் கற்பது குறித்த ஒரு சில விஷயங்களை நம்பி வந்திருப்போம். அவற்றை எல்லாம் இப்போது பொய் என்று பார்க்கப்போகிறோம். உதாரணமாக வீடியோ கேம்களை எடுத்துக்கொள்வோம். பரீட்சையில் நாம் நன்றாக மார்க் வாங்கவில்லை என்றால் வீட்டில் என்ன சொல்வார்கள்? எப்போதும் வீடியோ கேம் விளையாடுவதால் மார்க் குறைந்துவிட்டது என்று கூறுவார்கள். அதில் பாதி உண்மை இருந்தாலும், முழு உண்மை கிடையாது. உண்மையில் வீடியோ கேம் விளையாடுவது நம் மூளைத் திறனை வளர்ப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?
வீடியோ கேம்கள்
எல்லா வீடியோ கேம்களும் இல்லாவிட்டாலும், சில வீடியோ கேம்கள் குழந்தைகளின் கற்றல் திறனை அதிகரிக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அவ்வளவு ஏன், சில வீடியோ கேம்கள் பெற்ேறார்களுக்குகூட நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறதாம்.
ஆக்சன் வீடியோ கேம்கள் நம் கவனத்தை அதிகரிக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. நாம் கவனம் சிதறுவதைத் தவிர்ப்பதற்கு நம் மூளைக்குப் பயிற்சி அளிக்கிறது. நாம் ஆக்ஷன் வீடியோ கேம்களை விளையாடும்போது நமது கவனத்தை அதிகரிக்கும் மூளையின் பகுதி விரிவடைகிறது. அதிகமாக வேலை செய்கிறது. இதனால் நமது கவனிக்கும் திறன் அதிகரிக்கிறது.
மேலும் ஆக்ஷன் வீடியோ கேம்களில் உங்கள் உற்றுநோக்கும் திறனும் அதிகரிக்கிறது. நீங்கள் மற்றவரை விட ஒரு விஷயத்தில் இருக்கும் நுண்ணிய அம்சங்களையும் கவனிப்பீர்கள். உதாரணமாக ஒரு புகைப்படத்தைப் பார்க்கிறீர்கள் என்றால் அந்த புகைப்படத்தில் இருக்கும் சிறிய சிறிய நுட்பங்கள்கூட உங்கள் கண்களுக்குப் புலப்படும்.
இதேபோல புதிர்கள் நிறைந்த நமது மன ஆற்றலை அதிகரிக்கும். அதாவது நாம் மனதிற்குள்ளேயே பல விஷயங்களைச் சிந்தித்து ஆராய உதவும். உதாரணமாக கணக்கு, அறிவியல் போன்ற பாடங்களை நாம் மனதில்தான் யூகித்து ஆராய வேண்டியது இருக்கும் அல்லவா? அதுபோன்ற மனதிலேயே கணித்து, ஆராய்தல் போன்றவைக்கு Spatial வீடியோ கேம்கள் பயன்படும்.
சரி, இதனால் எல்லா வீடியோ கேம்களும் பயன் தருமா என்றால் கிடையாது. உதாரணமாக இன்று நாம் மொபைலில் விளையாடும் கேஸ்டில் கிரஷ் போன்ற விளையாட்டுகளால் பயனில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அந்த விளையாட்டுகள் நமது கவனக் கட்டுப்பாட்டை சீர்குலைக்கும் என கூறுகின்றனர். நீங்கள் உண்மையில் உங்கள் கவனத்தை அதிகரிக்க வேண்டும், உங்கள் மனசிந்தனையை அதிகரிக்க வேண்டும் என்றால் அது சார்ந்த விளையாட்டுகளை விளையாடுவது தான் சிறந்தது.
அதே சமயம் வீடியோ கேம்களால் சில பிரச்சனைகளும் இருக்கிறது. வீடியோ கேம்கள் நம்மை அடிமையாக்குபவை. எதுவும் அளவுக்கு மீறினால் ஆபத்து தான். குறிப்பாக இன்றைக்கு வீடியோ கேம்கள் டிவியில் இருந்து மொபைல் திரையில் விளையாடக்கூடியதாக இருப்பது பெரும் அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதும் உண்மை. தினசரி அரை மணி நேரம் ஒதுக்கி விளையாடுவதே நமக்குப் பயனளிக்கும். அதேபோல் வீடியோ கேம் விளையாடிவிட்டு பின் சிறிது உடற்பயிற்சி, ஓய்வு எடுத்துக்கொள்வது நம் மூளை சிறப்பாக செயலாற்ற உதவும். அதனால் நாம் எதையும் விழிப்பான நிலையில் பகுத்து ஆராய்ந்து கற்பதே சிறப்பாகும்.
வீடியோ கேம்கள் பெரியவர்களுக்கும் பயனுள்ளது என்று மேலே பார்த்தோம் இல்லையா? ஆம். பெரியவர்களுக்கும், வயதானவர்களுக்கும் கூட ஆக்ஷன் வீடியோ கேம்கள் கவனத்திறனை அதிகரிப்பதாக கூறுகின்றனர். சில ஆக்ஷன் வீடியோ கேம்கள் அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களால் (Federal Drug administration) சிகிச்சைக்கும் பயன்படுத்தப்படுகிறது. வயதானவர்களுக்கு நினைவு சக்தியை அதிகரித்து, அவர்களுக்கு சிந்திக்கும் ஆற்றலை அதிகரிப்பதற்காக வீடியோ கேம்கள் பயன்படுகின்றன.
அனைத்தையும் கற்க
நீங்கள் ஒரு விஷயத்தில் (அல்லது ஒரு பாடத்தில்) மிகவும் சிறந்து விளங்க பிற விஷயங்களைக் கற்பது அவசியம் என ஆய்வுகள் கூறுகின்றன. நமக்கு ஒரு விஷயத்தில் ஆர்வம் அதிகம் இருக்கலாம். உதாரணமாக உங்களுக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருக்கலாம். நீங்கள் சிறந்த ஓவியராக என்ன செய்ய வேண்டும்? ஓவியத்தைத் தவிர வேறு விஷயங்களையும் கற்க வேண்டும். நடனம் ஆடுவது, பிற மொழி பேசப் பயில்வது, இசைக் கருவி கற்பது ஆகியவையும் உங்களை சிறந்த ஓவியனாக்கும். ஓவியனாவதற்கு ஓவியத்திறன் மட்டுமே வேண்டும் என்பது கிடையாது.
எப்படி?
நாம் தொடர்ந்து ஒரே விஷயத்திலேயே ஈடுபடும்போது அல்லது ஒரே மாதிரியான விஷயத்தையே சிந்திக்கும்போது, நம் மூளை ‘Rut thinking’ எனப்படும் சிந்தனையில் சிக்கிக்கொள்கிறது. அதாவது ஒரே விதத்திலேயே சிந்தித்து சிந்தித்துப் பழகி விடுகிறது. நம் மூளையின் குறிப்பிட்ட பகுதி மட்டுமே வேலை செய்கிறது. அதனால் அவற்றால் மாற்றிச் சிந்திக்க முடியாது. இதனால் நம் சிந்தனை நெகிழ்வுத் தன்மையுடன் இல்லாமல் ஒரே மாதிரியாக அமைந்துவிடுகிறது. அதனால் நம்மால் புதிய கோணத்தில் புதிய பார்வையில் சிந்திக்க முடியாது. ஆனால் நாம் வேறு கலைகளைப் பயிலும் போது நம் மூளையின் வேறு பகுதிகள் வேலை செய்யத் தொடங்குகின்றன. இதனால் நம் மூளை வழக்கமாகச் சிந்திக்கும் முறையில் இருந்து மாறிச் சிந்திக்கிறது. நம் சிந்தனையில் புதிய கோணமும் கிடைக்கிறது. இந்தப் புதிய பார்வை நாம் ஏற்கனவே செய்து வரும் வேலைகளைச் சிறப்பான முறையில் செய்ய உதவுகிறது.
இப்படிப் பாருங்கள். நீங்கள் மற்றவரை விட சிறந்த புகைப்படக் கலைஞராக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அதனால் தொடர்ந்து கேமராவை வைத்துப் புகைப்படங்களை எடுத்துக்கொண்டே இருக்கிறீர்கள். இதனால் மட்டும் நீங்கள் சிறந்த புகைப்படக் கலைஞர் ஆகிவிட முடியுமா? முடியாது. உங்களைப் போலவே புகைப்படக் கலைஞர் ஆக வேண்டும் என்று விரும்புபவர்களும் தொடர்ந்து நீங்கள் செய்வதையேதான் செய்வார்கள். பிறகு எப்படி உங்களால் அவர்களை விடச் சிறப்பானவராக ஆக முடியும். தனித்து இயங்க முடியும்? நாம் கேமராவை இயக்குவதைத் தவிர வேறு ஒன்றைப் பயில்வது மூலமாகத்தான்.
சிறந்த புகைப்படக் கலைஞர்களை எடுத்துப் பார்த்தோமானால் அவர்கள் கேமராவை மட்டும் இயக்க கற்றுக்கொள்வதில்லை. அவர்கள் இலக்கியம் கற்றுக்கொள்கிறார்கள். இசை கற்றுக்கொள்கிறார்கள். இவற்றுக்கும் புகைப்படங்களிற்கும் நேரடித் தொடர்பு இல்லை. ஆனால் இசை, இலக்கியத்தில் அவர்கள் பெறும் அறிவு சிறந்த புகைப்படங்களை எடுக்க உதவுகிறது. நீங்கள் எதைப் பயின்றாலும் உங்கள் மூளை அதன் மூலம் கிடைக்கும் ஐடியாவை எடுத்து உங்களுக்குப் பிடித்த விஷயத்தில் சிறப்பாகச் செயல்படுத்துவதற்குப் பயன்படுத்தும்.
மூளையின் இந்தச் செயல்முறையைப் பரிமாற்றம் (Transfer) என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நாம் மூளையின் ஒரு பகுதியில் உருவாக்கும் மூளை இணைப்புகள், பிற பகுதிகளில் மூளை இணைப்புகள் எளிதாக உருவாகவும் உதவி புரியும். நாம் கிரிக்கெட் ஆடக் கற்றுக்கொள்ளும்போது உருவாகும் மூளை இணைப்பு, நாம் அறிவியல் பாடம் படிக்கும்போது மூளை இணைப்பு வேகமாக உருவாக உதவும். இயற்பியல் பாடம் நமக்கு பொருளாதாரம் பாடம் படிக்க உதவும். நாம் கவிதை எழுதுவது வேறு ஒரு பாடத்தில் சிறந்து விளங்க உதவும். ஒரு பாடத்தில் அல்லது ஒரு செயல்பாட்டில் உள்ள ஐடியாவை பிற இடங்களில் பயன்படுத்துவது நம் சிந்தனைத் திறனையும், படைப்புத்திறனையும் அதிகரிக்கும். அதனால் எனக்குத் தெரிந்த விஷயத்தில், பிடித்த விஷயத்தில் மட்டும்தான் நான் கவனம் செலுத்துவேன் என்று கறாராக இல்லாமல் அனைத்தையும் கற்று உயருங்கள்.
மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.