
முயற்சி தரும் முன்னேற்றம்! – 6
– டாக்டர் மெ.ஞானசேகர்
அந்தச் சிறுவனுக்கு ஏழு வயது நடந்த போது தனது வயதையொத்த சில நண்பர்கள் பள்ளிக்கு வராமல் தெருவோரங்களில் வேலை செய்து வருவதைக் கண்டான். அவர்களிடம் பேசிய போது தங்கள் குடும்ப வறுமை காரணமாக வேலைக்குச் செல்வதாகக் கூறினார்கள்.
ஜோஸ் அடோல்போ என்ற அந்தச் சிறுவனுக்கு மனதில் ஒரு வருத்தம். ஏதாவது பண உதவி செய்து தன் நண்பர்களுக்கு உதவ வேண்டுமே என்று சிந்தித்துக் கொண்டேயிருந்தான். வழக்கமாக ஏழு வயதுச் சிறுவர்கள், சிறுமிகள் என்ன யோசிப்பார்கள்! எத்தகைய பொம்மைகளை வாங்கி விளையாடலாம், சித்திர நாடகங்களைத் தொலைக்காட்சியில் பார்க்கலாம், பெற்றோருடன் சென்று ஊர்சுற்றி வரலாம் என்று தான் சிந்திப்பார்கள், செயல்படுவார்கள்.
ஆனால் இந்தச் சிறுவனுக்குப் புதுமையான ஒரு சிந்தனை உதித்தது. தெருவில் ஆங்காங்கே குப்பையில் வீசப்படும் பாட்டில்கள், பேப்பர் துண்டுகள், பிளாஸ்டிக் பொருட்கள் இவனது கண்களை உறுத்தின. இவற்றை ஏன் தெருவில் வீணாகக் குப்பையில் போடுகின்றார்கள்? இவற்றை முறைப்படிச் சேமித்து, மறுசுழற்சி செய்தால் பணமும் கிடைக்கும்; சூழலுக்கும் நல்லது அல்லவா? என்று சிந்திக்கத் தொடங்கினான். சிந்தனை வலுப்பெற்றது. அதனை ஒரு ெசயல்திட்டமாக ஆக்கிட அவன் விளைந்தான். தனது ஆர்வத்தை முதலில் தன் பெற்றோர்களிடம் பகிர்ந்து கொண்டான்.
ஏழு வயதுச் சிறுவனுக்கு உதித்த எண்ணங்களை அவன் விவரிப்பதிலிருந்து நாம் இப்போது காணலாம். “எனது நண்பர்களுக்கு உதவி செய்ய நானும் வேலைக்குச் சென்று பணம் சம்பாதிக்கலாம் என்று எண்ணினேன். ஏனென்றால் நானும் ஒரு குழந்தையாக இந்த உலகை மாற்ற வேண்டும் என்று விரும்பினேன். இந்தச் சூழலில் வீணாகும் குப்பைகள் என் மனதை வதைத்தன. எனவே இவற்றை ஒன்றுசேர்த்துப் பயன்படுத்தும் வழிகளைப் பற்றி யோசித்துப் பார்த்தேன்.
அப்போது மாணவர்களுக்கான ஒரு வங்கியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. பெரு நாட்டில் மக்கள் அனுபவிக்கும் பிரச்சினை என்னவென்றால் நிறையக் குப்பைக் கழிவுகளைத் தெருவில் வீசிவிடுகின்றார்கள். இதனால் சுகாதாரச் சீர்கேடும், சுற்றுச்சூழல் பாதிப்பும் உருவாகின்றது. எனவே எனது பள்ளியில் அனுமதி பெற்று ஒரு மேஜையில் ஒரு நோட்டுப் புத்தகத்துடன் ஒரு சேமிப்பு வங்கியை நான் எனது பள்ளியில் ஆரம்பித்தேன்.
அதாவது மாணவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வீணாக்கப்படும் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள். தேவையற்ற நோட்டுப் புத்தகங்கள், காகிதப் பொருட்கள், அட்டைப் பெட்டிகள் போன்ற திண்மக் கழிவுகளைச் சேகரித்துக் கொண்டுவர ஆலோசனை தந்தோம். அதன்படி பல மாணவர்கள் ஒரு வாரம், இரண்டு வாரம் மேற்கண்ட பொருட்களைச் சேகரித்துப் பள்ளிக்குக் கொண்டு வந்தார்கள். அந்தப் பொருட்களுக்குப் பதிலாக அவர்களுக்குப் பணம் தரப்பட்டது. அல்லது மாணவர்களுக்கென்று தொடங்கப்பட்ட சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் மிகுந்த திட்டமிடல் இல்லை. மாறாக, மாணவர்களிடம் பெறப்படும் திண்மக் கழிவுகள் ஒரு இடத்தில் சேமிக்கப்பட்டது. வழக்கமாக நாம் வங்கிகளுக்குச் சென்று பணம் போடுவோம்; அல்லது எடுத்து வருவோம். ஆனால் நாங்கள் தொடங்கிய வங்கிக்கு வருவது எல்லாம் திண்மக் கழிவுகள் தான். இந்தத் திண்மக் கழிவுகளை நாங்கள் பள்ளியில் பெறவில்லை என்றால் அவை குப்பைத் தொட்டிக்குச் செல்லும். அங்கே மற்ற குப்பைகளோடு சேர்ந்து கெட்டுப் போகும்; அல்லது பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிடும். இந்தப் பொருள் விரயத்தைத் தவிர்ப்பது எங்கள் வங்கியின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
எனவே, பழைய பொருட்களை வாங்கும் சில நிறுவனங்களுடன் பேசி ஒப்பந்தம் செய்து கொண்டோம். அதன்படி வழக்கமாகப் பழைய ெபாருட்களை வாங்கும் போது அவர்கள் கொடுக்கும் பணத்தைவிட சற்றுக் கூடுதலாகத் தரவேண்டும் என்பதே அந்த வேண்டுதல்.
அவர்களும் இதை ஏற்றுக்கொண்டார்கள். காரணம் ஒரே இடத்தில் அதாவது பள்ளியில் நிறையப் பொருட்கள் கிடைக்கின்றது. மேலும் சமுதாயத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவுவதோடு, மாணவர்களின் சேமிப்புப் பழக்கத்தை இது ஊக்கமூட்டுவதாகவும் உள்ளது என்பதைப் புரிந்துகொண்டே உதவினார்கள்.
இப்படி ஆரம்பிக்கப்பட்ட போது மாணவர்களிடமும், பள்ளி நிர்வாகத்திடமும் நல்ல வரவேற்புக் கிடைத்தது. மாணவர்கள் உள்ளத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியதுடன், சேமிப்பின் மூலம் அவர்களுக்குப் பணம் கிடைத்தால், பொறுப்புணர்வு மிக்கவர்களாக மாணவர்கள் மாறுவதும் கண்டறியப்பட்டது” என்று பகிர்ந்துள்ளார் ஜோஸ் அடோல்போ.
‘Bartselana Student Bank’ என்ற வங்கியைத் தொடங்கினார் ஜோஸ் அடோல்போ. சுருக்கமாக, ‘BES’ வங்கி என்று பெயரிடப்பட்டது. அந்த வங்கியில் வாடிக்கையாளர்களாக 6600 பேர் வரை கடந்த ஆண்டு வரை சேர்ந்துள்ளார்கள். இதன்மூலம் பலநூறு டன்கள் திண்மக் கழிவுகளை இவர்கள் பெற்று மறுசுழற்சிக்கு அனுப்பியிருக்கின்றார்கள். இதன்மூலம் முந்நூறு மரங்களிடமிருந்து பெற வேண்டிய காகிதங்களைப் பெற்றுள்ளார்கள். அதாவது முந்நூறு மரங்களை அழிக்காமல், அந்த எண்ணிக்கையிலிருந்து பெறக்கூடிய காகிதங்களை மறுசுழற்சி மூலம் பெற்றுள்ளார்கள்.
“நாம் எல்லோரும் ஒரே சமுதாயத்தில் வாழ்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும், நல்ல சூழலையும் ெகாடுக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இதைத்தான் நான் எனது கூட்டுறவு வங்கி மூலம் செய்து வருகின்றேன்” என்கிறார், தற்போது 21 – வயது நிரம்பியுள்ள ஜோஸ் அடோல்போ.